Published:Updated:

`கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கு’ - விடை தெரியாத கேள்விகள்..!

ராமஜெயம் கொலை வழக்கு

‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்கிற பழமொழி ராமஜெயம் விவகாரத்தில் நடத்திருக்கிறது. `கொலையாளியின் விசிட்டிங் கார்டு ஏதாவது சிக்கியதா?’ என்று கொலை நடந்த ஸ்பாட்டில் போலீஸார் பேசும் வழக்கமான டயலாக். விசிட்டிங் கார்டு என்றால்...

`கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கு’ - விடை தெரியாத கேள்விகள்..!

‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்கிற பழமொழி ராமஜெயம் விவகாரத்தில் நடத்திருக்கிறது. `கொலையாளியின் விசிட்டிங் கார்டு ஏதாவது சிக்கியதா?’ என்று கொலை நடந்த ஸ்பாட்டில் போலீஸார் பேசும் வழக்கமான டயலாக். விசிட்டிங் கார்டு என்றால்...

Published:Updated:
ராமஜெயம் கொலை வழக்கு

அமைச்சர் கே.என்.நேருவின் பாசத்துக்குரிய தம்பி ராமஜெயம் 29.3.2012-ல் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. தி.மு.க-வின் திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்தவர் கே.என்.நேரு. சம்பவத்தன்று காலை நேரத்தில் திருச்சி புறநகர் பகுதியில் காவிரி ஆற்றின் வட கரையில் ராமஜெயத்தின் கை கால்கள் இரும்புக்கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இவரின் அரசியல் செயல்பாடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் அப்போது இருந்தன. நிறைய எதிரிகளையும் சம்பாதித்துவைத்திருந்தார். இருந்தும், யார் ராமஜெயத்தைக் கொன்றது என்பதை ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆரம்பத்தில், திருச்சி மாநகர கமிஷனராக இருந்த சைலேஷ்குமார் விசாரித்தார். சில மாதங்களில், சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு விசாரணை மாற்றப்பட்டது. டி.எஸ்.பி-யான மலைச்சாமி விசாரித்தார். இவர் எடுத்துக்கொண்டது ஆறு வருடங்கள். அதன் பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி, சி.பி.ஐ வசம் வழக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ அதிகாரிகள் ரகு, ரவி ஆகியோர் கொண்ட டீம் தற்போது வரை விசாரித்துவருகிறது. ஆனால், கொலையைக் குறித்து எந்தத் துப்பும் கிடைக்கவிலலை. இதுவரை யாரையும் சி.பி.ஐ பிடிக்கவில்லை. விசாரணை லெவலிலேயே இருக்கிறது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அமைச்சராக கே.என்.நேரு பதவி ஏற்றார். ராமஜெயம் கொலை விவகாரத்தில் நடந்த அனைத்து தகிடுதத்தங்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றாகத் தெரியும். சி.பி.ஐ விசாரித்தும் துப்புக் கிடைக்காததால், இந்த விவகாரத்தில், அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்றும் ராமஜெயம் குடும்பத்தினர் தீவிர சட்ட ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள். மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, `நீதிமன்ற உத்தரவின்படி இந்தக் கொலை விவகாரத்தை விசாரிக்கும் முழு பொறுப்பும் தற்போது சி.பி.ஐ வசம் உள்ளது. இனி, தமிழக சி.பி.சி.ஐ.டி இணைந்து விசாரிக்க வேண்டும். அல்லது சி.பி.சி.ஐ.டி வசமே முழுமையாக ஒப்படைக்க வேண்டும்’ என்கிற கோரிக்கையை முன்வைக்கவிருக்கிறார்கள். அப்படி ஒருவேளை சி.பி.சி.ஐ.டி-யே விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால், முதல்வர் மு.க.ஸ்டாலின் வசமுள்ள போலீஸ்துறை சார்பில் ஸ்பெஷல் டீமை அமைத்து, ராமஜெயம் கொலை வழக்கை விசாரிப்பார்கள் என்று ராமஜெயம் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்கிற பழமொழி ராமஜெயம் விவகாரத்தில் நடத்திருக்கிறது. `கொலையாளியின் விசிட்டிங் கார்டு ஏதாவது சிக்கியதா?’ என்று கொலை நடந்த ஸ்பாட்டில் போலீஸார் பேசும் வழக்கமான டயலாக். விசிட்டிங் கார்டு என்றால் கொலை நடந்த இடத்திலோ, சடலம் கிடக்கும் இடத்திலோ கொலைகாரர்கள் ஏதாவது தடயங்களை விட்டுப்போவார்கள். அதைக் கண்டறியும் பொருட்டு, கொலை பற்றிய தகவல் தெரிந்து முதலில் வந்ததும், அந்தச்சுற்று வட்டாரம் முழுக்க கயிறு கட்டி யாரையும் உள்ளே விட மாட்டார்கள்.

அடுத்து தடயவியல் நிபுணர்கள் வருவார்கள். சடலம் கிடந்த இடத்தைச் சுற்றிலும் அங்குலம் அங்குலமாகத் தேடுவார்கள். மோப்ப நாய் வரும்... இந்த மாதிரியான போலீஸ் சம்பிரதாயங்கள் ராமஜெயம் கொலைச் சம்பவம் 29.3.2012 அன்று காலையில் முறையாகக் கடைபிடிக்கப்பட்டனவா என்கிற சந்தேகம் ராமஜெயம் குடும்பத்தினருக்கு ஆரம்பத்திலேயே ஏற்பட்டது. ’கோல்டன் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படும், சடலத்தை முதலில் பார்த்த நேரம் முதல் அடுத்த சில மணி நேரங்களில் வழக்கமான சைபர், போன் டவர் செக்கிங், அறிவியல்பூர்வமான அணுகுமுறை போன்ற சில டெக்னிக்குகளை போலீஸார் மின்னல் வேகத்தில் பயன்படுத்தவில்லை. அவ்வாறு செய்திருந்தால், ராமஜெயத்தைக் கொன்ற கொலையாளியை போலீஸார் நெருங்கியிருக்கலாம் என்கிறார்கள்.

ராமஜெயம்
ராமஜெயம்

போலீஸாரின் வழக்கமான இந்தச் சம்பிரதாயங்களைக் கோட்டைவிட்ட பிறகு, உலகத்திலேயே மிக சிறந்த துப்பறியும் ஸ்காட்லாந்து போலீஸார் வந்தால்கூட கொலையாளியைக் கண்டுபிடிப்பது சிரமம். சி.பி.ஐ-யின் அதிகாரிகளும் இதே காரணத்தால்தான் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பிப்போய் நிற்கிறார்கள். ராமஜெயம் குடும்பத்தினர், கொலைக்குப் பிறகு தடயங்களை அழிக்கும் வகையில் நடந்த சில நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறார்கள்.

விடை தெரியாத கேள்விகள்?

1. ராமஜெயத்தின் மகனும் வேறு சிலரும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து புகார் கொடுக்கப்போயிருக்கிறார்கள். அப்போது கமிஷனர் அறையில் மாநகரத்தைச் சேர்ந்த அனைத்து போலீஸ் அதிகாரிகளும் கலந்துகொண்ட க்ரைம் மீட்டிங் ஒன்று நடந்துகொண்டிருந்ததாம். இவர்கள் வந்த விஷயம் தெரிந்த பிறகும், ‘ஒ... அப்படியா?’ என்று கேட்டபடி சர்வ சாதரணமாக நடமாடினார்களாம். அதேநேரம், புறநகர்ப் பகுதியில் சடலம் ஒன்றை கண்டெடுத்திருக்கிறார்கள். இந்தத் தகவலும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை எட்டியதாம். `லோக்கல் வி.ஐ.பி ஒருவர் காணாமல்போயிருக்கிறார்... சடலம் கிடைத்திருக்கிறதே?’ என்கிற என்கிற பரபரப்பு ஏதும் இல்லாமல் மீட்டிங்கிலேயே மூழ்கியிருந்தார்களாம். மீட்டிங்கில் இருந்தவர்கள் துரிதகதியில் நடவடிக்கையில் இறங்கியிருந்தால், கொலை நடந்த இடத்திலிருந்து கொலையாளிகள் வெகுதூரம் சென்றிருக்க முடியாது என்கின்றனர் ராமஜெயம் குடும்பத்தினர்.

2. ராமஜெயத்தின் உடலை காவிரி ஆற்றின் வடகரையில் வீசிவிட்டுப் போயிருக்கிறார்கள். உடல் கிடந்த இடத்துக்கும் ராமஜெயத்தின் வீட்டிக்கும் இடையே 5 கி.மீ தூரம் இருக்கும். இந்த இடைப்பட்ட தூரத்தில் ஏதோ ஒரு வீட்டில் வைத்துத்தான் ராமஜெயத்தைப் படுகொலை செய்திருக்கிறார்கள். அது எங்கே என்று இதுவரை சி.பி.ஐ அதிகாரிகளால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் குடும்பத்தினரின் சந்தேகங்களில் ஒன்று.

உடல் கிடந்த விஷயத்தை ஊரார் மூலம் கேள்விப்பட்டு, முதலில் சென்றவர் ஒரு போலீஸ்காரர். அவர்தான், உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அந்த நேரம் முதல் இரண்டு மணி நேரம் சடலம் அங்கேயே கிடந்திருக்கிறது. போலீஸ் பாதுகாப்போ, யாரையும் அருகில் போகவிடாமல் தடுக்கும் தடுப்புகளோ போடப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3. அதிகாலை வீட்டிலிருந்து கிளம்பி, கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு வரை ராமஜெயம் வாக்கிங் போயிருக்கிறார். வழியில், அவர் பாக்கெட்டிலிருந்த பழைய ரயில் டிக்கெட், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் விசிட்டிங் கார்டு, வேறு சில பொருள்கள் இறைந்து கிடந்தன. அவற்றை போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். அந்த நேரத்தில், அந்தப் பகுதியில் கரன்ட் கட். ரயில்வே ஸ்டேஷனில் கூட்ஸ் ரயில் ஒன்று பெரும் சத்தத்துடன் நின்றதாம். மாருதி ஆம்னி வேன் ஒன்று அந்த நேரத்தில், அந்த ரோட்டில் அதிவேகமாக வந்துவிட்டு, திரும்பிச் சென்றது சி.சி.டி.வி-யில் பதிவாகியிருந்ததாம். இதை கே.என்.நேருவிடம் அப்போதைய போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் போட்டுக்காட்டினாராம். பிறகு, விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகளிடம் நேருவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மாருதி ஆம்னி வேன் பற்றிக் கேட்டபோது, அது பற்றி லோக்கல் போலீஸார் சொல்லவேயில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஏன் சொல்லவில்லை?

4. ராமஜெயத்தின் செல்போனை கொலையாளிகள் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த போனிலிருந்து `நேரு இருக்கிறாரா?’ என்று விசாரிக்கிறார்கள். ராமஜெயத்தின் மனைவிதான் கணவரின் போனை எடுத்துப் பேசியவர். `வாங்கிங் போனவரைக் காணோம். அவரின் போனிலிருந்து யாரோ பேசுகிறார்கள்... அவருக்கு ஏதாவது நடந்திருக்குமோ?’ என்று பதறினாராம். கொலையாளி வசமுள்ள அந்த போன் விவரங்கள் இன்றுவரை தெரியவில்லை.

5. தமிழகத்தின் பிரபல என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஒருவர் ராமஜெயம் கொலையான நாளன்று திருச்சியில் இருந்ததை கே.என்.நேருவின் உறவினர்கள் பார்த்தார்களாம். அவர் ஏன் வந்தார் என்பது தெரியவில்லை.

ராமஜெயம்
ராமஜெயம்


தொடர்ந்து பேசிய ராமஜெயம் குடும்பத்து பிரமுகர் ஒருவர் கூறுகிறார்...

``இரண்டுவித போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுகள் போலீஸ் வசம் உள்ளதாகக் கேள்விப்பட்டோம். முதலாவது ரிப்போர்ட்டில், அதிகாலை நேரத்தில் உயிர் பிரிந்திருக்கலாம் என்றும், அடுத்த ரிப்போர்ட்டில் நள்ளிரவு உயிர் பிரிந்திருக்கலாம் என்றும் இருப்பதாக வந்த தகவல்கள் எங்களை குழப்பின. அதிகாலையில் வாக்கிங் போவதாகச் சொல்லித்தான் ராமஜெயம் கிளம்பிப்போனார். இதை வீட்டிலிருந்த அவரின் மனைவி, வாட்ச்மேன் உள்ளிட்ட சிலர் பார்த்திருக்கிறார்கள். அவர் நடந்து சென்றதைப் பார்த்த வேறு சில சாட்சிகளும் உண்டு. ஆனால், முதல்நாள் இரவே ராமஜெயம் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய்விட்டதாக போலீஸ் புதிய தியரியைச் சொன்னது.

கொலை தொடர்பான தடங்களைச் சேகரிப்பதில் ஏனோ போதிய கவனம் செலுத்தவில்லை. ராமஜெயம் பற்றி அவதூறுகளை போலீஸ் தரப்பினர் பரப்பிவிட்டனர். அவரின் குடும்பத்தினர்மீது கொலைப்பழி சுமத்தப் பார்த்தனர். ஆனால், ஒருசில நேர்மையான அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அதைக் கைவிட்டனர். அந்த நேரத்தில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளின் லிஸ்ட்டுகளை எடுத்து `முறைப்படி’ போலீஸ் அதிகாரி யாராவது இப்போது விசாரித்தாலே, பல மர்மங்கள் விலகும்'' என்கிறார்கள். மேலும், கொலையாளியைப் பிடிக்க உதவ ராமஜெயம் குடும்பத்தினர் ரெடியாகவே இருக்கிறார்களாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism