Election bannerElection banner
Published:Updated:

25 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு; மாஜிஸ்திரேட் முன்னிலையில் கொலை செய்த பா.ஜ.க பிரமுகர்! - நடந்தது என்ன?

எம்.எல்.ஏ சுரேந்திர சிங்
எம்.எல்.ஏ சுரேந்திர சிங் ( Twitter/ANI )

உ.பி: பொது இடத்தில், மாஜிஸ்திரேட், வட்டாட்சியர், காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு முன்பாகவே துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களாகவே உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதத்தின் ஒரே வாரத்தில் இரண்டு தலித் சமூகப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உத்தரப் பிரதேசம், குற்றப் பிரதேசமாகவும் ரத்தப் பிரதேசமாகவும் மாறி வருகிறது என்ற குற்றச்சாடுகள் நாடு முழுவதுமே எழுந்தன. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் யோகி ஆதித்யநாத் அரசைக் கடுமையாக விமர்சித்தனர். இந்தநிலையில், நேற்று மீண்டும் ஒரு குற்றச் சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது. பொதுவெளியில், அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தீரேந்திர சிங் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஜெய்பிரகாஷ் பால் என்ற இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸ்..!
ஹத்ராஸ்..!
உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா (Ballia) மாவட்டத்தில் அமைந்துள்ள துர்ஜான்பூர் (Durjanpur) கிராமத்தில், நேற்று, ரேஷன் கடை எங்கு அமைக்கலாம் என்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. காவல் அதிகாரிகள், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட், வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், `கடை எங்கே அமைப்பது' என்பதில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பின்னர் வாக்குவாதம் தீவிரமடைந்த போது, தீரேந்திர சிங் (Dheerendra Singh) என்பவர் திடீரென துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்கியுள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஜெய்பிரகாஷ் பால் என்கிற இளைஞர் உயிரிழந்துள்ளார். ஓட்டம் பிடித்த பொதுமக்களில் பலரும் காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

murder
murder

துப்பாக்கிச்சூடு நடத்திய தீரேந்திர சிங், பைரியா (Bairia) தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங்கின் (Surendra Singh) உதவியாளர் என்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் செய்திகள் வெளியாயின. துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார் தீரேந்திர சிங். அங்கிருந்த காவல்துறையினர் யாரும் தீரேந்திர சிங் துப்பாக்கிச்சூடு நடத்திய போது அவரைத் தடுக்கவோ அங்கிருந்து தப்பிச் செல்லும் போது அவரைப் பிடிக்கவோ முயற்சி செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தீரேந்திர சிங் சுமார் 25 ரவுண்ட் தனது துப்பாக்கியால் சுட்டதாகச் சம்பவ இடத்திலிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மாஜிஸ்ட்திரேட், வட்டாச்சியர், காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்திலிருந்த சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள தீரேந்திர சிங்கை வலைவீசித் தேடி வருகிறது காவல்துறை. உயிரிழந்த ஜெய்பிரகாஷ் பாலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் 15-20 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகப் பல்லியா மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார். ஜெய்பிரகாஷ் பால், அங்கு நடந்த வாக்குவாதம் காரணமாகத்தான் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அங்கிருந்த அதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்களா என்கிற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை அதிகாரிகள் இந்தச் சம்பவத்துக்குத் துணை போயிருந்தால் அவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி (Awanish Kumar Awasthi) தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங்கின் உதவியாளர்தான் துப்பாக்கிச்சூடு நடத்திய தீரேந்திர சிங் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், ``அவர் எனக்கு நெருக்கமானவர் என்பதை எப்படி மறுக்க முடியும்? எனக்கு மட்டுமல்ல அவர் பா.ஜ.க-வுக்கே நெருக்கமானவர். பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கும் அனைவரும் எங்களுக்கு நெருக்கமானவர்கள்தான்'' என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ சுரேந்திர சிங்.

எம்.எல்.ஏ சுரேந்திர சிங்
எம்.எல்.ஏ சுரேந்திர சிங்
Twitter/ANI
தனிஷ்க் ஜுவல்லரி: `டைட்டன்' மேலாளருக்கு மிரட்டல்; `லவ் ஜிகாத்' ஆதரவு - விளம்பரம் நீக்கப்பட்டது ஏன்?

தற்காப்புக்காகத்தான் தீரேந்திர சிங் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ சுரேந்திர சிங், ``ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க வேண்டாமென பல்லியா மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட விரும்புகிறேன். தீரேந்திர சிங் துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருந்திருந்தால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டிருப்பார்கள். என்ன நடந்திருக்கிறதோ, அது நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டிய விஷயம்தான், ஆனால் அது ஒருதலைபட்சமான நடவடிக்கையாக இருக்கக்கூடாது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரைத் தண்டிக்க வேண்டும். அதேநேரத்தில், கம்பிகளாலும் கட்டைகளாலும் தாக்கியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ள 6 பெண்கள் குறித்து யாரும் பேசியதாகத் தெரியவில்லை. தற்காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல்தான் தீரேந்திர சிங் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்'' என்று கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

இதையடுத்து இந்தச் சம்பவத்துக்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. ``பல்லியா மாவட்டத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கை மீறிய ஒரு கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பா.ஜ.க பிரமுகர் ஒருவர் ஜெய்பிரகாஷ் பால் என்கிற இளைஞரை மாவட்ட அதிகாரிகள் முன்பே சுட்டுக் கொன்றுள்ளார். சுட்டுக் கொன்ற பின் காவல்துறையினர் முன்பாக அவர் தப்பிச் சென்றுள்ளார்'' என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுனில் சிங், ``உ.பி அரசே கிரிமினல்களால் நடத்தப்படுகிறது. இதற்கு இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவமே சாட்சி!'' என்று கூறியுள்ளார். மேலும்,

பா.ஜ.க குண்டர்கள் மாவட்ட அதிகாரிகள் முன்பே கொலை செய்யத் தொடங்கிவிட்டனர். கொலை செய்துவிட்டு அவரால் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முடிகிறது. இதை ராம ராஜ்ஜியம் என்பீர்களா யோகி ஜி?... ராவண ராஜ்ஜியமே உங்கள் ஆட்சியைவிட 100 மடங்கு சிறந்தது. நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு உங்களுக்குத் தெரிந்த மிகப் பெரிய குற்றவாளியை முதல்வராக அமரச் செய்யுங்கள். இந்த அரசாங்கம் கை நிறையக் குற்றவாளிகளைக் கொண்டுள்ளது.
சுனில் சிங், சமாஜ்வாதி

``உ.பி-யில் சட்டம் ஒழுங்கு இறந்துவிட்டது. பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களின் மூலமும் பல்லியா சம்பவத்தின் மூலமும் இது தெளிவாகிறது. இது குறித்து மாநில அரசு கவனம் செலுத்தினால் நல்லது. இதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின் அறிவுரை'' என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

மாயாவதி
மாயாவதி
`விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்... ஆனால்?’ - முரளிதரன் பயோபிக்கால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை அடுக்கி பா.ஜ.க அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. சமீபத்தில், வெளியான மத்திய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, `பெண்களுக்கு எதிரான குற்றங்கள்', அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. 2019-ம் ஆண்டு மட்டும் உத்தரப் பிரதேசத்தில், 59,853 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கொலைக் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலிலும் உத்தரப் பிரதேசமே முதலிடம் வகிக்கிறது. 2019-ல் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 4,002 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 3,806 கொலைக் குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
``2017-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது உத்தரப் பிரதேசம். அதுவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கிய பிறகு உ.பி-யில் பா.ஜ.க-வை அசைக்கவே முடியாது என்கிற நிலைதான் தொடர்ந்து வருகிறது. ஆனால், இப்படி வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தால் இன்னும் இரண்டே ஆண்டுகளில், சமாஜ்வாதி அல்லது பகுஜன் சமாஜ் கட்சியின் கைக்கு உ.பி அரசு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு