திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகேயுள்ள தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், அந்தப் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டுவருவதாகக் கூறி, கடந்த மாதம் 26-ம் தேதியன்று திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார் தங்கமணி. இந்நிலையில், 27-ம் தேதி அன்று காலை தங்கமணிக்கு வலிப்பு வந்ததாக காவல்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தங்கமணி, சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். பின்பு, மாலை 4 மணி அளவில் மீண்டும் வலிப்பு ஏற்பட்டதாம். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், இரவு சுமார் 8 மணியளவில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல், தங்கமணியின் குடும்பத்தாருக்குச் சென்றுள்ளது. தகவலைக் கேட்டு அதிர்ந்துபோன தங்கமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், காவல்துறையினர் பொய் வழக்கு பதிந்தே தங்கமணியைச் சிறையிலடைத்ததாகவும், காவல்துறை அதிகாரிகள் அச்சுறுத்திக் கேட்ட 2,00,000 ரூபாயை தாங்கள் தராததால் காவல்துறையினரே தங்கமணியைத் தாக்கிக் கொன்றுவிட்டனர் என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுதினம் காலை மனு கொடுப்பதற்கு சென்றுள்ளனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅப்போது, காவல்துறை அதிகாரிகள் சிலர் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பின்னர், அவர்களில் ஒருசிலர் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தங்கமணியின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தமிழகத்தில் பரவலாகப் பேசப்பட்டதோடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தங்கமணியின் மரணத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது இந்த விவகாரம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "சிறையில் இருந்த தங்கமணிக்கு 27-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின், சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8:40 மணி அளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதித்துறை நடுவர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றுள்ளது. அந்த அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு இந்த அவைக்கு தெரிவிக்கப்படும்" எனப் பேசியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், தங்கமணியின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை கேட்டும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் தங்கமணியின் உடலை வாங்க மறுத்துவந்தனர் அவரது உறவினர்கள். மறுபுறம், தங்கமணியின் உடலை வாங்கக் கோரி, அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்தனர் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள். அப்போது எவ்வித மாற்றமும் இல்லாததால், இந்த விவகாரம் மேலும் பூதாகரமானது. அதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன், கலால் காவல் ஆய்வாளர் நிர்மலா, கலால் முதல்நிலை காவலர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையில், தங்கமணி மரணம் குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி, தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு உத்தரவிட்டார். குடும்பத் தலைவனை இழந்த துயரில் தவித்துவந்த தங்கமணியின் குடும்பத்தினர், கடந்த 2-ம் தேதி அன்று அவரது உடலை மருத்துவமனையிலிருந்து பெற்றுச் சென்றுள்ளனர். நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பின்பு, நேற்று முன்தினம் (04.05.2022) தமிழக சட்டமன்றம் மீண்டும் கூடியது. அப்போது திருவண்ணாமலை தங்கமணி உயிரிழப்பு குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "திருவண்ணாமலை சம்பவம் தொடர்பாக, உடற்கூறாய்வு முடிந்த பிறகு இந்த அவைக்கு அதை நான் தெளிவுபடுத்துவேன் எனக் கூறியிருந்தேன்.
அதுகுறித்த விளக்கம் என்னவென்றால், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடைபெற்ற உடற்கூறாய்வுக்குப் பின்னர், காவல்துறை வடக்கு மண்டலத் தலைவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தங்கமணியின் உறவினர்களிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி, மருத்துவமனை வீடியோ காட்சிகளைக் காண்பித்து விளக்கிக் கூறியுள்ளனர். மேலும், புலன்விசாரணை நியாயமாக நடத்தப்படும் எனவும் தெரிவுப்படுத்தியுள்ளனர். பின், இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. தங்கமணியைக் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய காவல்துறை அதிகாரிகள், வேறு மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டார்கள்.

சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கயின்படி இந்த விவகாரத்தில் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசியுள்ளார்.
சாராயம் விற்பனை செய்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட தங்கமணி மர்மான முறையில் உயிரிழந்திருப்பது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் என்ன விளக்கம் அளிக்கவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.