Published:Updated:

பண மோசடி விவகாரம்: அமலாக்கப் பிரிவு ரேடாரில் அமைச்சர் நவாப் மாலிக் சிக்கியது எப்படி?!

நவாப் மாலிக்

ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்துக்கு நவாப் மாலிக் வெறும் 15 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

பண மோசடி விவகாரம்: அமலாக்கப் பிரிவு ரேடாரில் அமைச்சர் நவாப் மாலிக் சிக்கியது எப்படி?!

ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்துக்கு நவாப் மாலிக் வெறும் 15 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

Published:Updated:
நவாப் மாலிக்

மகாராஷ்டிரா சிறுபான்மைநலத்துறை அமைச்சராக இருக்கும் நவாப் மாலிக், திடீரென நேற்று கைதுசெய்யப்பட்டார். தாவூத் இப்ராஹிமின் நிதி மோசடி தொடர்பாக நவாப் மாலிக் கைதுசெய்யப்பட்டதாக அமலாக்கப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காலையிலிருந்து மாலை வரை விசாரணை நடத்திவிட்டு, மாலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நவாப் மாலிக்கை வரும் 3-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. நவாப் மாலித் தாவூத்தின் தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் தாவூத் கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்கு பதிவுசெய்தது. அதன் அடிப்படையில் மும்பையில் தாவூத்தோடு தொடர்புடையவர்களிடம் ரெய்டு நடத்தப்பட்டது. மேலும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் நேரில் அழைக்கப்பட்டும் விசாரணையும் நடத்தப்பட்டது. நவாப் மாலிக்கைக் கைதுசெய்த அமலாக்கப் பிரிவு, அவரைக் காவலில் எடுக்க தாக்கல் செய்த அறிக்கையில் பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளது.

ஹசீனா பார்கர்
ஹசீனா பார்கர்

மறைந்த தாவூத் சகோதரி ஹசீனா பார்கர் மும்பை, குர்லாவில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த நிலத்தை வாங்குவதற்காக நவாப் மாலிக் ரூ.55 லட்சம் கொடுத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. `அந்த நிலம் முனிரா பிளம்பர் என்பவருக்குச் சொந்தமானது. ஹசீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த நிலத்துக்குப் பணம் கொடுத்ததன் மூலம் நவாப் மாலிக், தாவூத் இப்ராஹிம் கூட்டத்துக்கு நிதியுதவி செய்திருப்பதாகவே கருத முடியும். ஹசீனா மூலம் சொத்து வாங்குவது தாவூத் இப்ராஹிம் தீவிரவாத நெட்வொர்க்குக்கு நவாப் மாலிக் நிதியுதவி செய்ததாகவே கருத முடியும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவற்றை நிலத்தின் உண்மையான உரிமையாளரான முனிரா மற்றும் அவர் தாயாரால் பராமரிக்க முடியவில்லை. எனவே, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஹசீனா, அந்த நிலத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தார். அவரிடமிருந்து நவாப் மாலிக் `சாலிடஸ் இன்வெஸ்மென்ட்' என்ற கம்பெனி மூலம் நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹசீனா பார்கர், நவாப் மாலிக், சலீம் பட்டேல், சர்தார் கான் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து சதிசெய்து, சர்ச்சைக்குரிய நிலத்தை அதன் உரிமையாளருக்கே தெரியாமல் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாகப் பத்திரிகையில் செய்தி வந்த பிறகுதான் நிலத்தின் உண்மையான உரிமையாளருக்கே தனது நிலம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.

நவாப் மாலிக் சிக்கிது எப்படி?

ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்துக்கு நவாப் மாலிக் வெறும் 15 லட்சம் மட்டுமே கொடுத்ததாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. தாவூத் கூட்டாளிகளும், நவாப்மாலிக்கும் தங்களது இந்தக் குற்றத்தை மறைக்க பல சட்டபூர்வ ஆவணங்களைத் தயார் செய்ததாகவும், அது குறித்து விசாரிக்கவேண்டியிருப்பதாகவும் அமலாக்கப் பிரிவு தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மும்பையில் ரெய்டு நடத்திவிட்டு சிலரை நேரில் அழைத்து விசாரித்தனர். அப்படி விசாரிக்கப்பட்டவர்களில் சோட்டாசகீல் மைத்துனர் சலீம் பட்டேல், தாவூத் இப்ராஹிம் மைத்துனர் யூசுப் துங்கேகர், இக்பால் கேஷ்கர் கூட்டாளி காலித் உஸ்மான், தாவூத்தின் சகோதரி ஹசீனாவின் மகன் அலிஷன் பார்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஹசீனாவிடம் டிரைவராக இருந்த சலீம் பட்டேலிடம் விசாரித்தபோது, `ஹசீனா சார்பாக சலீம் பட்டேல்தான் மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுவந்தான். ஹசீனா மற்றும் தாவூத் கூட்டாளிகள் நிலத்தை அபகரித்துக்கொண்டு அதை விடுவிக்க மிரட்டிப் பணம் பறிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தனர்' என்று தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

நவாப் மாலிக்கை மாட்டிவிட்ட ஹசீனா மகன்

ஹசீனா மகன் அலிஷன் பார்கரிடம் விசாரித்தபோது, ``சலீம் பட்டேல்தான் குர்லா நிலம் குறித்த விவரங்களை கவனித்துக்கொண்டார். அதில் என் தாயாருக்குச் சொந்தமான பங்கை நவாப் மாலிக்குக்கு விற்பனை செய்தார். அதற்கு என் தாயார் மற்றும் சலீம் பட்டேலுக்கு நவாப் மாலிக் பணம் கொடுத்தாரா என்று எனக்கு தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்தே விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் அதிகாலையிலேயே நவாப் மாலிக் வீட்டுக்குச் சென்று விசாரித்து, கைதுசெய்தன்ர். இந்தக் கைது விவகாரத்துக்கு வழக்கம்போல் அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சி, மாநில அரசுக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இது போன்ற கைது நடவடிக்கையில் அமலாக்கப் பிரிவினர் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism