Published:Updated:

`இவர்களுக்கெல்லாம் துப்பாக்கி எங்கிருந்துதான் கிடைக்கிறது?' - 7 கோடி துப்பாக்கிகள்

 துப்பாக்கி கலாசாரம்
துப்பாக்கி கலாசாரம்

சுமார் முப்பது லட்சம் பேர் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் இந்தியாவில் தோராயமாக ஏழு கோடி துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளத் துப்பாக்கிகளின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

சட்டபூர்வமாக இந்தியாவில் துப்பாக்கி வைத்திருப்பது எளிதான காரியம் அல்ல. துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் பெறுவது என்பது விண்ணப்பங்கள், விசாரணைகள், அனுமதி கடிதங்கள், ஆண்டுக்கணக்கில் காத்திருப்புகள், தொடர் ஆய்வுகள் போன்ற எண்ணிலடங்கா அரசாங்க நடைமுறைகளின் பெரும் சுமை கொண்டது. 2016-ம் ஆண்டு வெளிவந்த ஓர் ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் சட்டபூர்வமாகத் துப்பாக்கிகள் வைத்திருப்போர் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 0.2 சதவிகிதம் மட்டுமே. அதே சமயம், 1990 முதல் 2016 வரை 26,500 மரணங்கள் துப்பாக்கியால் நிகழ்ந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கியால் நிகழும் மரணங்களில் பிரேசில், அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு உலக அளவில் மூன்றாவது இடம்.

துப்பாக்கி
துப்பாக்கி

சமீபத்தில் சென்னையில் நடந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷின் கொலை, உ.பி பெண் வழக்கறிஞர் கொலை, பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை எனத் துப்பாக்கி வன்முறை பற்றிய பரபரப்பு செய்திகள் வரும்போது எல்லாம், கொலை கருவியாகத் துப்பாக்கி இருப்பதால் கூடுதலாக ஓர் அச்சம் வந்து தொற்றிக்கொள்கிறது. அப்போதெல்லாம், நமக்குள் எழும் முதல் கேள்வி, 'இவர்களுக்கெல்லாம் துப்பாக்கி எங்கிருந்துதான் கிடைக்கிறதோ?' என்பதுதான்.....

இந்தியாவில் எவ்வகையான துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன; எங்கு தயாரிக்கப்படுகின்றன; எவ்வளவு விலை; ஒரு துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெறுவது எப்படி; துப்பாக்கி வைத்திருப்பின் கடைப்பிடிக்கவேண்டிய சட்டங்கள் என்ன; உரிமம் இல்லாத கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம் இந்தியாவில் எவ்வளவு இருக்கிறது; கள்ளத் துப்பாக்கிகள் அதிகமாக இருப்பதன் காரணம் என்ன...

இந்தக் கேள்விகளுக்கான விடையே இந்தக் கட்டுரை. ஒவ்வொரு கேள்வியாகச் சுட்டுத் தள்ளுவோம்...

துப்பாக்கி
துப்பாக்கி
`குப்பைக் கிடங்கு துப்பாக்கி; கோவளம் கடல்!’ - காஞ்சி மாணவன் சுடப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது?

முதலில் சட்டபூர்வமாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் சுமார் 35 லட்சம் துப்பாக்கிகளின் கதையைப் பார்ப்போம்.

இந்தியாவில் முறையான உரிமம் பெற்ற பிறகே ஒருவர் துப்பாக்கியை வைத்திருக்க முடியும். அதுவும் மூன்றே மூன்று காரணங்களுக்காகத்தான் ஒருவருக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகின்றது. ஒன்று தற்காப்பிற்கு, இரண்டு விளையாட்டிற்கு, மூன்று பயிர் பாதுகாப்பிற்கு. இவை தவிர்த்து எக்காரணத்திற்காகவும், யாரும் அனுமதியில்லாத துப்பாக்கியை வைத்திருப்பது சட்டப்படி குற்றம்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006

முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

துப்பாக்கிக்கான உரிமம்

உலகிலேயே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்தான மிகக் கடுமையான சட்டம் இருப்பது இந்தியாவில்தான். 1959-ம் ஆண்டின் ஆயுதச் சட்டம் ஒரு சாமானிய இந்தியாவின் துப்பாக்கி உரிமம் பெற என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறது..

● இந்தியாவில் ஒருவர் துப்பாக்கி வைத்திருக்க குறைந்தது 21 வயதை எட்டி இருக்கவேண்டும். குற்றமற்ற உங்கள் பின்னணியை நிரூபிக்க வேண்டும். தற்காப்பிற்காகத் துப்பாக்கி வேண்டும் என்றால், தன்னுடைய உயிருக்கு விலங்குகளிடமிருந்தோ மனிதர்களிடமிருந்தோ பெரும் ஆபத்து இருப்பதாக நிரூபிக்க வேண்டும்.

● உரிமம் கேட்கும் விண்ணப்பத்தோடு அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று, வயதுச் சான்று, கல்விச் சான்று, வருமான வரிச் சான்று உள்ளிட்டவற்றோடு உடல் நலன், மன நலன், குண நலன் சான்றுகள் என சகலமும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

● அடுத்த சில மாதங்கள் போலீஸ் உங்கள் பின்னணியைத் தீர விசாரிக்கும், விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினரிடம் நேர்காணல்கள் நடத்தும், அண்டை வீட்டினரிடம் விசாரித்து, மன நலன் குறித்த மருத்துவச் சான்றிதழைச் சரி பார்த்து, அடுத்தவரிடம் விண்ணப்பதாரர் எப்படி பழகுவார் என்பது வரை விசாரித்த பின்னரே ஒருவருக்கு உரிமம் வழங்கப்படுகிறது.

● இந்த நேர்காணல் ஒலிப் பதிவுகள் குற்றப் பிரிவிற்கும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கும் அனுப்பிப் பாதுகாக்கப்படுகின்றன. பின்னர் இறுதி நேர்காணலுக்குப் பிறகு, காரணங்களைப் பதிவுசெய்து உரிமம் மறுக்கப்படவோ அல்லது ஏற்கப்படவோ செய்கிறது.

● உரிமம் பெற்றவர் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு முறையாகப் பயிற்சி எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். தேர்தல் காலங்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டும்.

துப்பாக்கி பறிமுதல்
துப்பாக்கி பறிமுதல்

இப்படி நீண்டுகொண்டே போகின்றன சட்ட நிபந்தனைகள். இவற்றையெல்லாம் தாண்டி ஒருவர் சட்டரீதியான உரிமம் பெறுவதற்கு சமயங்களில் ஆண்டுக் கணக்கில் ஆகின்றது. உயிர்பயத்தில் இருக்கும் ஒருவன், தன் தற்காப்பிற்காக ஆயுதம் வேண்டுகிறான், சட்டம் அலைக்கழிப்பதாக நினைப்பவன், தவறான முடிவெடுத்து உரிமமற்ற கள்ளத் துப்பாக்கிகளை நாடுகிறான். பெரும்பாலும் உரிமம் பெற்று சட்டப்படி ஆயுதம் வைத்திருப்பவர்களுக்குச் சட்டத்தின் பார்வை தன் மீது இருப்பதால் கூடுதல் கவனமும், பொறுப்புணர்வும் இருக்கின்றது எனும் நிலையில், அரசாங்கம் கவனத்தோடு, ஒருவர் உரிமம் பெரும் வழிமுறைகளையேனும் எளிமையாக்க வேண்டும் என்பதே அவசியம்.

துப்பாக்கித் தகவல்கள்

இந்தியாவில் Single barrel gun, Double Barrel gun, Rifle, Pistol, revolver உள்ளிட்ட சில ரகத் துப்பாக்கிகள் வைத்திருக்க மட்டுமே பொதுமக்களுக்கு உரிமம் வழங்கப்படுகின்றது. இதில் rifle போன்ற துப்பாக்கிகளின் விலை குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயில் தொடங்குகிறது. உரிமம் வேண்டி விண்ணப்பிக்க ஒருவர் மாவட்ட டிஎஸ்பி அலுவலகங்களை அணுக வேண்டும்.

சட்டரீதியாகத் துப்பாக்கி வைத்திருக்கவே இவ்வளவு போராட்டங்கள் இருக்கும் இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பாக இருக்கும் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கத்தைப் பற்றிய தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. சுமார் முப்பது லட்சம் பேர் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் இந்தியாவில் தோராயமாக ஏழு கோடி துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளத் துப்பாக்கிகளின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கள்ளத் துப்பாக்கிகள்!

துப்பாக்கி பறிமுதல்:
துப்பாக்கி பறிமுதல்:

கள்ளத் துப்பாக்கிகள் குறித்தான தரவுகள் இவ்வாறு இருக்கக் கள்ளத் துப்பாக்கிகள் எவ்வாறு கிடைக்கின்றன என்பதே நமது அடுத்த கேள்வி. இந்தியாவில் மீரட், டெல்லியில் காஃபர் மார்க்கெட் போன்ற இடங்களில் சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்டத் துப்பாக்கிகள் கிடைக்கிறது என்றால், பீகார் மாநிலம் முன்கர் எனும் மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இப்பகுதியை இந்தியாவில் கள்ளத் துப்பாக்கிகளின் முக்கியச் சந்தை எனலாம். இந்தியா மட்டுமல்ல, நேபாள் பங்களாதேஷ் எனப் பிற நாடுகளுக்கும் இங்கிருந்து கள்ளத் துப்பாக்கிகள் கிடைக்கின்றன. பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழ் மிகப்பெரும் படைக்கலன் தயாரிப்பு தளமாக இருந்த இவ்விடம் தற்போது சட்டவிரோதமான துப்பாக்கிச் சந்தையின் தலைமையிடமாகக் கோலோச்சுகிறது. சட்டவிரோதமாகத் துப்பாக்கி விற்றதாக போலீஸ் விசாரணையில் இருக்கும் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் vice.com என்னும் மின் இதழுக்கு அளித்த பேட்டியில், "எப்படிப்பட்ட துப்பாக்கிகளையும் கொண்டு வந்து எங்கள் ஊரின் சிறுவர்களிடம் கொடுங்கள், ஒருமுறை பார்த்தால் போதும், அதே வடிவில், ஒரு துப்பாக்கியைச் செய்து விடுவார்கள்" என்கிறார். Italian Beretta எனும் ரகத் துப்பாக்கியை ஒரு மணிநேரத்தில் தன் கண் முன் ஒருவர் தயாரித்ததாகக் கூறும் அந்த நபர், சுமார் மூன்றரை லட்சத்திற்கு வெளியில் கிடைக்கும் அந்தத் துப்பாக்கி கள்ளச்சந்தையில் 80,000 ரூபாய்க்குக் கிடைக்கிறது என்கிறார்.

கள்ளத்துப்பாக்கி தயாரிப்புத் தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும், துப்பாக்கித் தொழிற்சாலைகளில் வேலை புரிந்து, தொழிற்சாலை மூடப்பட்ட போது வேலையை இழந்தவர்கள். பசியும், பட்டினியும், வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும், கள்ளத்துப்பாக்கிகளின் தேவையும் அவர்களை இத்தொழில் செய்ய நிர்பந்திப்பதாகவே அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. தயாரிப்பவர்கள் இந்நிலை என்றால், தற்காப்பிற்குத் துப்பாக்கி வாங்குபவர்கள் கூட அரசு எந்திரத்தின் நீண்ட நடைமுறைக்குப் பயந்தே கள்ளச்சந்தையில் துப்பாக்கி வாங்கி வைத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்தப் பேட்டியில் துப்பாக்கி தயாரிப்பதற்கு மூலப் பொருள்களும் தோட்டாக்களும் ராணுவ முகாம்களிலிருந்தும் ஆயுதத் தொழிற்சாலைகளிலிருந்தும் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த இடத்தில், இவ்வளவு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தினம் தினம் நமக்கு செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் ஏதோவொரு கிடங்கில் போடப்படுகின்றன, அதன்பின் அவையென்ன ஆனாலும் யாருக்கும் கவலையில்லை. அப்படியிருக்க சமயங்களில் அங்கிருந்து சில நூறுகள் லஞ்சத்திற்கு அந்தத் துப்பாக்கிகள் மீண்டும் கள்ளச்சந்தைக்கு வருவதும் நடக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட `துப்பாக்கி' அக்‌ஷரா மீண்டது எப்படி? #WorldMentalHealthDay

மேலை நாடுகளில் பரவிக் கிடைக்கும் உணவும், உடையும், நடையும் இந்தியாவில் பரவலாம். ஆனால், அங்கிருப்பது போன்ற துப்பாக்கி கலாசாரம் இந்தியாவில் பரவுமாயின், ஏற்கெனவே மதம், சாதி, இனம், மொழி, கட்சி எனப் பிளவுற்று இருக்கும் இந்தியர்களின் ஒவ்வொரு பகைக்கும், கோபத்திற்கும் ஒவ்வொரு குண்டு எனப் பாய்ந்து நாளைய இந்தியா பிணக்காடாகும்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு