Published:Updated:

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற மரணங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது காவல்துறையா, நீதித்துறையா?

Cases on Police
Cases on Police ( Vikatan Infographics )

சாத்தான்குளத்தில் நடந்துள்ள, இந்தச் சம்பவம், பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் மிகப் பெரிய விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. பொதுமக்களிடம் மிருகத்தனமாக நடந்துகொள்வதாகக் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் விற்பனைக் கடை நடத்திவந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கடந்த புதன்கிழமை காலையில், விசாரணையைத் தொடங்கிய நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோரைக்கொண்ட அமர்வு, இந்த வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்க, தூத்துக்குடி எஸ்.பி-யும், டி.ஜி.பி-யும் வீடியோ கான்ஃபரன்ஸில் 12.30-க்கு ஆஜராக வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்கள். மதியம் 12.30-க்கு விசாரணை மீண்டும் தொடங்கியபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன்,

பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்
பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்

"முதலமைச்சருடன் டிஜிபி அலுவல் சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதால் ஆஜராக முடியவில்லை. அவருக்குப் பதிலாக தென் மண்டல ஐ.ஜி ஆஜராவார்” என்று கூற, அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, அவரிடம் விசாரித்த நீதிபதிகள் சில வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளனர். மற்றபடி, கோவில்பட்டி குற்றவியல் நீதிபதி, இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இந்த நீதிமன்றம் அதில் தலையிடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சாத்தான்குளம் சம்பவம்போல இனிமேல் நடக்காமல் இருக்க டிஜிபி, காவல்துறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு வழக்கறிஞம் இதுபற்றி அரசிடம் கூற வேண்டும். பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பினால் ஏழை எளிய மக்கள் வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் இப்படி நடந்திருக்கக் கூடாது. மக்கள்தான் நாட்டின் இறையாண்மை. அனைத்து நிறுவனங்களும் மக்களுக்காவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால், காவல்துறை மக்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
நீதிபதிகள்

சாத்தான்குளத்தில் நடந்துள்ள, இந்தச் சம்பவம், பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் மிகப் பெரிய விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. பொதுமக்களிடம் மிருகத்தனமாக நடந்துகொள்வதாகக் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம் காவல்துறையினரின் பணிச்சுமைகள் ஆகியவற்றை முன்னிறுத்தியும் கருத்துகள் வெளியாகின்றன. ஆனால், இருவர் உயிரிழந்ததற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அரசு வெளியிட்ட கணக்கின்படி, இந்தியாவில் 2016-18 வரை, 262 பேர் லாக் அப்பில் மரணமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக வெளியிட்ட, 2018-ம் ஆண்டின் கணக்கின்படி மொத்தமாக இறந்துபோன 70 பேரில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாமலே உயிரிழந்தவர்கள் 46 பேர்; நீதிமன்றத்தில் ஆஜர் செய்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பின் உயிரிழந்தவர்கள் 24 பேர்.

இந்தநிலையில், "இதுபோன்ற லாக் அப் டெத் அல்லது சிறைக்குள் கொண்டு செல்லப்பட்ட சில நாள்களில் ஏற்படும் மரணங்களில், நாம் காவல்துறையினரைத்தான் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு வருகிறோம். ஆனால், நம் கைகள் நீதிமன்றத்தை நோக்கித் திரும்புவதுதான் சரியானது'' என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

Lockup Deaths
Lockup Deaths
Vikatan Infographics

''அவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர் அவர்களைப் பார்த்ததும் சிகிச்சை அளித்திருக்க வேண்டாமா?,

"ரத்தப்போக்குடன் இருந்த என் அண்ணனையும் காயத்துடன் இருந்த அப்பாவையும் எப்படி சிறையில் அடைத்தார்கள்?''

என்கிற கேள்வியை பென்னிக்ஸின் சகோதரி பெர்சி எழுப்பியுள்ளார். ஆனால், ''இந்தக் கேள்விகளை ஜெயராஜின் குடும்பத்தினர் மட்டுமல்ல ஜனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரும் எழுப்ப வேண்டும்'' என்கிறார் வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான புகழேந்தி,

''இந்தப் பிரச்னையில் காவல்துறையினர் அடித்துவிட்டார்கள், இறந்துவிட்டனர் என மக்களின் கோபம் காவல்துறையினரின் மீது மட்டும்தான் இருக்கிறது. காவல்துறையினரின் செயல் காட்டுமிராண்டித்தனமானதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை, ஒருவரைக் கைது செய்வதற்கு முன்பாக, அந்தப் பகுதி மருத்துவரிடம் சரியான உடற் தகுதியுடன் இருக்கிறார்களாக என்று சான்றிதழ் வாங்கவேண்டும். இந்தச் சம்பவத்திலும் அப்படி, சாத்தான்குளம் மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கப்பட்டிருக்கிறது. அவர் எப்படி சான்றிதழ் வழங்கினார்?

பென்னிக்ஸின் தாய் மற்றும் சகோதரி
பென்னிக்ஸின் தாய் மற்றும் சகோதரி

அடுத்ததாக, கைது செய்தவர்களை 24 மணி நேரத்துக்குள் நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்த வேண்டும். அப்படி செய்யும்போது, அவர்களை ரிமாண்ட் செய்வது குறித்து அந்த நீதிபதிகள் முடிவு செய்யலாம். நீதிபதிகளுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. சிறைக்கு அனுப்புவதற்கு முன்பாக, காவல்துறையினர் அடித்தார்களா, உடற்தகுதி எப்படியிருக்கிறது போன்றவற்றை விசாரிக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அது நடக்கவில்லை. நீதிபதி அவர்களை விசாரித்து மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாம். பல அரசியல்வாதிகள் அப்படி சிகிச்சை எடுத்திருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் உச்சநீதிமன்றம், ஏழாண்டுகளுக்குக் கீழ் தண்டனை பெறும் எந்தக் குற்றவாளியையும் ஜெயிலில் அடைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளது. இவர்களின் மீது போடப்பட்டுள்ளது எல்லாம், ஏழாண்டுகளுக்குக் கீழ் தண்டனை வழங்கக் கூடிய பிரிவுகள்தான். இதையும் மேஜிஸ்திரேட் கவனத்தில் கொள்ளவில்லை. கைது செய்தவர்களை 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதோடு காவல்துறையினரின் வேலை முடிந்துவிட்டது. ஆஜர்படுத்திய பின்பு, அவர்கள் இருவரும் நீதித்துறையின் கட்டுப்பாட்டுக்குள் (Judicial custody) சென்று விடுகிறார்கள்.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

அதேபோல சிறைக்குள்ளும் சிறைத்துறை அதிகாரிகள், முறையான உடற்பரிசோதனை செய்துதான், கைதிகளை அனுமதிக்கவேண்டும். உள்ளே அனுமதிக்க மறுக்கும் அதிகாரம் சிறைத்துறைக்கு இருக்கிறது. ஆனால், சாத்தான் குளம் சம்பவத்தில் அதுவும் நடைபெறவில்லை.

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை நீதித்துறைக்குதான் இருக்கிறது. காவல்துறையினர் அடிப்பதாகக் கை, கால்களை உடைப்பதாக அடிக்கடி செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகின்றன, பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்கள் என்றால் என்ன என்பது அனைவருக்குமே வெளிப்படையாகத் தெரியும். அப்படியிருக்க, இது குறித்து காவல்துறையினரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்புவதே இல்லை. ஒரு கைதியை மேஜிஸ்திரேட்டின் முன் நிறுத்தினால், கைதியிடம் தனிப்பட்ட முறையில் அவர் விசாரிக்க வேண்டும். ஆனால், மாஜிஸ்திரேட்கள் பலர், ஆள்களையே பார்ப்பதில்லை, காவலர்கள் எங்காவது தூரத்தில் காரில் கைதிகளைக் காண்பிக்க, வீட்டின் வாசலில் இருந்தே மாஜிஸ்திரேட்கள் பார்த்து ஒப்புதல் அளிக்க ரிமாண்ட் செய்து விடுகிறார்கள். இதை, இயந்திரத்தனமான ரிமாண்ட் என்றுதான் இதைச் சொல்லவேண்டும். சாத்தான்குளம் சம்பவம் போன்ற மரணங்களில் காவல்துறையினர் முதன்மைக் குற்றவாளிகள். ஆனால், மேஜிஸ்திரேட்களின் மீதும் குற்றமிருக்கிறது'' என்கிறார் புகழேந்தி.

Cases on Police
Cases on Police
Vikatan Infographics

மேலும், பேசிய வழக்கறிஞர் புகழேந்தி,

''இதுவரை நிகழ்ந்த லாக் அப் டெத்களில், காவல் துறையினர்தான் அடித்துக்கொன்றார்கள் என 98 சதவிகிதச் சம்பவங்களில் நிரூபிக்கப்படுவதில்லை, தண்டனை வழங்கப்படுவதில்லை. அத்துமீறும் காவல்துறையினரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது. ஆனால், காவல்துறை செய்கின்ற தவறுகளை நீதித்துறை கண்டும் காணாமல் இருப்பது, தண்டிக்கத் துணிச்சல் இல்லாமல் இருப்பது, காவல்துறையினருக்குச் சாதகமாக இருந்து விடுகிறது'' என்கிறார் அவர்.

சாத்தான்குளம்: `உடற்கூறாய்வுக்கு முன்னரே எப்படி முதல்வர் காரணம் சொன்னார்?’ - கனிமொழி

நீதித்துறையின் மீதான இந்த விமர்சனங்கள் குறித்து, முன்னாள் நீதியரசர், அரிபரந்தாமனிடம் பேசினோம்,

''ரிமாண்டுக்குச் செல்லும்போது, தனியாக அழைத்து சரியாக விசாரிக்க வேண்டியது நீதிபதிகளின் கடமைதான். நீதித்துறைக்கும் பொறுப்பிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற மரணங்களுக்கு (Custodial death) முழுமுதல் பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும். நம் கேள்விகள் அரசை நோக்கித்தான் இருக்கவேண்டும். காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதே தவிர நீதித்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. காவலர்கள் தாக்கும்போது, காவல்துறை உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள், அந்தத் துறை அமைச்சர் என்ன செய்தார், மருத்துவரிடம் பரிசோதனைக்குக் கொண்டு செல்லும் போது மருத்துவர் என்ன செய்தார்... அரசாங்கத்தை மீறி நீதிமன்றங்களால் செயல்பட முடியாது.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. தேவைப்படும்போது அரசுகள் நீதிமன்றங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன. நீதிமன்றங்கள் குறித்த அளவு கடந்த நம்பிக்கைகள் மக்களிடம் தவறாக விதைக்கப்படுகின்றன. ஆனால், அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருப்பது அரசுதான். நம் கேள்விகள் அவர்களை நோக்கித்தான் இருக்கவேண்டும்'' என்கிறார் அரிபரந்தாமன்.

இந்தநிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் இறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத குற்றவியல் நடுவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு