Published:Updated:

சிவசங்கர் பாபா: லாரி ஷெட் டு ராமராஜ்யம்..! - பாலியல் வழக்கில் கைதான சிவசங்கரன் `பகவான்’ ஆன பின்னணி!

சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா

“நான்தான் பகவான் கிருஷ்ணன்” என்று கூறி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்துள்ளனர். யார் இந்தச் சர்ச்சையில் சிக்கிய சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா?

தமிழகத்தில் மிகப்பெரிய ஆன்மிகத் தலைவர்களாக அறியப்பட்ட சிலர் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார்கள். ஆன்மிகத்தின் பின்னால் மறைந்துகொண்டு பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றியதாக, ஆன்மிகத் தலைவர்கள் மீது புகார்கள் எழுவது காலங்காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தன்னை பகவான் கிருஷ்ணனின் அவதாரமாகச் சொல்லிக்கொண்டு, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி என்ற பெயரில் பள்ளிக்கூடம் நடத்திவந்த சிவசங்கரன் என்ற சிவசங்கர் பாபா. ஆறாவது படிக்கும் மாணவிகள் முதல் பன்னிரண்டாவது படிக்கும் மாணவிகள் வரை இவரது பாலியல் வக்கிரத்துக்கு பலியான மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் நடிகர் சண்முகநாதன் உள்ளிட்டோர், `சிவசங்கர் பாபா நல்லவர்’ எனப் பேசிவருகின்றனர். ஆனால், சிவசங்கர் பாபா தங்களுக்குச் செய்த பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் பல மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் புகார் அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சுஷில் ஹரி பள்ளி
சுஷில் ஹரி பள்ளி

சிவங்கரனின் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததே அவரது பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள்தான் என்பதுதான் கூடுதல் வேதனை. கே.கே.நகர், பி.எஸ்.பி.பி ஆசிரியர் மீது பாலியல் வன்கொடுமைப் புகார் வெளியானதை அடுத்தே கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிவசங்கர் பாபா மீதான புகார்களும் வெளிவரத் தொடங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மண்ணடியிலுள்ள ஒரு லாரி ஷெட்டில் கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சிவசங்கரன் 64 ஏக்கர் பரப்பளவுகொண்ட ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார்.

யார் இந்த சிவசங்கர் பாபா?

 “நான் கிருஷ்ணர், நீங்கள் என் ராதைகள்!” - சிவசங்கரனின் பாலியல் சீண்டல்கள்...

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் பள்ளி ஆசிரியர் நாராயண சர்மாவுக்கும் விஜயலட்சுமிக்கும் 1949, ஜனவரி 28-ம் தேதி பிறந்தவர் சிவசங்கரன். பள்ளிப்படிப்பைச் சொந்த ஊரிலேயே முடித்த சங்கரன் வேதியியல்துறையில் பட்டப்படிப்பும், சரக்குகள், போக்குவரத்துக் கையாளல் பிரிவில் முதுகலைப் படிப்பும் முடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு போக்குவரத்து நிறுவனமொன்றை நடத்திய சிவசங்கரன் 1978 - 1983 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், கட்டட ஒப்பந்ததாரர், ஆவணப்படத் தயாரிப்பாளர் என பாபா அவதாரம் எடுக்கும் முன்பே பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்.

இதன் மூலம் இவருக்கு ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணாநகர், ஆந்திர வர்த்தக சம்மேளன நிர்வாகக்குழு, இந்தியன் வங்கி நிர்வாகக்குழு, ரயில்வே ஆலோசனை வாரியம் ஆகியவற்றில் உறுப்பினர் பதவிகளும், சரக்குப் போக்குவரத்து சங்கத் தலைவர் பதவியும் கிடைத்திருக்கிறது. பிழைப்புக்காக மண்ணடி வந்தவர் அங்கே ஒரு லாரி ஷெட்டில் கூலித் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்று மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.

சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா

ஆரம்பத்தில் மண்ணடியில் சிறிய அளவில் தொடங்கிய இவரது ஆன்மிகப் பயணம், சென்னை நீலாங்கரையில் தனி வீடு வாங்கி `சம்ரட்சணா’ என்ற இயக்கத்தைத் தொடங்கியதும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது. தனது தந்தை கோயில் பூசாரியாக இருந்ததால், தனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது எனவும், தனக்கு ரத்னகிரி கோயிலிலுள்ள பாலமுருகன் சுவாமியின் அருள் இருக்கிறது எனவும், தான் பகவான் கிருஷ்ணனின் அவதாரம் எனவும் கூறி தனது ஆன்மிகப் பயணத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். ஆடிப்பாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இறைவனுடன் கலப்பதுதான் ஆன்மிகம் என்ற அவரது போதனையால் கவரப்பட்டவர்கள், அவரது பெயருடன் சேர்த்து `சிவசங்கர் பாபா’ என அவரை அழைக்கத் தொடங்கி அதன் பிறகு அவருக்கு `சிவசங்கர் பாபா’ என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது என்கின்றனர்.

செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!

இதற்கிடையே சுஷில் என்பவருடன் இணைந்து 1999-ம் ஆண்டில் சென்னை புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி என்ற பெயரில் சர்வதேச உறைவிட பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தியவர், பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை அமைத்தும் தன்னுடைய கட்டுமானங்களை விரிவுபடுத்திக்கொண்டார். பள்ளி அமைந்துள்ள வளாகத்தை `ராமராஜ்யம்’ என அவரைப் பின்தொடர்பவர்கள் அழைக்கிறார்கள். உடல்நலம், திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தைப்பேறு எனத் தன்னை நாடிவந்த பலருக்கும் போதனைகளை வழங்கத் தொடங்கியவருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு பெருகியதோடு, அரசியல் தொடர்பும் அதிகரித்திருக்கிறது. ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு இடையே ஆபாசமான ஜோக்குகளைச் சொல்வது, இடையிடையே நடனம் ஆடுவது, அப்போது மாணவிகள் மற்றும் பக்தைகளிடம் எல்லை தாண்டி நடந்துகொள்வது எனத் தனது பாலியல் எல்லை மீறல்களை அரங்கேற்றியிருக்கிறார்.

சிறார் வதை
சிறார் வதை

“கடவுளுக்காக நான், கடவுளாக நான், என்னுடைய கண்ணில் சூரியன் சந்திரனை வரவைத்த நான் தற்போது என்னை நாடிவரும் குழந்தைகள் கண்களிலும் அவற்றை வரவைத்திருக்கிறேன். 24 மணி நேரமும் நான் இறைவனுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறேன். சுமார் 7,000 ஆண்டு வயதுடைய சித்தர் என்னைப் பிடித்து எனக்குள் வாழ்ந்துவருகிறார்” என்பதெல்லாம் உபதேச காலத்தில் இவர் உதிர்த்தவை.

மேடவாக்கத்தில் இருந்த யாகவா முனிவருக்கும் சிவசங்கருக்கும் போட்டியிருந்திருக்கிறது. அதற்கடுத்து சிவசங்கர் பாபாவை எதிர்த்தவர், பேராசிரியரும் திரைப்பட நடிகருமான பெரியார்தாசன். பெரியார்தாசன் எழுப்பிய பல கேள்விகளுக்கும், தன்னை இறைவனின் அவதாரம் என்பதைத் தன்னை நம்புபவர்கள் உணர்வார்கள். பெரியார்தாசன் அதை நேரில் அனுபவிக்க வேண்டும் என்றே அவர் பதில் கூறிவந்துள்ளார். மேலும், சிவசங்கர் மீது ஆள் கடத்தல், பாலியல் புகார்கள் போன்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தபோதும், அவை தொடர்பாகப் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது மாணவிகள் பலரும் பொதுவெளியில் தைரியமாக வந்து சிவசங்கருக்கு எதிரான புகார்களை வைத்ததும்தான் நிலைமை தீவிரமடைந்து, தமிழக அரசு அவர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.

72 வயதாகும் சிவசங்கருக்கு எதிரான புகார்களும் நடவடிக்கைகளும் வலுத்ததால், அவர் டேராடூனுக்குத் தப்பி ஓடினார். சிவசங்கர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில், நெஞ்சுவலி காரணமாக டேராடூனில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து சிவசங்கரன் திடீரென மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது அவரை டெல்லியின் ஹாஜியாபாத் பகுதியில்வைத்து தமிழக போலீஸார் கைதுசெய்து, சென்னைக்கு அழைத்து வந்திருக்கிரார்கள்.

சிவசங்கரன் கைது
சிவசங்கரன் கைது
கிஷோர் கே.சாமி கைது... சரியான நடவடிக்கையா, பழிவாங்கும் படலமா?!

ஆன்மிகம் என்ற பெயரில் மக்களின் நம்பிக்கையைவைத்துப் பிழைப்பு நடத்துவதோடு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் இது போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் குறிப்பாக, இறை நம்பிக்கை உடையவர்களின் எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு