Published:Updated:

`கலந்தாய்வு நடத்திய அதிகாரிகள் யார் யார்?’ - நீட் விவகாரத்தில் லிஸ்ட் கேட்கும் சி.பி.சி.ஐ.டி

நீட் விவகாரத்தில் தற்போது ஆறு பேரை அதிரடியாக கைது செய்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இந்நிலையில் நீட் கலந்தாய்வு பக்கம் தனது கவனத்தை செலுத்தியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி..

Theni CBCID
Theni CBCID

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித்சூர்யா மற்றும் அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோரை கைது செய்த சி.பி.ஐ.டி போலீஸார், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் ஆறு பேரை அதிரடியாக கைது செய்தது. இந்த நிலையில், நீட் கலந்தாய்வு பக்கம் தனது கவனத்தை செலுத்தியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி.

CBCID SP VijayaKumar
CBCID SP VijayaKumar

கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்கள் அவர்களது தந்தையர்கள் என ஆறு பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில், நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், ``நீட் தேர்வில் போலியான நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இதற்கு உதவிய நீட் ஏஜென்டுகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

Duplicate Uthid Surya
Duplicate Uthid Surya

இது ஒருபுறம் என்றால், உண்மையான நபருக்குப் பதில் நீட் தேர்வு எழுதிய போலியான நபர், தேர்வு முடிந்து சென்னையில் நடைபெற்ற கலந்தாய்விலும் பங்கேற்றிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம். அப்படியென்றால், நீட் தேர்ச்சி சான்றிதழில் இருந்த புகைப்படமும், 12 -ம் வகுப்புச் சான்றிதழில் இருந்த புகைப்படமும் வேறு வேறாக இருந்திருக்கும்.

அதைக் கவனிக்காமலா கலந்தாய்வு செய்தார்கள்? எனவே, நீட் கலந்தாய்வு செய்த அதிகாரிகள் யார் யார் என மருத்துவக் கல்வி இயக்குநரகத்திடம் கேட்டிருக்கிறோம். லிஸ்ட் கிடைத்ததும் அவர்களிடமும் விசாரணை நடக்கலாம்” என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Udith Surya
Udith Surya

தொடர் விசாரணை, தொடர் கைது என நீட் விவகாரம் பூதம் போல பெரிதாகிக்கொண்டிருக்கிறது. இதனால், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகம் பரபரப்பாக காட்சியளிக்கிறது.