Published:Updated:

டெல்லியில் கள்ளத்துப்பாக்கி கலாசாரம்..! அமைதி ஏன் அமித் ஷா?

அமித் ஷா
அமித் ஷா

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் நீண்ட விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, அந்த வன்முறையின்போது கள்ளத்துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது குறித்து வாய்திறக்கவில்லை.

குடியுரிமைத் திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக்கில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி வடகிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்தது. இரண்டு நாள்களையும் கடந்து நடைபெற்ற அந்த வன்முறையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இரு தரப்பையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர், சொத்துகள் நாசப்படுத்தப்பட்டன.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

"பா.ஜ.க தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரின் வெறுப்பு பேச்சுகளே டெல்லி வன்முறைக்குக் காரணம்" என்று எதிர்க் கட்சியினர் உட்பட பலரும் குற்றம் சாட்டினர். மேலும், இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டபோது, டெல்லி போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இம்மாதம் 2-ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. டெல்லி வன்முறை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அன்று நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. "டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், பிரதமரும் உள்துறை அமைச்சரும் விளக்கமளிக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், ஆளும் தரப்பிடமிருந்து பதில் வரவில்லை.

கள்ளத்துப்பாக்கி
கள்ளத்துப்பாக்கி

இந்த நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. ''டெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்" என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.

பின்னர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து அமித் ஷா பேசினார். அப்போது, "டெல்லி வன்முறையில் 52 பேர் உயிரிழந்தனர். 526 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் ஹவாலா பணம் அதிக அளவில் விளையாடியுள்ளது. அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வன்முறையாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இந்த வன்முறை குறித்து அறிவியல்பூர்வமாகப் புலனாய்வு செய்துவருகிறோம். இந்த வன்முறையும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதிதான். வன்முறைக்கு வித்திட்டவர்கள் குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி வன்முறைக்குக் காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. இந்தச் சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது" என்றார் அமித் ஷா.

அமித் ஷா
அமித் ஷா
டெல்லி கலவரத்தில் 1,100 பேரின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டது எப்படி?

மேலும், "டெல்லி வன்முறை தொடர்பாக 700 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டதாக 1,100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 300 பேர் உ.பி-யிலிருந்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 371 கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. 142 பேரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறையில் பயன்படுத்தப்பட்ட 152 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 49 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன" என்று அமித் ஷா கூறினார்.

‘விவரங்களைச் சேகரிக்க’ பல நாள்கள் எடுத்துக்கொண்டு, இத்தனை விவரங்களை அவையில் சொன்ன உள்துறை அமைச்சர், அந்த வன்முறையில் பயன்படுத்தப்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் பற்றிப் பேசவில்லை. டெல்லி வன்முறையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள். அதேபோல, காயமடைந்தவர்கள் பலரும் துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள் என்று செய்திகள் வந்துள்ளன. தேசத்தின் தலைநகரிலேயே கள்ளத்துப்பாக்கிகளின் புழக்கம் சர்வசாதாரணமாக ஆகியிருக்கிறது.

கள்ளத்துப்பாக்கி
கள்ளத்துப்பாக்கி

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஜனவரி 30-ம் தேதி பேரணியாகச் சென்றபோது, அவர்கள் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் ஒரு மாணவர் காயமடைந்தார். அதேபோல, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஷாகீன் பாக்கில் பெண்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதற்கடுத்த சில தினங்களில் ஜாமியா பல்கலைக்கழக வளாகம் முன்பு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். ஐந்து நாள்களில் மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது தலைநகர் டெல்லியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் தலைநகரில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாது. சட்டம் ஒழுங்கை சரியாகப் பராமரிக்கவில்லை என்ற காரணத்தால், டெல்லி தென்கிழக்குப் பகுதியின் காவல்துறை துணை ஆணையர் சின்மாய் பிஸ்வாய் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்ற டெல்லி வன்முறையின்போது துப்பாக்கியால் 5,000 ரவுண்டுகள் சுடப்பட்டதாகச் செய்திகள் வந்தன. ஏராளமான கள்ளத்துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே தலைநகர் டெல்லியில் கள்ளத்துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கிவருகிறது. கடந்த ஆண்டு, ரன்ஹோலாவில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆலிப்பூரில் காரில் வந்த மர்மநபர்கள் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஒரு நாய் மீது கல் வீசியதற்காக ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த மூன்று சம்பவங்களும் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி டெல்லியில் நடைபெற்றவை. கடந்த சில ஆண்டுகளில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 2016-ம் ஆண்டு டெல்லியில் ஆயுதங்கள் சட்டத்தின்படி 745 பேர் கைது செய்யப்பட்டனர். 2017-ம் ஆணடு 1,141 பேரும் 2018-ம் ஆண்டு 1,901 பேரும் கைது செய்யப்பட்டனர். அதாவது, இரண்டே ஆண்டுகளில் கைது எண்ணிக்கை 155 மடங்கு அதிகரித்தது.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
கடுகடு ரஜினி; கொதித்த தளவாய்; உற்சாக தம்பிதுரை; உறுமிய சூரப்புலி! - கழுகார் அப்டேட்ஸ்!

அதேபோல, ஆயுதங்கள் சட்டத்தின்படி பதிவான வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2016-ம் ஆண்டு 658 வழக்குகள் பதிவாகின. 2017-ம் ஆண்டு 957 வழக்குகளும், 2018-ம் ஆண்டு 1,540 வழக்குகளும் பதிவாகின. பறிமுதல் செய்யப்பட்ட கள்ளத்துப்பாக்கிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது. 2016-ம் ஆண்டு 902, 2017-ம் ஆண்டு 1,381, 2018-ம் ஆண்டு 1,905 என்ற எண்ணிக்கையில் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளத்துப்பாக்கிகள் டெல்லிக்கு எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள், "கள்ளத்துப்பாக்கிகள் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்துதான் டெல்லிக்கு வருகின்றன. உ.பி எல்லையில் டெல்லி அமைந்திருப்பதால், அங்கிருந்து கள்ளத்துப்பாக்கிகள் கடத்திவரப்படுகின்றன. அங்கு, கள்ளத்துப்பாக்கி தயாரிப்புக்கு ‘புகழ்பெற்ற’ இடமாக மீரட் விளங்குகிறது. குறிப்பாக, மீரட்டில் உள்ள சாட்லா என்ற இடத்தில்தான் மிகப்பெரிய அளவில் கள்ளத்துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. டெல்லியைச் சேர்ந்த சமூகவிரோதக் கும்பல்களும் ரவுடிகளும் கேங்ஸ்டர்களும் மீரட்டிலிருந்துதான் கள்ளத்துப்பாக்கிகளை வாங்குகிறார்கள். 3,000 ரூபாய்க்கு ஒரு நாட்டுத் துப்பாக்கியை வாங்கிவிடலாம். ரூ.15,000 - ரூ.25,000 விலையில் தரமான பிஸ்டல் கிடைக்கும். நவீன ரக பிஸ்டல்களை ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான விலைகளில் வாங்கலாம்" என்றனர்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
`இந்து, இஸ்லாமியர் என்பதில்லை; இறந்தவர்கள் இந்தியர்கள்!' - வன்முறைக்கு விளக்கமளித்த அமித் ஷா

கள்ளத்துப்பாக்கிகள் பற்றி இந்தச் செய்திகள் பெரும் அச்சம் தருவதாக உள்ளன. பா.ஜ.க தலைவர்களின் வெறுப்புப் பேச்சே டெல்லி வன்முறைக்குக் காரணம் என்று எதிர்க் கட்சிகள் முன்வைத்த குற்றம்சாட்டை மறுக்கும் வகையில், எதிர்க்கட்சிகள்தான் வெறுப்பு பேச்சை பேசின என்று கூறிய உள்துறை அமைச்சர், கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தைப் பற்றி மட்டும் கள்ள மௌனம் காக்கிறார். கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தை எவ்வித சமரசமுமில்லால் ஒழித்துக்கட்ட மத்திய அரசும், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு