Published:Updated:

எரிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி எது? அறச்சீற்றம் அடையாமல் யோசிப்போமா?!

தெலங்கானா என்கவுன்டர்
தெலங்கானா என்கவுன்டர்

நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, நாம் உண்மையில் சுதாரித்திருப்போமென்றால் ஹைதராபாத் மருத்துவருக்கு இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்காது.

2012-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இரவு. டெல்லி நகரத்தின் சாலையில், வீட்டுக்குச் செல்ல பேருத்துக்காகக் காத்துக்கொண்டிருந்த நிர்பயா, வீடு திரும்பவில்லை. மறுநாள், தேசத்தையே உலுக்கிய தலைப்புச் செய்தியாகத்தான் திரும்பினார். நள்ளிரவில், பேருந்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 29 டிசம்பர் அன்று அவருடைய உயிர் பிரிந்தது.

நிர்பயா போராட்டங்கள்
நிர்பயா போராட்டங்கள்

தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து, சமூகத்தில் மிகப்பெரிய அறச்சீற்றம் எழுந்தது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என டெல்லியின் தெருக்களில் மக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். தேசம் ஸ்தம்பித்தது.

குற்றம் புரிந்தவர்களில் ஒருவர் 18 வயதுக்குக் குறைவானவர் (Juvenile) , அவரையும் வயது வந்தோராக (Adult) விசாரிக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்தன. அதன் விளைவாக Juvenile Justice Act திருத்தப்பட்டு குற்றம் புரியும் இளம் சிறாருக்கான அளவுகோலாக 16 வயது நிர்ணயிக்கப்பட்டது. நிர்பயா நிதி உருவாக்கப்பட்டு, பெண்கள் பாதுகாப்புக்கான திட்டங்கள் அதன்மூலம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

நிர்பயா சம்பவம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் கழித்து, அதே போன்றதொரு துர்சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்துக்கு நீதி கேட்டு தெலங்கானாவின் வீதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். சமூகத்தில் மீண்டுமொரு அறச்சீற்றம் எழுந்தது. ஆனால், இவை முழுமையான தீர்வுகளைத் தருமா?

ஹைதராபாத் கொலைக் குற்றவாளிகளைத் தெருவில் அடித்துக்கொல்ல (லின்ச்சிங் செய்து) வேண்டும் என சமாஜ்வாடி எம்.பி ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். பலரும் இதே குரல்களை எதிரொலிக்கத் தொடங்கினர். கடந்த சில வருடங்களாக, இந்தியா முழுவதும் நடத்தப்பட்டுவரும் கும்பல் கொலைகளை (Mob Lynching) எதார்த்தப்படுத்துவது போல பேசியிருக்கிறார் என கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.

ஜெயா பச்சன்
ஜெயா பச்சன்
`அதே இடம்; 4 பேரும் 4 திசை!- பெண் மருத்துவர் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

நீதியமைப்பில் நிலவக்கூடிய கால தாமதங்கள், அரசியல் பலம்படைத்த குற்றவாளிகள், எளிதில் பிணையில் வெளியாகி சுதந்திரமாக வலம்வருவது போன்ற விஷயங்களால், பொதுச் சமூகத்தில் நீதியமைப்பின்மீது அதிருப்தி நிலவுகிறது. இத்தகைய கொடூர சம்பவத்தின்பின் எழுகிற அறச்சீற்றத்தின் விளைவாக விசாரணை எதுவுமே வேண்டாம், நேரடியாகக் கொலைசெய்து தீர்ப்பை வழங்கிவிடலாம் என மக்கள் மத்தியில் ஆதங்கம் நிலவுகிறது. அதன் குரலாகத்தான் ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் ஜெயா பச்சனுக்கே இந்த அமைப்பின் மீதிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடே அது.

நேற்று காலை 3.30 மணிக்கு, குற்றம் நடைபெற்ற அதே இடத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் சுமத்தப்பட்ட நால்வரும் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டதை தெலங்கானா மாநிலத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்து மக்கள் வரவேற்றுவருகின்றனர்.

கொண்டாட்டங்கள்
கொண்டாட்டங்கள்

குற்றத்தின் கொடூரத் தன்மை, நீதியமைப்பின் மீதான நம்பிக்கையிழப்பு ஆகியவற்றின் காரணமாக, மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அரசும் நீதியமைப்பும் பொதுப் புத்தியின் அடிப்படையில் யோசித்து செயல்படலாமா என்ற கேள்வி எழுகிறது. சட்டத்தை மக்கள் கையிலெடுப்பது தவறு என கற்பித்துவருகிறோம். அதே சட்டத்தை அரசாங்கம், காவல்துறை கையில் எடுப்பதும் தவறுதான்.

அம்பேத்கர், வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா?

குற்றத்தை நியாயப்படுத்தவோ குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம் என்றோ சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

குற்றத்தை நிரூபித்துத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்கிற நடைமுறையை அரசே முறித்தால், நாளை மக்களும் அதையே கையிலெடுக்க நேரும். அது, விபரீதத்தில்தான் முடியும். ஒருவேளை, குற்றம் புரியாத ஒருவர் இதே போன்றதொரு முடிவை எதிர்கொள்ள நேர்ந்தால்... நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதன் நோக்கத்தையே அது சிதைத்துவிடும். அவ்வாறு நடந்துவிடும் எனச் சொல்வது வெறும் அனுமானம் அல்ல. அவ்வாறு நடந்துள்ள பல சம்பவங்களின் அனுபவப்பாடமே. வாட்சப் வதந்திகளால் இந்தியா முழுவதும் சமீப ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளைக் கவனித்தால், அவை அனைத்தும் வதந்தியே. என்கவுன்டர் சம்பவங்கள் நடைபெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவை போலியானவை என நிரூபிக்கப்பட்ட சம்பவங்களும் நம் நாட்டில் இருக்கின்றன.

Encounter/represntational image
Encounter/represntational image
`உயிருடன் எரிக்கப்பட்டாரா ஹைதராபாத் பெண் மருத்துவர்?!' -சிறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த 4 பேர்

எந்த அளவுகோல்களின் படி வைத்துக்கொண்டாலும் என்கவுன்டரில் கொல்வது என்பது முழுமையான நீதியல்ல... அறச்சீற்றத்திற்கான பதிலாக தற்போது இந்தத் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என நியாயப்படுத்தப்படுகிறது. சட்டத்திற்கு வெளியே செய்யப்படுகிற கொலைகள் (Extra judicial killings) என இதற்கு பெயரிடப்படுகிறது. அரசிடமும் காவல்துறையிடமும் உள்ள இந்த பிரத்யேகமான கருவி எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இந்தியாவில் பல உதாரணங்கள் உள்ளன. இதைத்தான் ஹைதராபாத் கால்நடை மருத்துவருக்கான முழுமையான நீதியாக, அவருக்கு நேர்ந்த கொடூர குற்றத்துக்கான நிரந்தரத் தீர்வாக நாம் கருதுவோமேயானால், நாம் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதோடு நின்றுவிடப் போகிறோமா... மேற்கொண்டு பயணிக்கப்போகிறோமா... தேர்வு செய்யவேண்டியது நாம்தான்.

அடுத்த கட்டுரைக்கு