Published:Updated:

யூடியூபர் `பப்ஜி’ மதன் பிரச்னை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்
யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்

மதன் தன்னுடைய யூடியூப் தளத்தில் பதிவேற்றியுள்ள வீடியோக்களில் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு, அதன் மூலம் பெரும் தொகையை மோசடி செய்துள்ளார் எனப் புகார் எழுந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரும் அளவுக்கு மதனின் பிரச்னை அவ்வளவு தீவிரமானதா?

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட `பப்ஜி’ என்ற ஆன்லைன் விளையாட்டின்போது, ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டதாக மதன்குமார் மாணிக்கம் என்ற மதனை போலீஸார் தேடிவருகின்றனர். சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் அளித்த புகாரில் மதன் (MADAN), மதன் டாக்ஸி 18 + (TOXIC MADAN 18+), பப்ஜி மதன் கேர்ள் ஃபேன் (PUBG Madan Girl fan), ரிச்சி கேமிங் ஒய்.டி (Richie Gaming YT) போன்ற யூடியூப் சேனல்களில் மதன் ஆங்கிரி அட் ஹிஸ் கேர்ள் ஃப்ரெண்ட் (MADAN angry at his girtfriend), ஸ்ட்ரிக்ட்லி 18+ (Strictly 18+), தமிழ் பப்ஜிம் (Tamil PUBGM ) உள்ளிட்ட தலைப்புகளில் வீடியோக்களைப் பார்த்ததாகவும், அவற்றில் பெண்களை மிகவும் ஆபாசமான, அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி ஸ்ட்ரீம் செய்கிறார். அவருடைய வீடியோக்கள் கேட்பவருக்குத் தொல்லை தரும் வகையிலும், எரிச்சலூட்டும் வகையிலும், பெண்களின் கற்பு நெறியை அவமதிக்கும் வகையிலும், பெண்களின் அந்தரங்க விஷயத்தைக் குறிப்பிடும் வகையிலும் உள்ளன. எனவே, அவரது சேனல்களைத் தடை செய்து, அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் மதன்மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இதற்கிடையில் தமிழகம் முழுவதுமிருந்து பப்ஜி மதன் மீது 159 புகார்கள் அந்தந்த மாவட்ட சைபர் பிரிவு போலீஸாரிடம் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சைபர் க்ரைம் போலீஸார் மதனைத் தேடிவருகிறார்கள்.

சென்னை: யூடியூபர் மதனின் மறுபக்கங்கள்..! - மனைவி கிருத்திகா சிக்கியது எப்படி?

மதன் மீதான வழக்குக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுவது ஏன் என வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம். “யூடியூப் தளத்தில் மதனைப்போலப் பலர் ஆபாசமாகப் பேசிவருகிறார்கள். ஆனால், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் விளையாடும் விளையாட்டை, சட்டத்துக்குப் புறம்பாகத் தரவிறக்கம் செய்ததோடு, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் தனது யூடியூப் மூலம் மதன் பேசியிருப்பதால்தான் இந்த அளவுக்கு கவனம் பெற்றுள்ளது. அந்த சேனலின் ஆடியன்ஸில் 12 முதல் 18 வயதுடைய சிறுவர்கள்தான் அதிகம். எனில், ஆன்லைன் கேமில் மதன் வெற்றி பெறும்போது அவரைச் சிறுவர்கள் கதாநாயகனாகப் பார்க்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மணிக்கணக்கில் நீளும் வீடியோக்களில் அவர் பேசும் அனைத்து வார்த்தைகளும் சிறுவர்களுக்குப் புதியவை. கிளர்ச்சியை ஏற்படுத்துபவை. எனவே, அவரை கதாநாயகனாக நினைத்து அவரைப் பின்தொடரும் சிறுவர்கள் அதைப் பிற இடத்தில் பயன்படுத்துவதோடு, அதனால் பாதிக்கப்படவும் வாய்ப்பு அதிகம்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

தன்னுடன் இணையத்தில் பேசும் சிறுமிகளின் புகைப்படங்களை வாங்கி, அவற்றை ஆபாசமாகச் சித்திரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும், அவர்களுடன் ஆன்லைனில் ஆபாசமாகப் பேசி அவற்றைப் பிற யூடியூப் சேனல்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார். சிறார் பாலியல் புகைப்படங்களைப் பார்ப்பதும், வெளியிடுவதும் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் மிகப்பெரிய தண்டனைக்குரிய, அருவருத்தக்க குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

சிறுவர்களை மையமிட்டு ஆபாசமாகப் பேசுவது, வீடியோக்கள் வெளியிடுவதை `பிடோபில்ஸ்’ என அழைக்கிறார்கள். இப்படி பிடோ பில்ஸ் என்பவர்கள் இந்தியாவில்தான் அதிகம் என்று 2015-ம் ஆண்டில் சர்வதேச அளவில் புகார்கள் குவிந்தன. ஆனால், அவை தொடர்பாக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வெளிப்படையாக அது தொடர்பான புகார்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அதில் மாட்டிய முதல் விக்கெட் இந்த டாக்ஸிக் மதனாக இருக்கிறார். எப்படி, பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து சுஷில் ஹரி, மகரிஷி வித்யா மந்திர் எனப் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் வரிசைகட்டினவோ, அதேபோல இந்த பிடோ பில்ஸ் குற்றவாளிகளின் பட்டியலும் நிச்சயம் இனி நீண்டுகொண்டேதான் செல்லும்.

மதன்
மதன்

பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயங்களை உள்ளடக்கமாகவைத்து யூடியூபில் வீடியோக்களைப் பதிவிடும்போது ஃபாலோவர்ஸ் மற்றும் அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. இதனால் இவருக்கு வருமானம் அதிக அளவில் கிடைக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவடைந்தது. #NowAtVikatan
மதனை முன்னுதாரணமாகவைத்து இதே போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு அதிகம். இணைய தளங்களில் ஆபாசங்கள் அதிகரிப்பதற்கும் இவர் ஒரு காரணமாக இருக்கிறார். தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாகக் கூறி பல லட்ச ரூபாய் வசூல் செய்து அதையும் மோசடி செய்துள்ளார். இப்படிப் பல குற்றங்களுக்கு இவர் காரணமாக இருப்பதால்தான் இவர் மீதான வழக்கு தீவிரமாகப் பார்க்கப்படுகிறது.
கார்த்திகேயன், வழக்கறிஞர்

மதன்மீது மேற்கொள்ள வாய்ப்புள்ள சட்ட நடவடிக்கைகள்?

மதன் செய்தவற்றை நான் கவனித்த வகையில், ஆபாசமான வார்த்தைகள் மூலம் பெண்களைத் திட்டியதால் 507 என்ற பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கலாம். பெண்களை ஆபாசமாகப் பேசுவது என்ற வகையில் பிரிவு 67, குழந்தைகளைப் பற்றிப் பேசியதால் பிரிவு 67 பி அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யலாம். இவற்றில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், போக்சோ சட்டத்தின் அடிப்படையிலும் இவர்மீது வழக்கு தொடரப்படலாம். போக்சோ தவிர இவையெல்லாம் எளிதில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளவை என்பதால் “போலீஸ் என்னை ஏதும் செய்ய முடியாது” எனத் தெனாவட்டாகப் பேசியிருக்கலாம். ஆனால், இவர் செய்த குற்றங்கள் அனைத்தும் கீழ்த்தரமானவை என்பதால் எந்த நீதிபதியும் அவ்வளவு எளிதாக ஜாமீன் கொடுக்க மாட்டார்கள். மதனின் மனைவிதான் சேனல்களையெல்லாம் நிர்வகித்துவந்திருக்கிறார். கன்டென்ட் மட்டும்தான் மதனுடையது. நிர்வாகமெல்லாம் அவருடைய மனைவி என்பதால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒரு குற்றத்துக்கு உதவி செய்வதும் மிகப்பெரிய குற்றம் என்பதாலும், அவரும் வீடியோவில் ஆபசமாகப் பேசியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, அவரது கைது நியாயமானதுதான். எட்டுமாதக் குழந்தை என்பதால் பால் ஊட்டுவதை நிறுத்தியிருக்க மாட்டார்கள். அதனடிப்படையில்தான் குழந்தையோடு அவரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

மதன்
மதன்

போலீஸார் கைதுசெய்துவிட்டார்கள் என்றால், சினிமாவில் காட்டுவதுபோல எல்லாம் எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டார்கள். அவர்களைக் கைதுசெய்து விசாரணை செய்வார்கள். மற்றபடி அதைப் பெரிய அளவில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என மதனின் வழக்கு முக்கியத்துவம் தரப்படுவதற்கான காரணத்தையும், அவரது கைது தொடர்பான சட்ட நுணுக்கங்களையும், அவருக்கு வழங்கவுள்ள தண்டனைகள் குறித்தும் விளக்கினார்.

அடுத்த கட்டுரைக்கு