Election bannerElection banner
Published:Updated:

குடியால் குடும்பத்தில் சண்டை, தீக்குளித்து இறந்த மனைவி... மதுவால் தொடரும் அவலங்கள்!

சங்கர் - பார்வதி.
சங்கர் - பார்வதி.

மதுபானம் வாங்குவதற்கு மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் முடிவில், இரண்டு உயிர்களும் பரிதாபமாகப் பிரிந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ளது முளைகிரிபட்டு கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் (55) - பார்வதி (50) தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். சென்னையில் வசித்து வரும் தன் மகள் மற்றும் மகன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 23-ம் தேதி தன் மகள் வீட்டிலிருந்து தங்கள் கிராமத்துக்கு கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். 24-ம் தேதி இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

அன்றைய தினம் குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார் சங்கர். மேலும், மது வாங்கிக் குடிப்பதற்காகத் தன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். முன்னரே அவர் குடித்திருந்ததால் பணம் தர மறுத்துள்ளார் பார்வதி. ஆனால், தொடர்ந்து பணம் கேட்டு பிரச்னை செய்துள்ளார் சங்கர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே உச்சக்கட்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சங்கர் - பார்வதி.
சங்கர் - பார்வதி.

கோபத்தில் பார்வதி மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ந்துபோன சங்கர், தன் மனைவியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அவர் மீதும் தீ பரவியுள்ளது. அந்த சமயமே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் பார்வதி. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சங்கரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். உடல் முழுவதும் தீக் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் மறுநாள் காலை 25-ம் தேதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானங்களால் குடும்பங்கள் அழிவது இது முதல் முறை அல்ல. இதுபோல பல குடும்பங்களும் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருவது தொடர்கதையாகிவிட்டது. சுதந்திர இந்தியாவில் 1971-ம் ஆண்டு வரை அமலில் இருந்த மதுவிலக்கு, முதன்முறையாக தி.மு.க ஆட்சியின்போது 1971-ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆட்சியின் போதும், மதுவிலக்கைக் கொண்டு வருவதும், அதை ரத்து செய்வதுமாகப் போய்க்கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக `டாஸ்மாக்' என்பது தமிழகம் முழுவதும் வேரூன்றத் தொடங்கியது. இன்று பல குடும்பப் பெண்கள், குழந்தைகள், எளியோர்களின் கண்ணீருக்குக் காரணமாகி வருகிறது இந்த டாஸ்மாக்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மதுபான கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்' என்று அறிவித்திருந்தார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றதும், `டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்படும், 500 சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும்' என அறிவித்தார்.

அவர் சொன்னது போலவே மதுக்கடைகள் குறைந்து, `மது இல்லாத சமூகமாக மாறும் நம் தமிழகம்' என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டது. ஆனால், மதுக் கடைகள் மூடப்பட்டாலும் அது தீர்வாகவில்லை.

நெடுஞ்சாலையோரம் வாயிலைக் கொண்ட கடைகள் மூடப்பட்டு, பின்புறமாகக் கதவு திறக்கப்பட்டது வேறு கதை. இந்த மதுபானங்களால், அன்றாட உணவுக்காக உழைக்கும் ஏழை எளிய மக்களும், நடுத்தர மக்களும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திருமணமான பல இளம் பெண்களின் வாழ்க்கை முதல் அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு வரை அடிப்படை வாழ்வே கேள்விக்குறி ஆகிவிடுகிறது இந்த மதுவால்.

தமிழக அரசு
தமிழக அரசு

இன்றைய நாள்களில், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வடிக்கும் மொத்த கண்ணீரின் வடிவமாகவே இருக்கிறது இந்த டாஸ்மாக். பண்டிகை நாள்களில் பல கோடி மதிப்பில் மதுபானங்களை விற்பனை செய்து, வருத்தத்துக்குரிய சாதனை படைத்துக் கொண்டுள்ளது நமது தமிழக அரசு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு