Published:Updated:

சேலம்: `அரசு கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் பெண் தற்கொலை’ -உறவினர்கள் அதிர்ச்சி

சேலம்
சேலம் ( எம்.விஜயகுமார் )

`மாரியம்மாளின் மரணத்துக்கு சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளே காரணம். அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை முகாமில் உள்ள ஊழியர்கள் சரியாகக் கண்காணிக்காததால்தான் மாரியம்மாள் இறந்தார்.'

சேலத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்ததையடுத்து அவரோடு தொடர்பில் இருந்த உறவினர்கள் சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தனிமைப்படுத்தினார்கள். இந்நிலையில் தனிமையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க மாரியம்மாள் என்ற பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அரசு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வரும் முகாமில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாரியம்மாள்
மாரியம்மாள்

சேலம் சீலநாயக்கன்பட்டி ஒன்பதாம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மலர்வண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த 30-ம் தேதி அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து மலர்வண்ணனோடு தங்கி இருந்த மாரியம்மாள் மற்றும் உறவு பெண் தவமணி மற்றும் தவமணியின் மகன் ஏழுமலை ஆகியோர் அழைத்து வரப்பட்டு சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

முகாம்
முகாம்

பிறகு மாரியம்மாளுக்கும் அவருடன் தங்கி இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் வந்ததது. இருந்தாலும் ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்நிலையில் மாரியம்மாள் நேற்று இரவு தங்கி இருந்த அறைக்கு பக்கத்தில் இருந்த அறையில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதை அறிந்த மாரியம்மாளின் உறவினர் தவமணி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். இதை அறிந்த மாரியம்மாளின் உறவினர்கள் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு வந்து அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். 'மாரியம்மாளின் மரணத்துக்கு சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளே காரணம். அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை முகாமில் உள்ள ஊழியர்கள் சரியாகக் கண்காணிக்காததால்தான் மாரியம்மாள் இறந்தார்' என்று கோபமடைந்தார்கள். பிறகு, காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள். பிறகு, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

உறவினர்கள் கூட்டம்
உறவினர்கள் கூட்டம்

இதுபற்றி சேலம் சிட்டிஹெல்த் அலுவலர் பார்த்திபனிடம் கேட்டதற்கு, ''மாரியம்மாளின் உறவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து மாரியம்மாள் உட்பட அவருடைய உறவினர்கள் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தனிமைப்பட்டார்கள். இந்நிலையில் குடும்ப சூழ்நிலைக் காரணமாக நேற்று இரவு மாரியம்மாள் தற்கொலை செய்துகொன்டார். அங்கிருக்கும் ஊழியர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். ஊழியர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டார்'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு