Published:Updated:

`மாதம் ரூ.5,000; வொர்க்கிங் பாட்னர்; லட்சங்களில் லோன்!'- தேனிப் பெண்ணை அதிரவைத்த `ஹாலோபிளாக்' மோசடி

பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளோடு இன்று கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

தர்ணாவில் ஈடுபட்ட ஜெயந்தி
தர்ணாவில் ஈடுபட்ட ஜெயந்தி

தன்னிடம் சிலர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளோடு இன்று கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி கலெக்டர் அலுவலகம்
தேனி கலெக்டர் அலுவலகம்

தேனி ஃபாரஸ்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் ஜெயந்தி. பட்டதாரிப் பெண்ணான இவருக்கு, இரண்டு குழந்தைகள். தேனி பகவதி அம்மன் கோயில் தெருவில் இயங்கிவந்த டிரஸ்ட் ஒன்றில் கணக்காளராக வேலைபார்த்த இவர், டிரஸ்ட்டை நடத்திவந்த ஆசிரியர் முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ், அரசு ஒப்பந்ததாரர் ஆண்டனிராஜ் ஆகியோர், தன்னிடம் ஆசை வார்த்தை கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் கூறிய ஜெயந்தி, கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார்.

இதுதொடர்பாக ஜெயந்தி கூறும்போது, ``நான் வேலைபார்த்த டிரஸ்ட்டை நடத்தும் முத்துக்குமார், அவரது நண்பர் ஆண்டனிராஜை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அரசு இலவசக் கழிப்பறை கட்டும் ஒப்பந்த வேலை செய்துகொண்டிப்பதாகவும், அதற்காக ஹாலோபிளாக் கற்களை வெளியே இருந்து வாங்கிக்கொண்டிருப்பதாகவும் என்னிடம் கூறினார். பின்னர் இருவரும், `வங்கிக் கடன் மூலமாக ஹாலோபிளாக் கற்கள் செய்யும் தொழிற்சாலை அமைத்தால் நல்ல லாபம் கிடைக்கும்' என என்னிடம் கூறினார்கள். அதற்கு, என்னுடைய பட்டப்படிப்புச் சான்றிதழை வைத்து சிண்டிகேட் வங்கியில் லோன் கேட்கலாம் என்றும் கூறினர். `எனக்கு இதில் அனுபவம் இல்லை’ எனக் கூறினேன். அதற்கு அவர்கள், `நீங்கள் எந்த வேலையும் செய்ய வேண்டாம்.

தேனி கலெக்டர் அலுவலகம்
தேனி கலெக்டர் அலுவலகம்

எங்களை வொர்க்கிங் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள். மாதம் 5,000 ரூபாய் சம்பளம் கொடுங்கள். வருட இறுதியில் லாபத்தைப் பிரித்துக்கொள்ளம்’ என ஆசை வார்த்தை கூறினர். அவர்களின் பேச்சை நம்பினேன். கோவையைச் சேர்ந்த ஆதித்யா கம்பெனியில், ஹாலோபிளாக் கற்கள் செய்யும் இயந்திரம் வாங்குவதற்கான ரூ.9.41 லட்சத்துக்கான கொட்டேஷனைப் பெற்றுக்கொடுத்து, அதை தேனி சிண்டிகேட் வங்கியில் கொடுக்க வைத்தனர்.

வங்கியில் இருந்து அத்தொகையை நெஃப்ட் மூலமாக ஆதித்யா கம்பெனிக்கு அனுப்பினர். பின்னர், என்னுடைய வங்கிக் கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வந்தது. `என்ன பணம் இது?’ எனக் கேட்டேன். `அந்த கம்பெனியிடம் பேசி, இயந்திரத்தின் விலையைக்க் குறைத்துவிட்டேன்’ என கூறி, அப்பணத்தை என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

குழந்தைகளுடன் ஜெயந்தி
குழந்தைகளுடன் ஜெயந்தி

பின்னர், கம்பெனி ஆரம்பிக்கும் வேலைகள் நடந்தன. தொடர்ந்து, கம்பெனிக்கு பொருள்கள் சில வாங்க வேண்டும் எனக் கூறி, 2.86 லட்ச ரூபாய் லோன் கேட்டு சிண்டிகேட் வங்கியில் மீண்டும் அப்ளை செய்ய வைத்தனர். அதன்படி, அத்தொகையும் வந்தது. வைகை அணைச் சாலையில், ஜெயம் ஹாலோ ப்ளாக் என்ற கம்பெனியை ஆரம்பித்து நடத்திவந்தோம். மாதங்கள் செல்லச் செல்ல என்னிடம் பல விசயங்களை மறைக்க ஆரம்பித்தனர். பணத்தை கையாடல் செய்யத் தொடங்கினர்” என்ற ஜெயந்தி தொடர்ந்தார்.

ஆன்லைன் வியாபாரம்; 2 ஆயிரம் கோடி வசூல்!- ஈரோட்டில் பிட்காயின் பெயரில் மோசடி

``அவர்கள் செய்த தவறுகளை எல்லாம் நான் சுட்டிக்காட்ட ஆரம்பித்தேன். அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.`உனக்கு மாதம் 5,000 ரூபாய் பணம் தருகிறோம். அமைதியாக இருந்தால் வங்கிக் கடனையும் அடைத்துவிடுவோம். அதிகமாகப் பேசினால் நாங்கள் ஒதுங்கிக்கொள்வோம்’ எனக் கூறினர். பின்னர், அவர்கள் என்னை வைத்து என்னென்ன காரியங்களில் ஈடுபட்டுள்ளனர் என விசாரிக்க ஆரம்பித்தேன். கம்பெனிக்கு இயந்திரம் வாங்க, வங்கியில் இருந்து அனுப்பிய 9.41 லட்சம் பணத்தை, எனக்கு ஒரு லட்சம், உமா என்ற பெண்ணிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம், அந்தோனிராஜ் என்பவருக்கு 1 லட்சம், ஜோசப் என்பவருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம், முத்துக்குமாரின் உறவினர் ஒருவருக்கு 1 லட்சம் எனப் பிரித்து அனுப்பி, அதை முத்துக்குமாரும், ஆண்டனிராஜும் பிரித்துக்கொண்டது தெரிந்தது. சிறிய தொகைக்கு இயந்திரம் வாங்கிவிட்டு சுமார் 6 லட்சம் வரை சுருட்டிக்கொண்டனர். இச்சம்பவம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் அவர்களை விட்டு விலகிவிட்டேன்.

ஆன்லைன் வியாபாரம்; 2 ஆயிரம் கோடி வசூல்!- ஈரோட்டில் பிட்காயின் பெயரில் மோசடி

ஆனால், உற்பத்தி லாபத்தை அவர்களே வைத்துக்கொண்டனர். முதல் லோன், இரண்டாவதாக வங்கியில் நான் வாங்கிய 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் லோன் என மொத்தமாக என்னை நெருக்கியது. கடனைக் கட்ட முடியாமல் தவிக்கிறேன். இதற்கிடையில், கம்பெனி இருந்த இடத்தின் உரிமையாளர் பிரகாஷிடம் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை, என்னுடைய அனுமதி இல்லாமல் ரத்துசெய்துவிட்டனர். இதனால், என்னால் கம்பெனியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. என்னை ஏமாற்றிய அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் குழந்தைகளோடு கலெக்டர் அலுவலக வாசலில் தற்கொலை செய்துகொள்வேன்” என்றார் கண்ணீரோடு.

தர்ணாவில் ஈடுபட்ட ஜெயந்தியிடம், கலெக்டர் அலுவகப் பணியில் இருந்த காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச்சென்றனர். ஜெயந்தியின் தர்ணா போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பானது.