Published:Updated:

`கோயிலில்வைத்து அத்துமீறினார்!’ - இந்து முன்னணி மாவட்டத் தலைவர் மீது எஸ்.பி அலுவலகத்தில் பெண் புகார்

எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த பெண்
எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த பெண்

`அவர் என் மகனை அழைத்துவந்து கோயிலில் தங்கும்படியும், அவர் நோயைத் தீர்த்துத் தருவதாகவும் சொன்னார். அதை நம்பி நான் அங்கு சென்று என் மகனுடன் தங்கினேன்' என அந்தப் பெண் புகாரில் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணித் தலைவராக இருப்பவர் ராஜேஷ்வரன். இவர்மீது திங்கள்நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், `எனக்குத் திருமணமாகி கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இப்போது இரண்டு மகன்களுடன் வசித்துவருகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அது பற்றி குளச்சல் அருகே குளவிளைப் பகுதியில் கோயில் நடத்திவரும் ராஜேஷ்வரன் என்பவரைச் சந்தித்துக் கூறினேன்.

அவர் என் மகனை அழைத்து வந்து கோயிலில் தங்கும்படியும், நோயைத் தீர்த்து தருவதாகவும் சொன்னார். அதை நம்பி நான் அங்கு சென்று என் மகனுடன் தங்கினேன். அப்போது அவர் கோயிலில்வைத்து என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அது பற்றி நான் புகார் அளிப்பேன் என்றவுடன், என்னைச் சமாதானப்படுத்தி, என் கழுத்தில் தாலிகட்டி செட்டியார்மடம் பகுதியில் வீடு எடுத்து தங்கவைத்தார்.

கோயிலில் வைத்து தவறாக நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்து முன்னணி குமரி மாவட்ட தலைவர் ராஜேஷ்வரன்
கோயிலில் வைத்து தவறாக நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்து முன்னணி குமரி மாவட்ட தலைவர் ராஜேஷ்வரன்

அதன் பிறகு ஒழுங்காக வீட்டுக்கு வருவதில்லை. அதுபற்றி விசாரித்தபோது என்னைத் திருமணம் செய்வதற்கு முன்னும், பின்னும் சுமார் 15 பெண்களைக் கோயிலுக்கு வரவழைத்து, ஆசைவார்த்தை கூறி அவர் தவறாக நடந்திருப்பதாகத் தெரியவந்தது. அதுபற்றி 2016-ல் நான் இரணியல் காவல் நிலையத்திலும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்திருக்கிறேன். அவர் ஓர் இயக்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பதால், அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பித்துவருகிறார்.

07.06.2021 அன்று என்னைப் பதிவு திருமணம் செய்வதாகக் கூறி வழக்கறிஞர் மூலம் ஆவணம் செய்து தந்திருக்கிறார். எனவே போலிச் சாமியாரான ராஜேஷ்வரனைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

இது குறித்து ராஜேஷ்வரனிடம் பேசினோம். ``நான் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறியது உண்மைதான். ஆனால், அந்தப் பெண்ணுக்குப் பலருடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

என் மீது புகார் அளித்த அதே பெண், தனது கணவருடன் தொடர்பில் இருப்பதாக திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தக்கலை டி.எஸ்.பி அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி புகார் அளித்திருக்கிறார். தொடர்ச்சியாகப் பலர் மூலம் என்னை மிரட்டுகிறார்கள். 1996-ல் இருந்தே நான் இயக்கப் பொறுப்பில் இருக்கிறேன், என்மீது எந்தப் புகாரும் இல்லை. என்னைக் கேவலப்படுத்துவதற்காக இது போன்று நடந்துகொள்கிறார்கள்" என்றார். எது உண்மை என்பது போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும்.

பாலியல் தொழிலுக்கு அழைக்கப்பட்ட `வெல்கம் கேர்ள்ஸ்'; அடி வாங்கிய ஈவென்ட் மேனேஜர்; என்ன நடந்தது?
அடுத்த கட்டுரைக்கு