விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகர் பகுதியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணும், மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை ஹரிஹரன், அந்த இளம்பெண்ணுக்கே தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்து வைத்துள்ளார். இந்த வீடியோவைத் தன் நண்பர்களுக்குப் போட்டு காண்பித்துள்ளார். தொடர்ந்து நண்பர்கள் மூன்று பேரும் இளம்பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ததற்கு சம்மதித்த ஹரிஹரன், இளம்பெண்ணுடன் இருந்த ஆபாச வீடியோவையும், செல்போன் எண்ணையும் கொடுத்துப் பேச அனுமதித்துள்ளார்.

இதனால் குஷியான மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது ஆகியோரும் அடுத்தடுத்து இளம்பெண்ணுக்கு போன் செய்து, ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் இவர்களோடு மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கும் தெரியவந்து அவர்களும் ஆபாச வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டி, தங்களது இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக நடந்த இந்தப் பாலியல் அத்துமீறலை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண் இது குறித்து விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இளம்பெண்ணின் காதலன் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டு பேரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பள்ளி மாணவர்கள் நான்கு பேரும், 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் மதுரை தெப்பக்குளத்திலுள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜூனைத் அகமது, விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞர் அணி அமைப்பாளராகப் பதவி வகித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம்பெண்ணின் காதலன் ஹரிஹரனும் 22-வது வார்டு இளைஞரணி உறுப்பினராக உள்ளார்.

இது விருதுநகர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பட்டியலின இளம்பெண் மீதான இந்தப் பாலியல் அத்துமீறல் விவகாரத்தை, பாரதிய ஜனதா கட்சி கையிலெடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் திமுக அரசைக் கண்டித்தும், திமுக நிர்வாகிகளால் இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் அத்துமீறலைக் கண்டித்தும் போராட்டம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நாளுக்கு நாள் விஸ்வரூபமெடுக்கும் இந்த விவகாரத்தில், அரசியல் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.