Published:Updated:

கடலூர்: தொடரும் சாதி கொடுமை; தரையில் அமர வைக்கப்பட்ட பெண் ஊராட்சித் தலைவர்! - அதிர வைத்த புகைப்படம்

தரையில் அமர வைக்கப்பட்ட பெண் ஊராட்சித் தலைவர்
தரையில் அமர வைக்கப்பட்ட பெண் ஊராட்சித் தலைவர்

"துணைத் தலைவர் மோகன்ராஜ் எப்பவுமே அப்படித்தான் பண்ணுவாரு. நீ தரையில் உக்காரனும் சொல்லுவாரு. தலைவர் பதவியை நான் தான் பாப்பேன். எல்லா கையெழுத்தையும் நான் தான் போடுவேன் கலெக்டருக்கிட்டக்கூட போயிக்கன்னு சொல்லுவாரு” என்கிறார்  ராஜேஸ்வரி

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திட்டை ஊராட்சி. இந்த கிராமத்தில் ஊராட்சிமன்றத் தலைவராக ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பொறுப்பு வகித்து வருகிறார்.  துணைத் தலைவராக  மோகன்ராஜ் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி,  கடந்த ஜூலை மாதம்  நடந்த கூட்டத்தில்  தரையில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

பஞ்சாயத்துலாம் ரேவதி புருஷன்தான் பார்த்துக்குவாரு! - ஆத்துப்பாக்கம் அமிர்தம் விவகாரத்தில் நடந்தது என்ன?

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஊராட்சி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் ஒருவர் மட்டுமே பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி சாதிய ரீதியில் ஒதுக்கப்படுகிறார் என்று குற்றச்சாட்டு நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது.

கடந்த சுதந்திரதின விழாவில் கூட தலைவர் ராஜேஸ்வரியை தேசியக்கொடியை ஏற்ற விடாமல், மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவரான துணைத்தலைவர் மோகன்ராஜ் கொடியை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் துணைத் தலைவர் உள்ளிட்ட அனைவரும் இருக்கையில் அமர்ந்திருக்க, தலைவரான ராஜேஸ்வரி தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக துணைத்தலைவர் ராஜ்மோகன் , ஊராட்சி செயலர் சிந்துஜா ஆகியோர் மீது ராஜேஸ்வரி புவனகிரி காவல் நிலையததில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து புவனகிரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் முன்னிலையில் நடத்தப்பட்ட விசாரணையின்போது விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உடனிருந்தனர். விசாரணையின் முடிவில் ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலர் சிந்துஜா ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஊராட்சி செயலர் பொறுப்பு வகித்து வந்த சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.

தரையில் அமர வைக்கப்பட்ட பெண் ஊராட்சித் தலைவர்
தரையில் அமர வைக்கப்பட்ட பெண் ஊராட்சித் தலைவர்

இது தொடர்பாக ராஜேஸ்வரியிடம் பேசினோம். "துணைத் தலைவர் மோகன்ராஜ் எப்பவுமே அப்படித்தான் பண்ணுவாரு. நீ தரையில் உக்காரனும் சொல்லுவாரு. தலைவர் பதவியை நான் தான் பாப்பேன். எல்லா கையெழுத்தையும் நான் தான் போடுவேன். நீ யாருகிட்ட வேணும்னாலும் போயிக்க. கலெக்டருக்கிட்டக்கூட போயிக்கன்னு சொல்லுவாரு. பஞ்சாயத்தை நீ கூட்டுறியா இல்ல நான் கூட்டவான்னு கேக்குறாரு. எல்லத்தையும் அவரே செய்யனும்னா தலைவருன்னு நான் எதுக்கு இருக்கேன். நான் எவ்வளவோ அனுசரிச்சிப் போனேன் சார். முடியாமத்தான் புகார் குடுத்தேன்" என்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அமிர்தம். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவரைக் கடந்த சுதந்திர தினத்தன்று தொடக்கப் பள்ளியில் கொடியேற்ற அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் சென்ற அவரை கொடியை ஏற்ற விடாமல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அவமானப்படுத்திய விவகாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருவள்ளூர்: `ஆட்சியர், எஸ்.பி முன்னிலை!’ - தேசியக் கொடியேற்றினார் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம்
அடுத்த கட்டுரைக்கு