Published:Updated:

அருப்புக்கோட்டை: திருடன் என நினைத்து போலீஸில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர் சாவு! - என்ன நடந்தது?

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துவந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அருப்புக்கோட்டை: திருடன் என நினைத்து போலீஸில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர் சாவு! - என்ன நடந்தது?

அருப்புக்கோட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துவந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துவந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நடந்தது என்ன என்பதை அறிந்துகொள்ள போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 30). பட்டதாரியான இவர், சாயப்பட்டறையில் பணிபுரிந்துவந்தார். தங்கப்பாண்டிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி, அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகரைச் சேர்ந்த சமையல் தொழிலாளி செளந்தரபாண்டியன் என்பவரின் வீட்டுச் சுவர் ஏறிக் குதித்த தங்கபாண்டி, கதவை தட்டியிருக்கிறார்.

அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை

ஏற்கெனவே அந்தப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணம்-நகைக்காக ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றதால், தங்கப்பாண்டி சுவர் ஏறிக்குதிப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 'திருடன்.. திருடன்..' எனக் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து உஷாரான பகுதிப் பொதுமக்கள் தங்கப்பாண்டியைச் சுற்றிவளைத்துப் பிடித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸில் ஒப்படைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிடிபட்ட தங்கப்பாண்டியிடம் போலீஸ் விசாரணை நடத்தியபோது, அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் சற்று மனநிலை குழம்பிய முறையில் நடந்துகொண்டார். எனவே தங்கபாண்டியைக் காப்பகத்தில் சேர்க்க அறிவுறுத்தி, அவர் உறவினர்களுடன் அனுப்பிவைத்தோம். இதைத் தொடர்ந்து, பிற்பகலில் ராமனுஜபுரத்திலுள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கப்பாண்டியை அவர் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். காவல் நிலையத்திலிருந்து, தங்கப்பாண்டி காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட தகவல் அறிந்த எம்.டி.ஆர் நகர் மக்கள், `நாங்க பிடிச்சுக் கொடுத்த திருடனை பைத்தியம்னு சொல்லி போலீஸ் தப்பிக்கவெச்சுட்டாங்க' எனக் கூறி அருப்புக்கோட்டை நகராட்சி சேர்மன் சுந்தரலட்சுமி வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

மருத்துவமனை
மருத்துவமனை

தொடர்ந்து அவர்கள் சாலைமறியலிலும் ஈடுபட முயன்றனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான நாங்கள் வேறு வழியின்றி மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்ட தங்கப்பாண்டியை மாலையில் மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தோம். ஆனாலும், அவர் நடவடிக்கைகள் தொடர்ந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்போலவே எந்தவித வித்தியாசமும் இன்றி தொடர்ந்தது. இதனால் இரவில் மீண்டும் தங்கப்பாண்டியை காப்பகத்திலேயே ஒப்படைத்துவிட்டோம்.

இந்த நிலையில் காப்பகத்தில் இருந்த தங்கப்பாண்டிக்கு, 14-ம் தேதி அதிகாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காப்பகப் பணியாளர்கள் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கப்பாண்டி இறந்துவிட்டார். ஆனால், அவரின் உறவினர்கள்‌ போலீஸ் அடித்துக் கொன்றுவிட்டதாக வீண்பழி சுமத்துகின்றனர். இது அபாண்டமான‌ குற்றச்சாட்டு. காவல் நிலையத்தில் தங்கப்பண்டியிடம் விசாரணை நடத்துகையில், `போலீஸ் சொல்லித்தான் நான் அந்த வீட்டுக்குள்ள ஏறிக் குதிச்சேன்' என்றார். இது எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவரிடம், எந்த போலீஸ் உன்னை இப்படி செய்யச் சொன்னது எனக்கேட்டதற்கு, `நெஞ்சுக்குழியைக் கைகாட்டி இங்கிருந்து என் தலைக்குள்ள போலீஸ் குரல் கேட்கும். மைக் போட்டு என் தலைக்குள்ள சொல்லும். அதுபடிதான் நான் செஞ்சேன். உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா, நீங்களும் கேட்டுப் பாருங்க' என்று சொல்லி எங்களைப் பதறவிட்டார். இருந்தாலும், தங்கப்பாண்டியை அவர் வழியில் சென்று விஷயத்தை வாங்க வேண்டும் என்பதற்காக சிறுபிள்ளைத்தனமாக அவர் நெஞ்சுக்குழியிலும் காதுவைத்து கேட்டும் பார்த்தோம்.

காவல் அலுவலகம்
காவல் அலுவலகம்

அப்போதும் அவர், `இன்னும் நல்லா அழுத்தமா காதுவெச்சு கேளுங்க சார்.. அப்பத்தான் உங்களுக்குக் கேட்கும்.. இல்லைன்னா எனக்கு மட்டும்தான் அந்தக் குரல் கேட்கும்' எனச் சொல்லி எங்களை அதிரச் செய்தார். இப்படியான‌ செய்கையுள்ள மனிதரை போலீஸ் எப்படி அடிக்க முடியும்‌... கடைசியாக அவரை, இங்கிருந்து காப்பகத்துக்கு அனுப்பும்போதுகூட டீ வாங்கிக்கொடுத்துத்தான் அனுப்பினோம். அதையும் அவர், மகிழ்ச்சியாகக் குடித்துவிட்டு தலையாட்டிவிட்டுச் சென்றார். தங்கப்பாண்டி நடந்துக்கொண்ட விதம், அவரை போலீஸ் நடத்திய விதம், காவல் நிலையத்திலிருந்து காப்பகத்துக்கு அழைத்துச்செல்லும்போது அவரின் நடவடிக்கைகள் என எல்லாவற்றுக்கும் ஆதாரம் எங்களிடம்‌ உள்ளது" எனக் கூறினர்.

இதற்கிடையில், தங்கப்பாண்டியின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த தங்கப்பாண்டியின் உறவினர்கள், அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகப் புகார் தெரிவித்து, அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதேபோல் தங்கபாண்டியின் சொந்த ஊரான செம்பட்டியிலும் சாலைமறியல் நடத்தப்பட்டது. இதனால் ராமேஸ்வரம்-ஆத்திப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இது பற்றி தகவலறிந்து வந்த டி.ஐ.ஜி பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், கோட்டாட்சியர் கல்யாணக்குமார், வட்டாட்சியர் அறிவழகன், சரக காவல் துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எஸ்.பி.மனோகர்
எஸ்.பி.மனோகர்

அப்போது பேசியவர்கள், ``எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தங்கப்பாண்டியின் உடலை வாங்க மாட்டோம். தங்கப்பாண்டியின் மரண வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். கொலையாளிகளைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கப்பாண்டியின் பிரேத பரிசோதனை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்திப் பேசினர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அதிகாரிகள், "மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் தங்கப்பாண்டியின் உடற்கூறாய்வு நடப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவின்படி, தவறு செய்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மரணம்
மரணம்

இந்த நிலையில், தங்கப்பாண்டியின் உடற்கூராய்வு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அவரின் குடும்பத்தினர் ஒத்துழைக்க மறுத்ததால் நேற்று நடைபெறவிருந்த உடற்கூராய்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்தச் சூழலில், நீதிமன்ற உத்தரவுபடி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் இன்று உடற்கூராய்வு நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வீண் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்க அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், தங்கப்பாண்டி உண்மையில் மனநிலை சரியில்லாதவர்தானா என்பதை அறிய, அவரை போலீஸில் பிடித்துக்கொடுத்த எம்.டி.ஆர்.நகர் பகுதிவாசிகளிடம் பேசினோம். ``திருடனை, பைத்தியம்னு சொல்லி எல்லாத்தையும் ஏமாத்துறாங்க. அவனை நாங்க பலமுறை இந்த ஏரியாவுல பார்த்திருக்கோம். மனநிலை சரியில்லாத ஆளாக‌ இருந்தால் எப்படி நிதானத்தோடு எல்லாம் செய்ய முடியும்... இறந்துபோன தங்கப்பாண்டிக்கு டூ வீலர் ஓட்டத்தெரிஞ்சிருக்கு. போன் பயன்படுத்த தெரிஞ்சிருக்கு. நாம பேசும்போது அதை புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்லத் தெரிஞ்சிருக்கு. ஆனால், சுவர் ஏறிக் குதிக்கும்போது மட்டும் மனநிலை சரியில்லாத ஆளாக மாறிடுறாரா?" என்ற கேள்வியோடு முடித்துக்கொண்டனர்.