Published:Updated:

பொங்கல் பொருள்: `புளியில் பல்லி; தந்தைமீது புகார்!' - மன உளைச்சலில் மகன் தீக்குளித்துத் தற்கொலை?!

பொங்கல் பொருள் விவகாரம் - தற்கொலை
News
பொங்கல் பொருள் விவகாரம் - தற்கொலை

பொங்கல் பரிசுத்தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருந்ததாகக் குற்றம்சாட்டிய பயனாளிமீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததால், அவரின் மகன் மன உளைச்சலடைந்து, தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியிலிருக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கூட்டுறவுப் பண்டகக் கடை எண் இரண்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்குத் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. கடந்த ஏழாம் தேதி, தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்த 70 வயதாகும் நந்தன் என்ற முதியவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரித்துப் பார்த்திருக்கிறார். அப்போது, புளி பார்சலில் இறந்துபோன பல்லி கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்து, மீண்டும் ரேஷன் கடைக்கு வந்தவர், புளி பார்சலை மாற்றித்தருமாறு கடை ஊழியர் சரவணனிடம் கேட்டிருக்கிறார்.

முதியவர் நந்தன்
முதியவர் நந்தன்

ரேஷன் கடை பணியாளர், வேறு பார்சலைத் தர மறுத்ததுடன், ‘பொருள்களை சப்ளை செய்த ஆளுங்கட்சியினரிடம் போய்க் கேள்’ எனச் சொல்லி அலட்சியப்படுத்தும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவலறிந்து அங்கு வந்த செய்தியாளர்களிடம், நடந்ததைக் கூறினார் நந்தன். ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதாக நந்தன்மீது ரேஷன் கடை ஊழியர் சரவணன் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தவறான தகவலைப் பரப்பியதாக நந்தன்மீது பிணையில் வெளியில் வர முடியாத பிரிவில் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால், நந்தனும் அவரின் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த நந்தனின் மகன் குப்புசாமி (36), தற்கொலை எண்ணத்தில் நேற்று பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். 80 சதவிகித தீக்காயம் இருந்ததால், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டிருந்த குப்புசாமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்யக் கோரி, திருத்தணி - அரக்கோணம் சாலையில் முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.பி கோ.ஹரி தலைமையில் அ.தி.மு.க-வினர் 300-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்
போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் கூறுகையில், ``கால் கிலோ புளிக்காக முதியவர் நந்தன் விளம்பரம் தேடவேண்டிய அவசியமில்லை. அவர் அப்படியான நபரும் இல்லை. நல்ல மனிதர். புளியில் பல்லி கிடப்பதாகப் புகார் சொன்னதால், போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஸ்டேஷனில் வைத்து அவரை டார்ச்சர் செய்துள்ளனர். புளியில் பல்லி கிடந்த விவகாரத்தை ஊடகங்களில் சொன்னதால் ஆளும் தி.மு.க-வினரின் தூண்டுதலின்பேரில் போலீஸார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நந்தன் இரண்டு முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார். தந்தையின் நிலைமையைப் பார்த்து மன உளைச்சலடைந்து, இளைஞர் குப்புசாமி உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். ஒரு உயிர் போகக் காரணமாக இருந்த உள்ளூர் ஆளும் கட்சிப் பிரமுகர்கள், பொய் வழக்கு பதிவு செய்த போலீஸார் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினரை போலீஸார் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகக் கூறிய தன் தந்தை நந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், தற்கொலைக்கு முயன்ற குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சமூக வலைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையைக் கூறினால் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு என தி.மு.க ஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது. கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாகக் கிடைக்கிறது. இது தற்கொலை அல்ல, ஜனநாயகப் படுகொலை’’ என்று தெரிவித்துள்ளார்.