புரட்சியாளர் சே குவேராவின் மகளும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான நபருமான அலெய்டா குவேரா சமீபத்தில் சென்னை வந்திருந்தார். சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஜனவரி 18-ம் தேதி நடந்த `சோஷலிச கியூபாவுக்கு தமிழக மக்களின் பேராதரவு' சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

நான் அலெய்டா பேசுகிறேன்!
நான் சே குவேரா மகள் என்பதால் என் மீது அதிக அன்பு செலுத்துகிறீரகள். எனக்கு எத்தனையோ சால்வைகள், நினைவுப் பரிசுகள் வந்தன. இவை அனைத்தும் உங்களின் பேரன்பை காட்டுகின்றன. எனக்களித்த சால்வைகளை நான் இங்கேயே விட்டுச் செல்ல மாட்டேன், கியூபா நாட்டுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள கம்யூனிஸ்ட் தோழர்களுடன் தமிழக மக்களின் அன்பை பகிர்ந்துகொள்ள உள்ளேன். தந்தை சே குவேராவின் மகள் என்பதால் மட்டுமல்லாமல் என் தாய் அலெய்டாவின் மகள் என்பதாலும் பெருமை கொள்கிறேன். நான் சமூகப் பொறுப்புள்ள நபராக இருப்பதற்கு என் தாய்தான் காரணம். சிறு வயதில் என் தாய் பூமிப்பந்தின் நிலப்பரபில் உறுதியாக நிற்க வேண்டும், சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளார். நான் அலெய்டா குவேரா மற்றும் சே குவேரா மகளாக இருந்தால் மட்டும் போதாது, நான் சமூகத்துக்கு என்னவாக இருக்கிறேன் என்பது மிகவும் முக்கியம். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருப்பது எனக்கு கூடுதல் பெருமை.
எங்கள் நாடு, கியூபா சோஷலிச கொள்கையைத் தூக்கிப்பிடிக்கிறது. நாங்கள் எங்கள் நாட்டில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக family code என்ற சட்டம் வரையறுத்திருக்கிறோம். குடும்பம் என்பது மென்மையான அம்சம்.

இந்தச் சட்டத்தின் மூலம் குடும்பத்திலும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம், அவர்கள் உயிரை உற்பத்தி செய்யக்கூடியவர்கள். பெண்கள் நியாயமான காரணத்துக்காகப் போராடுகிறார்கள் என்றால் அவர்கள் வேகமாகவும் தீவிரமாகவும் செயல்படுவர். அதனால் அவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கியூபா சோஷலிஸ்ட் நாடு என்பதாலேயே அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. சுமார் 60 ஆண்டுகள் கியூபாவுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இதனால் கியூப மக்களின் வாழ்வு நெருக்கடியைச் சந்திக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் எங்களின் விலங்குகளையும், தாவரங்களையும் காவு வாங்கியுள்ளது. இதனால் கடுமையான உணவு நெருக்கடியில் கியூபா சிக்கியது.

கியூபாவின் சுற்றுலா தளம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. எனினும் எங்கள் சுற்றுலாத்துறையை வளர்க்க எங்களிடம் சொந்தமாக விமானங்கள் இல்லை. நாங்கள் விமானங்களை வாடகைக்கு எடுக்க முயல்கிறோம். விமானங்களில் 10 சதவிகிதம் வரை அமெரிக்க உதிரிபாகங்கள் இருந்தால் அவர்கள் இந்த வர்த்தகப் பரிமாற்றத்தை புறக்கணிக்கும் உரிமை உள்ளதாக அமெரிக்க அரசு கூறுகிறது.
எங்களுடன் வர்த்தகம் செய்யத் துணியும் நிறுவனத்துக்கு மில்லியன் டாலர் தண்டம் விதிக்கவும், அந்த நிறுவனத்தில் பொருள்களை அமெரிக்க சந்தையில் விற்கவும் அனுமதி மறுக்க முடியும் என்று அமெரிக்கா கூறுகிறது. எங்கள் கடற்கரையில் கப்பல்கள் வரவும் அமெரிக்கா தடை விதிக்கிறது. இவ்வாறு எத்தனை தடைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்தாலும் கியூபா மக்களின் மகிழ்ச்சியான வாழ்வைத் தடுக்க முடியாது.

இத்தனை நெருக்கடிகளைச் சந்திக்கும் கியூபாவுக்கு உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் அர்ஜென்டினா பாடல் வரிகளை நினைவுகூர விரும்புகிறேன். `நான் இறந்தால் எனக்காக அழாதீர்கள், நான் விட்டுச்சென்ற, சமூகத்துக்குச் செய்ய வேண்டிய பணிகளை முன்னெடுத்துச் செயல்படுங்கள்.’ நாம் தொடர்ந்து ஒருமைப்பாட்டுடன் செயல்படுவோம்'' என்று பேசினார்.