மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 10 - கடலூர் - வளமும் வாய்ப்பும்

கனவு - கடலூர்
பிரீமியம் ஸ்டோரி
News
கனவு - கடலூர்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 10 - கடலூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

அடுத்ததாக, கடலூரின் வளங்களில் முக்கியமானது வெட்டிவேர். இது வெறும் வாசனைப்பொருள் மட்டுமல்ல. நிறைய மருத்துவப் பயன்களும் நிறைந்தது. வெளிநாட்டினர் மத்தியில், குறிப்பாக ஐரோப்பிய யூனியன் பிரதேசங்களில் இந்த வேர் புகழ்பெற்றது. இந்தியாவில் இது வெட்டிவேராக இருந்தாலும், உலக அளவில் இது `வெற்றிவேர்!’

வட அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கனடாவில், மிகுந்த செல்வாக்கு மிக்கதாக விளங்குகிறது வெட்டிவேர். அங்குள்ள மக்களின் கலாசாரத்தில் வெட்டிவேருக்குத் தனி இடம் உண்டு. வாசனைத் திரவியம், குளியல் சோப், அழகுசாதனப் பொருள்கள், காபி பவுடர், டூத் பேஸ்ட், ஹேர் ஆயில், கொசுவிரட்டிகள் என ஏராளமான பொருள்களை வேட்டிவேரிலிருந்து தயாரிக்கிறார்கள். தெளிவாகத் திட்டமிட்டுக் காரியமாற்றினால், நாமும் வெட்டிவேரிலிருந்து கோடிக்கணக்கில் வருமானம் பெற முடியும். இதற்கு ஒன்றிய, மாநில அரசுகளின் உதவி தேவைப்படும்.

கனவு - 10 - கடலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 10 - கடலூர் - வளமும் வாய்ப்பும்

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். மின்சாரம் தயாரிப்பதற்காகப் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், என்எல்சி நிறுவனத்துக்குத் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் நிலக்கரி வெட்டி எடுத்தது போக, சுமார் 10,000 ஏக்கர் நிலங்கள் இப்போது மண் குவியல்களாகக் கிடக்கின்றன. இந்த மண் குவியல்களை ஒழுங்குபடுத்தி, அங்கே நாம் வெட்டிவேர் பயிரிடலாம். ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் வெட்டிவேரிலிருந்து சுமார் 67 கிலோ வெட்டிவேர் நறுமண எண்ணெய் பெற முடியும். சந்தையில் ஒரு கிலோ வெட்டிவேர் நறுமண எண்ணெய் 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவின்படி கணக்கிட்டால், வெட்டிவேர் நறுமண எண்ணெயிலிருந்து ஆண்டுக்கு 666 கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டலாம்.

இந்தியாவிலேயே வெட்டிவேரின் ஹப்பாக விளங்கும் கடலூர் மாவட்டத்தில், இதற்கான யூனிட் ஒன்றுகூட இல்லை என்பதை ஆய்வின்போது அறிந்தேன். வெட்டிவேர் நறுமண எண்ணெய் தயாரிப்புக்கான ஒரு யூனிட் அமைக்க 75 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவாகிறது. 100 ஏக்கருக்கு ஒரு யூனிட்டும், மூன்று பேரும் தேவைப்படுவார்கள். அந்தவகையில், நாம் 100 யூனிட் அமைப்பதாகக் கொண்டால் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அமையும். இந்த யூனிட்டுக்குத் தேவையான வெட்டிவேரை நிலத்தில் பயிரிட்டு, அறுவடை செய்ய ஏக்கருக்கு 20 பேர் வீதம் 10,000 ஏக்கருக்கு இரண்டு லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக இன்னும் பல ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கனவு - 10 - கடலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 10 - கடலூர் - வளமும் வாய்ப்பும்

அடுத்து, கடலூர் மாவட்டத்தின் முக்கிய வளங்களில் ஒன்று கரும்பு. தமிழ்நாட்டின் `சர்க்கரைக் கிண்ணம்’ என்று அழைக்கும் அளவுக்கு இங்கே கரும்பு உற்பத்தி அதிகம். விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, சிதம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 75,000 ஏக்கருக்குக் கரும்பு பயிரிடப்படுகிறது. பெண்ணாடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் அதிக அளவுக்குக் கரும்பு பயிரிடப்படுகிறது. அதற்குக் காரணம், அந்தப் பகுதியில் ‘அம்பிகா சர்க்கரை ஆலை’ அமைந்திருக்கிறது. தற்போது இந்த ஆலை சில பிரச்னைகள் காரணமாக மூடப்பட்டுள்ளது.

கரும்பின் அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தக்கூடியவை என்றாலும், கரும்பிலிருந்து எடுக்கப்படும் மொலாசஸைப் (Molasses) பயன்படுத்தி, எத்தனால் (Ethanol) தயாரிக்க முடியும். இது இயற்கைக்குக் கேடு விளைவிக்காத எரிபொருள் வகையைச் சேர்ந்தது. பொதுவாக உலகம் முழுக்கவே வாகன ஓட்டிகள் பெட்ரோலுடன் எத்தனால் கலந்த எரிபொருளைத்தான் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நாட்டுக்கும் எத்தனால் கலப்பு விகிதம் மாறுபடுகிறது. இந்த வகை எரிபொருளை பிரேசிலில் மட்டும் 100 சதவிகித வாகன ஓட்டிகளும், இன்னும் சில நாடுகளில் 85 சதவிகிதம் பேரும் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில்கூட பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பது 5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகச் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாம் நூறு சதவிகிதம் அளவுக்கு எத்தனாலைப் பயன்படுத்த முடியாவிட்டாலும்கூட, 10 சதவிகிதம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக 25 சதவிகிதமாக அதிகரிக்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் தோராயமாக, ஆண்டொன்றுக்கு 80 டன் கரும்பை விவசாயிகள் உற்பத்திசெய்கிறார்கள். ஒரு டன் கரும்பிலிருந்து சுமார் 22 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும். ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 14,00,00,000 லிட்டர் எத்தனாலை உற்பத்திசெய்யலாம். ஒரு லிட்டர் எத்தனால் தற்போது 59 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்தவகையில் ஆண்டொன்றுக்கு சுமார் 800 கோடிக்கு வருமானம் பெற முடியும். இதற்கான தொழிற்சாலையை நிறுவும்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு 8 லட்சம் விவசாயிகளும் பொருளாதார முன்னேற்றம் காணுவார்கள்.

கனவு - 10 - கடலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 10 - கடலூர் - வளமும் வாய்ப்பும்

கரும்புக்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டத்தின் முக்கிய வளங்களில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு. இந்திய அளவில் தமிழ்நாடுதான் மரவள்ளிச் சாகுபடியில் நம்பர் ஒன்னில் இருக்கிறது. இந்தச் சாதனையில் அதிகமான பங்கு இந்த மாவட்டத்துக்கு உண்டு. இங்கு சுமார் 3,252 ஹெக்டேருக்கு மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு விளைச்சல் அதிகமாக உள்ளது. இது பெரும்பாலும் மைதா, ஜவ்வரிசி என ஓரடுக்கு மதிப்புக்கூட்டு வகையாக (Incremental Value Addition) மாற்றி மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதையே பல்லடுக்கு மதிப்புக்கூட்டு வகையாக (Exponential Value Addition) மாற்றி விற்றால், கோடிகளில் வருமானம் பெறலாம்.

வெளிநாட்டு நிறுவனமான `பிரிங்கில்ஸ்’ (Pringles), உருளைக்கிழங்கை மட்டும்வைத்து பல்வேறு வகைகளில் சிப்ஸ்களைத் தயாரித்து, சந்தையில் விற்பனை செய்துவருகிறது. ஆண்டொன்றுக்கு 12,000 கோடி அளவுக்கு விற்பனை நடக்கிறது. இப்படியாக நாமும் ஒரு புராடக்டை உருவாக்கி, அதை உலகம் முழுக்கக் கொண்டுசெல்ல முடியும்.

ஆறு மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும் மரவள்ளிக் கிழங்கானது, ஒரு ஏக்கருக்கு 13 டன் மகசூல் தரக்கூடியது. அந்த வகையில் ஆண்டுக்குத் தோராயமாக 40,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கும். இதில் விற்காமல் போகும் 25 சதவிகித கிழங்குகளை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிரிங்கில்ஸ் உருளைக்கிழங்கு 165 கிராம் சிப்ஸ், 299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு அதிக விலைவைத்து நாம் விற்க வேண்டியதில்லை. மாறாக, 200 கிராம் மரவள்ளிக்கிழங்கு சிப்ஸை, நாம் 100 ரூபாய்க்கு விற்றால் போதும். விவசாயிகள் ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கை 4 ரூபாய்க்கு இடைத்தரகர்களிடம் விற்பதாக அறிந்தேன். அதே ஒரு கிலோ கிழங்கை நாம் பல்லடுக்கு மதிப்புக்கூட்டு வகையில் புராசஸ் (Process) செய்தால், 300 ரூபாய்க்கு விற்க முடியும். இப்படியாக ஆண்டுக்கு மரவள்ளிக்கிழங்கு சிப்ஸின் வழியாக மட்டுமே தோராயமாக 500 கோடிக்கு வர்த்தகம் செய்யலாம்.

(இன்னும் காண்போம்)