மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 11 - கடலூர் - வளமும் வாய்ப்பும்

கடலூர்
பிரீமியம் ஸ்டோரி
News
கடலூர்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 11 - கடலூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

உலகம் சுற்றுவதில் வெளிநாட்டினர் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களின் வழியே வரும் அந்நியச் செலாவணியால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது. அதனால்தான் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத்துறை பல்வேறு முன்னெடுப்புகளை ஆண்டுதோறும் எடுத்துவருகிறது. அந்த வகையில் குறைந்த செலவில், நிறைவாக ஊர் சுற்றிப்பார்க்கச் செல்வதற்கான மாவட்டங்களில் கடலூரும் ஒன்று. இயற்கையின் அழகை வாரியிறைக்கும் காடுகள், பக்தி மணம் பரப்பும் கோயில்கள், வரலாற்றைச் சுமந்து காத்திருக்கும் இடங்கள் எனச் சுற்றுலாவுக்கான எல்லா அம்சங்களும் இங்கே உண்டு!

அந்நியச் செலாவணியை ஈர்க்கும் ஆன்மிகச் சுற்றுலா!

மத, ஆன்மிகச் சுற்றுலாவுக்கான வாய்ப்பு அதிக அளவில் இந்த மாவட்டத்தில் உள்ளது. பாடல் பெற்ற தலங்களான திருவதிகையிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயில், கடலூரிலுள்ள பாடலீஸ்வரர் கோயில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில், பெண்ணாடத்திலுள்ள பிரளயகாலேஸ்வரர் கோயில், விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில், சிதம்பரத்திலிலுள்ள நடராஜர் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கப் பழம்பெரும் கோயில்கள். “திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு திருவந்திபுரம் போகலாம். ஆனால், திருவந்திபுரத்துக்கு வேண்டிக்கொண்டு திருப்பதிக்குப் போக முடியாது” என்பார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது.

ஆன்மிகச் சுற்றுலா செல்வோர், தவறவிடக்கூடாத இடங்களில் வடலூர் வள்ளலார் சத்தியஞான திருச்சபை முக்கியமானது. ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூசத் திருவிழாவில் இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் வந்து பங்கேற்கும் லட்சக்கணக்கானோரே அதற்குச் சான்று. “அருட்பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை” என்கிற ஒருமித்த கோஷத்துடன் ஜோதி தரிசனம் செய்வார்கள்.

பொதுவாக நாட்டியக்கலைக்கு உலகம் முழுக்கவே ரசிகர்கள் உண்டு. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியச் சுற்றுலாவின்போது தவிர்க்கவே கூடாத பட்டியலில் சிதம்பரம் நடராஜரும் இடம்பிடித்திருப்பார். சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இக்கோயிலில் ஏழு நிலையான ராஜகோபுரங்கள் உண்டு. அதில் கிழக்கிலுள்ள ராஜகோபுரத்தில் நாட்டியக்கலைக்கு உரித்தான 108 சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். நாட்டியத்துக்குப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில், ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு நடக்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி உலகப்புகழ்பெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்ச்சியை அரசுடன் இணைந்து மேம்படுத்தினால், ஆண்டுதோறும் அந்நியச் செலாவணியைப் பெற முடியும்.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில்
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில்
பிரளயகாலேஸ்வரர் கோயில்
பிரளயகாலேஸ்வரர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

உலகின் பல ஆயிரம் மேடைகளைத் தன் நாட்டியத்தால் அலங்கரித்தவர் பத்ம நர்த்தகி நடராஜ். தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துவருகிறார். அவரைத் தலைவராகக்கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நாம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். வருடந்தோறும் நடக்கும் நிகழ்ச்சியை மாதந்தோறும் நடக்கும் நிகழச்சியாக மாற்றி, ஆண்டின் இறுதியில் `சிதம்பரம் நடராஜர் கோயில் மெகா நாட்டியாஞ்சலி’ நிகழ்வுக்குத் திட்டமிடலாம். நாட்டியத்தில் ஈடுபாடுள்ள வெளிநாட்டினரைப் பெருமளவில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவைப்பதே நம்முடைய முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். இதற்காக உலகம் முழுக்கவுள்ள நாட்டியக் கலைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியை நர்த்தகி நடராஜிடம் வழங்கலாம்.

எப்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு, இறுதியில் சென்னையில் மாபெரும் புத்தகக் காட்சி நடக்கிறதோ, அதேபோல இந்த நாட்டிய நிகழ்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். இதனால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகை, பன்மடங்கு பெருகும். சுற்றுலாத்துறையும் மேம்படும். கோயிலைச் சுற்றியுள்ள வணிகர்கள் மட்டுமின்றி, இன்னும் பலரும் பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றத்தை அடைவார்கள்.

சிதம்பரத்துக்கு அருகே அமைந்துள்ளது பிச்சாவரம். இங்கே உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகள் சுமார் 2,800 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கின்றன. ஆங்காங்கே சிறு சிறு தீவுகள் உண்டு. சுற்றுலாத்துறையின் சார்பில் இங்கு படகுச் சவாரி நடந்துவருகிறது. படகுச் சவாரிக்கு 400-க்கும் மேற்பட்ட நீர்வழிகளைக்கொண்டிருந்தாலும், ஏனோ இது இன்னும் பெரிய அளவில் சுற்றுலாப்பயணிகளை அதிக அளவில் கவராமலேயே இருக்கிறது. கொஞ்சம் கிரியேட்டிவாகச் சிந்தித்தாலே இதற்கு விடிவு உண்டு.

வள்ளலார் சத்தியஞான திருச்சபை
வள்ளலார் சத்தியஞான திருச்சபை
பாடலீஸ்வரர் கோயில்
பாடலீஸ்வரர் கோயில்
விருத்தகிரீஸ்வரர் கோயில்
விருத்தகிரீஸ்வரர் கோயில்

படகு இல்லமும்... படப்பிடிப்பும்!

கேரள மாநிலம் ஆலப்புழா படகு வீடுகளுக்குப் பெயர்பெற்றது. சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்ல, தேனிலவுத் தம்பதியர்கள், நண்பர்கள் குழு, அலுவலகங்களில் நடக்கும் அவுட்டிங் போன்ற பலவற்றுக்கு இத்தகைய இடங்களைத்தான் பலரும் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் படகு இல்லம் வழியாக ஆண்டுக்குச் சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. மறைமுகமாக இதையொட்டி நடக்கும் பிற வணிகங்களை ஒப்பிட்டால், இன்னும் பல கோடிகள் கிடைக்கும். இந்தப் படகு இல்லத்தை நாம் பிச்சாவரத்தில் அமைக்கலாம்.

வீரட்டேஸ்வரர் கோயில்
வீரட்டேஸ்வரர் கோயில்

படகு இல்லத்தை ஒற்றை மாடி, சிறிது, சராசரி எனப் பல அளவுகளில் கட்ட முடியும். சிறிய அளவிலான படகு இல்லம் அமைக்க சுமார் 4 லட்சம் ரூபாயும், ஒற்றை மாடிகொண்ட படகு இல்லம் அமைப்பதற்கு அதிகபட்சமாக 15 லட்சம் வரை செலவாகும். சராசரி அளவில் படகு வீடு கட்ட 8 லட்சத்திலிருந்து 23 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். மரம், கண்ணாடி, அலுமினியம் அல்லது வேறு பொருள்களைப் பயன்படுத்தும்போது, இதன் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். மற்ற தொழில்முனைவோடு ஒப்பிடும்போது, இவையெல்லாம் குறைந்த முதலீட்டைக் கோருபவை என்பதால், தொழில்முனைவில் ஆர்வமுள்ள எவரும் இதில் ஈடுபட்டுப் பெரும் பொருளீட்ட முடியும்.

இவற்றில் டீலக்ஸ், பிரிமியம் என இரு தரத்தில் பிரித்து, ஒரு படுக்கையறை தொடங்கி ஐந்து படுக்கையறை வரைகொண்ட விதவிதமான அலங்காரங்களுடன்கூடிய படகு வீடுகளை வாடகைக்கு விடலாம். ஒரு படுக்கை அறை கொண்ட படகு வீட்டுக்கு, நாளொன்றுக்கு 7,500 ரூபாய் நிர்ணயிக்கலாம். ஐந்து படுக்கை அறைகள் கொண்ட படகு வீட்டுக்கு அதிகபட்சமாக 20,000 வரை வசூலிக்கலாம். இதை அரசுதான் செய்ய வேண்டும் என்றில்லை. தொழில்முனைவில் ஆர்வமுள்ள எவரும் சிறிய முதலீட்டில் இதை முன்னெடுக்கலாம். இதைச் செயல்படுத்த முன்வருபவர்களுக்கு அரசு அனுமதி வழங்கி ஊக்குவிக்க வேண்டும். படகு இல்லத்தில் தங்கும் பயணிகளின் பாதுகாப்பு, படகுகளின் சுகாதாரம் போன்றவற்றுக்கான விதிகளையும் வகுத்து, அவற்றைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவதும் அவசியம்.

கனவு - 11 - கடலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 11 - கடலூர் - வளமும் வாய்ப்பும்
கனவு - 11 - கடலூர் - வளமும் வாய்ப்பும்

இங்கேயுள்ள சிறு சிறு தீவுகளில், தங்கும் விடுதிகளை அமைக்கலாம். அட்வென்ச்சர் ஆர்வமுள்ளவர்களுக்கு அது நல்வாய்ப்பாக அமையும். திரை நட்சத்திரங்கள் எம்.ஜி.ஆர் முதல் விஷால் வரை பலரின் கால்தடம் பதித்த இடம் பிச்சாவரம். வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள்போல எப்போதாவதுதான் படப்பிடிப்புகள் நடக்கின்றன. சுற்றுலாத்துறை ஸ்பெஷல் கவனம் செலுத்தினால், நட்சத்திரங்களால் பிச்சாவரம் ஜொலிப்பதோடு சுற்றுலாப்பயணிகளாலும் நிரம்பி வழியும்!

(இன்னும் காண்போம்)