
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

‘அழகி’ படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சியில், கதையின் நாயகி நந்திதாதாஸ் பாத்திரத்தில் சிறுமியாக வரும் குழந்தை நட்சத்திரம், தனது இரு காதுமடல்களிலும் ஜிமிக்கிக்கு பதிலாக இரு வேர்க்கடலையைத் தொங்கவிட்டு, தலையை ஆட்டியபடி சிரிக்கும். அந்த வேர்க்கடலையை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி விற்றால், அந்தக் குழந்தையின் காதில் தங்க ஜிமிக்கியே தொங்கவிடலாம்!
`மணிலாகொட்டை’, `மல்லாட்டை’, `கல்லை’, `கடலை’ எனப் பலப்பல பெயர்களில் அழைக்கப்படும் வேர்க்கடலை, கடலூர் மாவட்டத்தின் சிறந்த வளங்களில் ஒன்று. சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் இவை ஓரடுக்கு மதிப்புக்கூட்டு வகைப் பொருளாக மாற்றி மட்டுமே சந்தையில் விற்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, கோவில்பட்டி கடலைமிட்டாய் என்றொரு பிராண்ட் தமிழ்நாட்டில் பிரபலம். கிலோ 180 ருபாய்க்கு விற்கிறார்கள். ஆனால், இதைப் பல்லடுக்கு மதிப்புக்கூட்டு வகைப் பொருளாக மாற்றினால் பெரும் லாபம் பார்க்கலாம்.
உலக அளவில் பீனட் பட்டர் பிராண்டுகளில் பல, விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன. 350 கிராம் பேக் 185 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதில் 90 சதவிகிதம் அளவுக்கு வேர்க்கடலைதான் பயன்படுத்துகிறார்கள். இதில் வேர்க்கடலை எண்ணெய், சர்க்கரை, அயோடின் உப்பு போன்றவற்றைச் சேர்த்து சுவையான பீனட் பட்டரைத் தருகிறார்கள். அதே போன்றதொரு புராடக்டை நாம் தமிழ்நாட்டில் உருவாக்கி, கோடிகளில் வருமானம் ஈட்டலாம்.


1990-களுக்கு முன்னால் வரை, அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் பாலை விரும்பி உண்ண மாட்டார்கள். இதனால் பால் உற்பத்தியாளர்கள் பெரும் நட்டத்தையே சந்தித்துவந்தனர். இதைச் சரிசெய்ய Goodby and Silverstein என்ற விளம்பர நிறுவனம், அமெரிக்காவில் 1993-ம் ஆண்டுவாக்கில், `காட் மில்க்’ (Got Milk) என்றொரு புகழ்பெற்ற பிரசாரத்தை நடத்தியது. இந்தப் பிரசாரம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து, வெற்றி பெற்றது. இதுபோன்றதொரு பிரசாரத்தைத் தொடங்கி, நாமும் பீனட் பட்டரைப் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும்வகையில் செய்ய வேண்டும்.
பாதாம் பருப்புக்கு இணையான சத்துகளும் சுவையும்கொண்ட வேர்க்கடலை, கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தோராயமாக 40,000 டன் அளவுக்கு உற்பத்தியாகிறது. இதிலிருந்து சுமார் 30 சதவிகிதம் (தோராயமாக 12,000 டன்கள்) அளவுக்கு பீனட் பட்டர் தயாரிக்க எடுத்துக்கொண்டாலே போதுமானது. இதிலிருந்து மட்டும் ஆண்டுக்குச் சுமார் 200 கிராம் கொண்ட நான்கு கோடி (தோராயமாக) பீனட் பட்டர் பாட்டிலைத் தயாரிக்க முடியும். இதிலிருந்து ஆண்டுக்கு 600 கோடி அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளும் பொருளாதார முன்னேற்றம் அடைவதோடு, வாழ்க்கைத்தரம் உயரவும் இது உதவும்.
‘கனவு’ தொடர் வெளியானதிலிருந்து வாசகர்களிடமிருந்து ஏராளமான ஆரோக்கியமான விமர்சனங்கள், ஆலோசனைகள் எனக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், வாசகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். “ஏன் சார் புது புராடக்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே, தேவையான தொழிற்சாலைகள் குறித்தும் நீங்கள் எழுதலாமே?” என்று கேட்டிருந்தார். அதைக் கருத்தில்கொண்டு மாவட்டத்தின் வளங்களை ஆராயும்போது, அங்கே எந்தெந்தத் தொழிற்சாலைகளை அமைக்கலாம் என்பதையும் சேர்த்தே எழுதுகிறேன்.

கடலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் பிற வளங்களைப்போல, பருத்தியும் முக்கிய வளங்களில் ஒன்று. சுமார் 18,000 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரகங்களில் பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 6 டன் மகசூல் கிடைக்கிறது. அதிக அளவில் மகசூல் கிடைப்பதால், பருத்தியை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது பெரும் வருமானம் ஈட்டலாம். பருத்தியிலிருந்து நிறைய புராடக்டுகளை உருவாக்க முடியும் என்றாலும், அதில் குறிப்பிடத் தகுந்தது சானிட்டரி நாப்கின் (Sanitary Napkin). கோடிகளில் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரங்களில் இதுவும் ஒன்று. `விஸ்பெர்’ (Whisper) எனும் பிராண்டின் ஆண்டு வருமானம் மட்டும் தோராயமாக 900 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. நாப்கினில் பல பிராண்டுகள் மார்க்கெட்டுகளில் இருந்தாலும், அவை சற்று விலை உயர்ந்ததாக இருப்பதோடு, அவற்றில் பெரும்பாலும் பருத்திப் பஞ்சைப் பயன்படுத்துவதில்லை.
பருத்திப் பஞ்சு மற்றும் அதோடு வேறு சில பொருள்களையும் சேர்த்து உருவாக்கப்படும் சானிட்டரி நாப்கின், உடலுக்குக் கேடு விளைவிக்காதது. பருத்திப் பஞ்சு சானிட்டரி நாப்கின், 10 பீஸ் உள்ள ஒரு பாக்கெட்டை 50 ரூபாய்க்கு விற்கலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். அதற்கான ஒரு தொழிற்சாலையை இந்த மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்கிற யோசனையை இங்கே முன்வைக்கிறேன்.
பருத்தி உற்பத்தியானது திருச்சி, சேலம், விழுப்புரம், வேலூர், நாமக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இவையெல்லாம் கடலூருக்கு அருகருகே இருக்கும் மாவட்டங்கள் என்பதால், இங்கேயிருந்து விவசாயிகளிடம் பருத்தியை நேரடிக் கொள்முதல் செய்துகொள்ளலாம். இதனால், தொழிற்சாலைக்கான மூலப்பொருள் தடையின்றி எளிதில் கிடைக்கும். சானிட்டரி நாப்கின் தொழிற்சாலையை அமைப்பதால், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் பெரும்பாலான பருத்தி விவசாயிகளும் பொருளாதார முன்னேற்றத்தை அடைவார்கள்!

அடுத்து, கடலூர் மாவட்டத்தின் முக்கிய வளங்களில் ஒன்று களிமண். இது மிக அதிக அளவில் இங்கே கிடைப்பதால்தான், 1965-ம் ஆண்டிலேயே விருத்தாசலத்தில் `அரசு பீங்கான் தொழிற்பேட்டை’ சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும், இதையொட்டிய தனியார் தொழிற்சாலைகளும் உருவாகின. பீங்கான் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியும் உருவாக்கப்பட்டது. தற்போது இந்தத் தொழிற்பேட்டையில் 60 யூனிட்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த யூனிட்டுகள் போதிய உற்பத்தி இல்லாமை, நிதிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தத்தளித்துவருகின்றன. இவற்றை மையமாகவைத்து இயங்கிய பல தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
இதே போன்று விருத்தாசலம் அருகேயுள்ள வடலூரில், தனியார் பீங்கான் தொழிற்சாலையான `நெய்சர்’ (Neycer) சுமார் 1,000 தொழிலாளர்களுடன் செயல்பட்டுவந்த நிலையில், சில காரணங்களால் மூடப்பட்டிருக்கிறது. இந்தத் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும்.
பீங்கான் தொழில்நுட்பத்தில் பல்வேறு புராடக்டுகள் தயாரிக்கப்பட்டாலும், அதிக அளவில் நுகர்வோருக்குத் தேவைப்படுவது டைல்ஸ் மற்றும் சானிட்டரிவேர்ஸ் புராடக்டுகளே. இவற்றில் டைல்ஸ் விற்பனையில் நம்பர் ஒன்-னில் இருப்பது ‘ஜான்சன் டைல்ஸ்’ (Johnson Tiles). ஆண்டுக்குச் சுமார் 7,000 கோடி ரூபாய் அளவுக்கு டைல்ஸை விற்பனை செய்கிறது. இதற்காக, தோராயமாக 5,200 பேர் வேலைசெய்கிறார்கள். அதேபோல ‘ஹிந்த்வேர் சானிடரிவேர்ஸ்’ (Hindware Sanitaryware) நிறுவனம் சுமார் 3,000 தொழிலாளர்களைக் கொண்டு சானிடர்வேர்ஸ் புராடக்டுகளிலிருந்து மட்டும் தோராயமாக 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது. இவ்விரு நிறுவனங்களை ஓர் உதாரணத்துக்காகத்தான் உங்களுக்குக் காட்டியிருக்கிறேன். இன்னும் சிறியதும் பெரியதுமாகப் பல நிறுவனங்கள் நல்ல லாபத்துடன் செயல்பட்டுவருகின்றன. அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வுசெய்ததில், இந்திய அளவில் செராமிக் டைல்ஸ், சானிட்டரி வேர் புராடக்டுகள் ஆண்டுக்குத் தோராயமாக 40,000 கோடியிலிருந்து 50,000 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றன.
பீங்கான் பொருள்களுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் இந்தியாவிலேயே இருக்கிறது. இந்த மார்க்கெட்டில் சுமார் 10 சதவிகிதத்தைக் கைப்பற்றினாலே பெரும் பொருளீட்ட முடியும். அதற்காகச் சில ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக, அரசு பீங்கான் தொழிற்பேட்டையில் நிதிச்சுமையால் அவதியுறும் யூனிட்டுகளுக்கு உரிய நிதி ஒதுக்குவதோடு, அவற்றை மேம்படுத்தவும் வேண்டும். டைல்ஸ், சானிடரிவேர் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி, அதன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். இரண்டாவது, தனியார் நிறுவனமான நெய்சர் நிர்வாகத்துடன் பேசி, தொழிலாளர்களின் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்து, அதைத் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இதைச் செய்யும்போது கூடவே சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி, அவற்றுக்கான அனுமதி, கடன், மானியம் போன்றவற்றைத் தந்து பீங்கான் தொழில் செழித்து வளர, உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தினால் ஆண்டுக்குத் தோராயமாக 4,000 கோடியிலிருந்து 5,000 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். மேலும், சுமார் 15,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பும், அதையொட்டி நடக்கும் பிற தொழில்களின் வழியே மேலும் பல ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
நவராத்திரி பண்டிகையின்போது, பலரும் பொம்மைகளை வாங்கி வீடுகளில் கொலு வைப்பார்கள். இந்த பொம்மைகளில், பெரும்பாலும் பீங்கானில் செய்யப்பட்டவையே அதிக இடங்களைப் பிடிக்கும். இந்த பொம்மைகளை அதிக அளவில் விருத்தாசலம் மற்றும் அதையொட்டிய பிற கிராமங்களில் குடிசைத் தொழிலாகச் செய்துவருகின்றனர். இந்தப் பண்டிகையின்போது மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு (ஆண்டுக்கு) வருமானம் கிடைக்கிறது. இந்த பீங்கான் பொம்மை தயாரிப்பை மட்டுமே சுமார் 400-க்கும் மேற்பட்டோர் செய்துவருகின்றனர். இவர்களையும் கருத்தில்கொண்டு அரசு பீங்கான் தொழிற்பேட்டையைச் செம்மைப்படுத்த வேண்டும்.
இந்தியாவிலேயே பீங்கான் தொழில்நுட்பத்தைச் சொல்லித்தரும் கல்லூரிகள் சொற்பமாகவே உள்ளன. அவற்றில் விருத்தாசலத்திலுள்ள கல்லூரியும் ஒன்று. மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பும், அதனுடன் இணைந்த ஆறு மாதகாலப் பயிற்சியும் அளிக்கிறார்கள். இந்தக் கல்லூரி குறித்த விளம்பரத்தை அதிக அளவில் பரப்ப வேண்டும். தேவைப்பட்டால் இன்னும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக்கொண்ட கல்லூரியாகவும் இது மாற்றியமைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யும்போது, மேலும் பல புதிய தயாரிப்புகள் கிடைக்கப்பெறுவதோடு, தொழில்துறையும் மேம்படும்!
(இன்னும் காண்போம்)