
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

நாட்டுக்கு அழகு வளமை... நிலத்துக்கு அழகு விளைவு. அவ்வகையில், கடலூர் மாவட்டத்தின் விளைவுகளில் முக்கியமான ஒன்று மக்காச்சோளம்!
தியேட்டர், வணிக வளாகங்களுக்குச் செல்லும் பெரும்பாலானோர் பாப்கார்ன் சுவைக்க மறக்க மாட்டார்கள். இத்தகைய இடங்களில் விற்கப்படும் பாப்கார்ன், மக்காச்சோளத்திலிருந்து உருவாகும் ஓரடுக்கு மதிப்புக்கூட்டு வகை சார்ந்த ஒரு பொருள் மட்டுமே. இதையே பல அடுக்கு மதிப்புக்கூட்டு வகையில் தயாரித்து விற்பனை செய்தால், நிச்சயமாகக் கோடிகளில் பிசினஸ் செய்யலாம்!
இந்த மாவட்டத்தில் சுமார் 56,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் மக்காச்சோளத்திலிருந்து, ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் அளவில் விளைச்சல் கிடைக்கிறது. உலக அளவில் பிரபலமாக உள்ள பிராண்டு ஒன்று மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் Corn Flakes எனும் புராடக்டை விற்கிறது. பல்வேறு சுவைகளில் விற்றாலும் இந்த ஒரு புராடக்டிலிருந்து மட்டும் ஆண்டுக்குத் தோராயமாக 140 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறார்கள். சந்தையில் ஒரு கிலோ பாக்கெட்டை 375 ரூபாய்க்கும், தேன் கலந்த பாக்கெட்டை 580 ரூபாய்க்கும் விற்கிறார்கள். இந்த பிராண்ட் தோராயமாக 87 சதவிகிதத்திலிருந்து 61 சதவிகிதம் வரை சோளத் துகள்கள் மற்றும் இன்னும் சில பொருள்கள் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இதே போன்றதொரு பிராண்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யாமல், கொஞ்சம் அக்கறையோடு மாற்றி யோசிக்க வேண்டும்.


மக்காச்சோளமும் வேடிக்கை விளையாட்டும்!
மக்காச்சோளத்தில் இருக்கும் ஸ்டார்ச் (Starch) உடல்நலனுக்கு உகந்தது அல்ல. எனவே, மக்காச்சோளத் துகள்களுடன் கம்பு, வரகு, வெள்ளைச் சோளத் துகள்களையும் (Jowar) தேவையான அளவுக்குச் சேர்க்கும்போது, அதிலிருக்கும் அதிகப்படியான ஸ்டார்ச் சத்து குறைந்துவிடுவதோடு, சுவையும் கூடும். இதன் சுவையை மேலும் கூட்ட, தேன் கலந்தால் நமக்குப் புதிய புராடக்ட் ரெடி. இதைக் குழந்தைகள் விரும்பும் வகையில் ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் வேடிக்கை விளையாட்டுகொண்டதாகவும் மாற்ற வேண்டும். இங்கே நான் வேடிக்கை விளையாட்டு என்று குறிப்பிடுவது, சாக்லெட்டுக்குள் ஒரு பொம்மையை வைப்பது அல்ல. ஃபன் பஸில் (Fun Puzzle) போன்று சிறார்களின் அறிவையும் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் வகையில் இருப்பது போன்ற விளையாட்டுப் பொருளை அதனுடன் இணைக்க வேண்டும். அப்படிச் செய்தால் இதன் விற்பனை சூடுபிடிக்கும்.
கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் விளைச்சல் கிடைக்கும் மக்காச்சோளத்தி லிருந்து 30 சதவிகிதத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து 200 கிராம் கொண்ட 20 கோடி பாக்கெட்டுகளை உருவாக்க வேண்டும். இதன் வழியே ஆண்டு ஒன்றுக்குச் சுமார் 2,600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இதற்கான தொழிற்சாலையை அமைப்பதன் வழியே நேரடியாக 2,000 பேருக்கும், மறைமுகமாக 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு அமைவதோடு, 60,000 விவசாயிகளும் பயனடைவார்கள்.
அடுத்து, கடலூர் மாவட்டத்தின் முக்கிய வளங்களில் ஒன்று கடல். சுமார் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை இங்கு உள்ளது. இந்தப் பகுதிகளில், கடல்பாசி வளர்த்தால் (Seaweed Farming) அதிக அளவில் வருமானம் பெற முடியும்.
நுண்ணுயிர்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்றுதான் பாசி. உலகம் முழுவதும் ஏறக்குறைய 30,000 வகை பாசிகள் இருந்தாலும், அவற்றில் உண்பதற்கு ஏற்றவையாகக் கண்டறிப் பட்டுள்ளவை சுமார் 75 வகை பாசிகள் மட்டுமே. அவற்றில் முதலிடத்திலுள்ள ஒன்றுதான் `ஸ்பைருலினா’ (Spirulina) எனப்படும் சுருள்பாசி. 1,000 கிலோ காய்கறிகளைச் சாப்பிட்டால் கிடைக்கும் சத்துகளை, ஒரு கிலோ ஸ்பைருலினாவிலிருந்து பெற முடியும். இது கடலில் நன்கு வளரக்கூடியது.
கடல்பாசியை வளர்க்கப் பல வழிமுறைகள் இருந்தாலும், அவற்றில் எளிமையானதும், அதிக வருமானம் தரக்கூடியதுமானது `SRFR’ (Single Rope Floating Raft) முறையே. கடலில் பத்துக்கு பத்தடி என்கிற அளவில், சதுர வடிவில் மூங்கில்களை இணைத்து அவற்றின் இடையே குறுக்கும் நெடுக்குமாக நைலான் கயிறுகள் கட்டி மிதக்கவிடும் முறை இது. ஒரு மூங்கில் மிதவையைச் செய்ய தோராயமாக 2,000 ரூபாய் செலவாகிறது. இத்தகைய மிதவைகளிலிருந்து ஏக்கர் ஒன்றுக்குச் சுமார் 10 டன் கடல்பாசியை உற்பத்தி செய்ய முடியும். அந்தவகையில், கடல்பாசிப் பண்ணைகளிலிருந்து ஆண்டுக்கு ஏறக்குறைய 100 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீனவச் சமுதாயத்தினர் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள், அவர்களது வருமானமும் அதிகரிக்கும்.


பொதுவாக ஒரு பகுதியில் நாம் தொழிற்சாலையை அமைத்தால், அங்கே வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, பலரின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமும் நடக்கும். ஆனால், அந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகியவை தயாரிக்கப்படும் பொருள்களின் தன்மைக்கேற்ப மாசடைவே செய்யும். இதிலிருந்து விதிவிலக்கானது கடல்பாசி. நாம் இதை எந்த அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்கிறோமோ அந்த அளவுக்குப் பருவநிலை மாற்ற பாதிப்புகளையும், கார்பன் உற்பத்தியையும் குறைக்க முடியும். இயற்கைக்கு ஆதரவான கடல்பாசியைச் சுமார் 150 ஏக்கர் அளவிலாவது உற்பத்திசெய்யும் நடவடிக்கையில் தொழில்முனைவோர் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு மானியம், கடனுதவி போன்றவற்றை அளித்து அரசும் ஊக்குவிக்க வேண்டும். இப்படியாக உற்பத்தி செய்யப்படும் கடல்பாசியிலிருந்து ஒரு புதிய கடல் உணவு புராடக்ட் உருவாக்க வேண்டும்.
கடல்பாசியில் Burger Patty!
இன்று உலகம் முழுவதும் பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் உணவுப் பட்டியலில் பர்கரும் (Burger) ஒன்று. நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் பகுதியிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் பர்கர், உணவுப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. பர்கரின் இடையே வைக்கப்படும் Patty-யில் (Patty / Burger Cutlet) வழக்கமாக அசைவ உணவுகளுக்கு பதில், இவர்கள் கடல்பாசியில் தயாரிக்கப்பட்ட Patty-யைப் பயன்படுத்துகிறார்கள். இதை அசைவ உணவை விரும்புபவர்களும் உண்ணும் வகையில் தயாரித்தால், பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும்.
கடலூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கடல்பாசிகளிலிருந்து சுமார் 20 டன் அளவுக்கு மட்டும் எடுத்துக்கொண்டு, அதனுடன் Patty தயாரிப்புக்கான பிற பொருள்களையும் கலந்து, 2 லட்சம் கிலோ தயாரிக்கலாம். இதிலிருந்து 3 கிராம் பாக்கெட்டுகள்கொண்ட Patty-யை 100 ரூபாய் வைத்து விற்றால், ஆண்டுக்குத் தோராயமாக 670 கோடிக்கு வருமானம் பெற முடியும். இதற்கான தொழிற்சாலையை நிறுவும்போது, நேரடியாக 5,000 பேருக்கும், மறைமுகமாக 25,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தப் பகுதியில் தொழிற்சாலையை அமைக்கும்போது, மீனவர்களின் நலனைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
மீனவச் சமுதாயத்திலிருந்து படித்து, பட்டதாரிகளாக வெளிவரும் இளைஞர்களை இந்தத் தொழிற்சாலைகளில் பணியமர்த்த வேண்டும். அப்படிச் செய்யும்போது பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்லாமல், சமூக மரியாதையும் மீனவர்களுக்குக் கிடைக்கும். மேலும் அவர்களது வாழ்க்கைத்தரம் மேம்படவும் இது வழிவகுக்கும்.
கடலூர் மாவட்டத்தில் இரண்டு துறைமுகங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. ஒன்று, முதுநகர் மீன்பிடித் துறைமுகம். மற்றொன்று பரங்கிப்பேட்டை ஏற்றுமதி இறக்குமதி துறைமுகம். இவற்றில் இரண்டாவது துறைமுகம் பெரிய அளவில் கடல்பாசி உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு வரும் நாள்களில் பேருதவியாக இருக்கும். இதனால், துறைமுகம் சார்ந்த பணிகளில் ஈடுபடவும், சரக்குகளை ஏற்றி இறக்கவும், அதையொட்டிய பிற தொழில்கள் எனப் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். கடல்பகுதியில் விளைவிக்கப்படும் கடல்பாசி, அதிலிருந்து உருவாக்கப்படும் புதிய புராடக்டுக்கான (Product) தொழிற்சாலை போன்றவை, பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரங்களிலேயே அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கடல்பாசி உற்பத்தியும் Patty தயாரிப்பும் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை நமக்குப் பெற்றுத் தரும்.


இந்த மாவட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டபோது விவசாயிகள், வணிகர்கள், அரசு அதிகாரிகள், சமூகநல ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர், வேளாண் கல்லூரி மாணவர்கள், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரின் கருத்துகளைக் கேட்டபோது, அவை பெரிய பட்டியலாக மாறிவிட்டன. அவற்றிலிருந்து முந்திரி, பலாப்பழம், மரவள்ளி, வெட்டிவேர், கடல்பாசி எனப் பலதரப்பட்ட வளங்களிலிருந்து செயல்பாட்டுக்கு உகந்ததாக நான் கருதியவற்றையே வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறேன். இதில் நிச்சயமாகச் சில விடுபடல்கள் இருக்கலாம். இன்னும் சில என் கவனத்துக்கே வராமல் போயிருக்கலாம். உங்களுக்கு அவை குறித்துத் தெரிந்திருந்தால், நிச்சயமாக அவற்றையெல்லாம் எனக்கு kanavu@dreamtn.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
வளங்களுக்குப் பஞ்சமில்லாத மாவட்டம் கடலூர். அவற்றை வாய்ப்புகளாக மாற்ற வேண்டியதுதான் இளைஞர்களும் தொழில்முனைவோர்களும் தொழிலதிபர்களும் முதன்மையாகச் செய்யவேண்டிய வேலை. இதற்குப் பின்னாலிருந்து அரசு வினையூக்கியாக (Catalyst) செயல்பட வேண்டும். மனித வளத்துக்கும் பஞ்சமில்லாத மாவட்டம் என்பதால், கடந்த மூன்று இதழ்களில் நான் சுட்டிக்காட்டியுள்ள பல புராடக்டுகளை உருவாக்கி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கி, மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முன்னுரிமை தர வேண்டும். அப்போதுதான் நாம் முன்னெடுத்துள்ள தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் டாலர் கனவை எட்டிப்பிடிக்க முடியும்!
(இன்னும் காண்போம்)
நம் அடுத்த கனவு அரியலூர்!