
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!
சிலுசிலுக்கும் அலைகள், பாய்ந்தோடும் ஆறுகள், தளும்பும் ஏரிகள், காற்றில் அசைந்தாடும் தென்னைமரங்கள், பச்சைப் பசேலென விரியும் வயல்வெளிகள், ஆசுவாசமாக அமர்ந்து இயற்கையை ரசிக்க ஏதுவான அலையாத்திக் காடுகள் (பிச்சாவரம் Mangrove forest), ஆன்மிக மணம் பரப்பும் கோயில்கள், போகும் வழியெங்கும் நாவின் சுவைகூட்டக் காத்திருக்கும் பல வகையான பழங்கள் எனப் பல வளங்களைக் கொண்ட மாவட்டம் கடலூர்.
நான் பிறந்து வளர்ந்த ஊரும் கடலூர்தான். தற்போது உலகெங்கும் 160 நாடுகளிலுள்ள 10,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எனது நிறுவனத்தின் (Kissflow) மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. தொழில் சம்பந்தமாக உலகம் முழுக்கச் சுற்றினாலும், மனம் என்னவோ கடலூருக்குத் திரும்பவே சொல்லும்.
கடலூர் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 75 சதவிகிதம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. நெல், கரும்பு, கேழ்வரகு, உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, வரகு, முந்திரி, பலா, வாழை, கொய்யா, முருங்கை, மிளகாய், கத்திரி, காளிஃபிளவர், மரவள்ளிக்கிழங்கு என இங்கே விவசாயப் பயிர்கள் ஏராளம். பண்ருட்டி பகுதியில் செம்மண்ணும் திட்டக்குடி, விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சரளை மண்ணும் கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் கடலோர வண்டல் மண்ணும் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் சுற்றுவட்டாரங்களில் கரிசல் மண் எனப் பலதரப்பட்ட நில வளங்களால் இங்கே விவசாயம் செழித்து வளர்கிறது!
‘தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயம் தோராயமாக 20 சதவிகிதம் அளவிலேயே பங்காற்றுகிறது’ என்கிற உண்மையை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நேராகச் சந்தைக்குக் கொண்டு சென்றுவிடு கிறார்கள். மாறாக, அந்தப் பொருள்களுக்கு மதிப்புக்கூட்டி அவர்கள் விற்பனை செய்தால், இன்னும் கூடுதல் லாபம் பார்க்கலாம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதில்தான் வெற்றி ஒளிந்திருக்கிறது!


`ஆப்பிள்போல கன்னம்’, `கோவைப்பழம் போன்ற உதடு’ எனப் பாடல்களில் பெண்களை வர்ணனை செய்யும் கவிஞர்கள், பலாப்பழத்தை எதனோடும் ஒப்பிட்டு எழுதுவதில்லை. கரடுமுரடாக, அதிக எடையுடன், தன்மேல் முற்களைப் போர்த்திக்கொண்டிருக்கும் பலாப்பழம், காண்பதற்கு ஓர் அழகான பழம் இல்லை. ஆனால், அதன் உள்ளே நாவில் சுவையுணர்வுகளைச் சுண்டியிழுக்கும் அளவுக்கு இனிப்பான சுளைகளைக்கொண்டது. ஏற்கெனவே நான் சொன்னது மாதிரி, அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற வேண்டும்.
ஜூஸ் வகைகளில் `டிராபிகானா’ (Tropicana) என்றொரு பிராண்ட் மிகவும் பிரபலம். ஆரஞ்ச், ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, ஆப்பிள், வாட்டர்மெலன் எனச் சுவையான பல பழரச பானங்கள் அதில் உண்டு. அந்த பானங்களைக் குடிக்கிறபோதெல்லாம் இப்படியான ஒரு பிராண்டை ஏன் பண்ருட்டியில் எவரும் உருவாக்கவில்லை என்ற கேள்வி என்னுள் எழும். டிராபிகானாவில் பலா ஜூஸ் இல்லை. என்னைக் கேட்டீர்களென்றால் பலா ஜூஸ் தயாரித்து, அதை ஒரு பிராண்டாக மாற்றி, உலகம் முழுவதுமுள்ள அனைவரின் சுவையுணர்வையும் கூட்டலாம். கோடிக்கணக்கில் ஈட்டலாம்.
பண்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில், சுமார் 1,640 ஏக்கருக்குப் பலா பயிரிடப்படுகிறது. ஆண்டுக்குத் தோராயமாக 80 லட்சம் பழங்கள் வரை மகசூல் கிடைக்கிறது. இதில் விற்காமல் அல்லது பயன்படுத்தப்படாமல் போகும் 30 சதவிகித பழங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து சுமார் 25 கோடி லிட்டர் பழச்சாறு கிடைக்கும். ஒரு ஜூஸ் தயாரிக்க தேவைப்படுவது 10 சதவிகிதப் பழக்கூழ்தான். மீதி அதன் சுவை, நிறம், கெடாமல் இருப்பதற்கான பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் ஒரு ஜூஸ் நமக்கு பாட்டில் வடிவில் கிடைக்கிறது. ஒரு லிட்டர் ஜூஸின் விலை 250 ரூபாய்க்கு வைத்து ஏற்றுமதி செய்தால், ஆண்டுக்கு 6,000 கோடி வருமானத்தைப் பெற முடியும். இதற்கான தொழிற்சாலையை அமைக்கும்போது, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பலா விவசாயிகளும் பெரும் வருமானத்தை ஈட்டுவார்கள்.



பலாப்பழத்துக்கும் முந்திரிப் பருப்புக்கும் பெயர்போன ஊர் பண்ருட்டி. சுமார் 80,000 ஏக்கருக்கு இங்கே முந்திரி பயிரிடப்படுகிறது. வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் சீஸன், ஜூன் மாதம் வரை நீடிக்கும். மற்ற பழங்களோடு ஒப்பிடும்போது முந்திரிப்பழம் சுவையான பழம் கிடையாது.
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடைய இந்தப் பழத்தை மக்கள் அரிதாகவே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இதனால், பழ வியாபாரிகள் மத்தியில் இதற்கு மவுசு குறைவு. எனவே பெரும்பாலான விவசாயிகள் முந்திரிப்பழத்திலிருந்து முந்திரிக் கொட்டையை நீக்கிவிட்டு, பழத்தைக் கூடையாகக் கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியிலும் சாலையோரங்களிலும் கொட்டிவிடுகிறார்கள். குப்பையில் கொட்டுகிற இந்த முந்திரிப் பழத்திலிருந்து மட்டும் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என்பது பெரும்பான்மையோருக்குத் தெரியாது.
பண்ருட்டியைப்போல, இந்தியாவில் அதிகம் முந்திரி விளையும் பகுதிகளில் கோவாவும் ஒன்று. கோவா மாநிலத்தில் ஃபெனி (Feni) என்கிற மதுவகை, மதுப் பிரியர்கள் மத்தியில் ரொம்பப் பிரபலம். சுமார் 155 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை பல்வேறு அளவுகளில், பல வகையான தரங்களில் கிடைக்கிறது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கப்படும் ஃபெனி, முந்திரிப்பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.
முந்திரிப்பழம் ஆண்டுக்கு 4 லட்சம் டன்கள் விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து தோராயமாக ஒரு கோடி லிட்டர் ஃபெனிச் சாறு உற்பத்தி செய்ய முடியும். உயர்தரமான ஒரு லிட்டர் ஃபெனி பாட்டிலின் விலை 1,500 ரூபாய்க்கு விற்க முடியும். அப்படியாக ஆண்டுக்கு ஃபெனியிலிருந்து மட்டுமே 1,800 கோடிக்கு வருமானம் ஈட்ட முடியும். இதற்கான தொழிற்சாலையை அமைக்க பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரில் சுமார் 40 ஏக்கர் நிலம் `சிட்கோ’-வுக்காக (SIDCO) அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கே ஃபெனி (Feni) மதுவகைத் தயாரிப்புக்கான தொழிற்சாலையை நிறுவ வேண்டும். அப்படி நிறுவப்படும் தொழிற்சாலையிலிருந்து நேரடியாக 3,000 பேருக்கும், மறைமுகமாக 15,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி, முந்திரி விவசாயிகளும் பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றத்தை அடைவார்கள்.
தமிழ்நாட்டில் மது சார்ந்து நிறைய அரசியல் உள்ளது. ஆகவே, உள்ளுர்ச் சந்தையில் விற்க வேண்டியதில்லை. மாறாக, ஃபெனி மதுவை உயர்தரமான மதுவாகத் தயாரித்து, அதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம்!
(இன்னும் காண்போம்)