ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வினு விமல் வித்யா: பெண்களின் விஷயங்களைப் பெண்களே தீர்மானிக்கும் காலம் எப்போ வரும்?

 எலிசபெத்,  மாசா அமினி
பிரீமியம் ஸ்டோரி
News
எலிசபெத், மாசா அமினி

- சஹானா

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்ச்சிகளை வித்யா பார்த்துக் கொண்டி ருந்தபோது, வினுவும் விமலும் வந்து சேர்ந்தனர்.

“என்ன வித்யாக்கா, உங்களைத் தொந்தரவு செஞ்சிட்டோமா?” என்றபடி வந்து அமர்ந் தாள் வினு.

“அதெல்லாம் இல்ல. ஒரு வாரமா இதையே தான் மீடியா காட்டிட்டு இருக்கு... 26 வயசுல பதவிக்கு வந்து, 70 வருஷம் ஆட்சியில இருந்து, நிறைஞ்ச வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க...’’ பிரமிப்பாகச் சொன்னார் வித்யா.

“இந்தியா சுதந்திரம் அடைஞ்சு அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் பதவிக்கு வந்தாங்க. அப்போ மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜன நாயகத்தை நோக்கி உலகம் போயிருச்சு. ஆனா, இங்கிலாந்துல மட்டும் மக்களுக்கு அரச குடும்பம் மேல அன்பு அதிகமா இருந்துச்சு. எலிசபெத் எதையும் பெரிசா எதிர்க்கல. எதுக்கும் குரல் கொடுக்கல. அரச குடும்பத்தைச் சிக்கல் இல்லாமப் பார்த்துக் கிட்டாங்க வித்யாக்கா.”

“எத்தனை கோட்டைகள்... பணியாட்கள்... இந்தச் செலவுகளுக்கு மக்களோட வரிப்பணம் செலவிடப்படுதுன்னு வருத்தப்படுற மக்களும் இங்கிலாந்துல இருக்காங்க. இன்னும் காலம் போகப்போக அரச குடும்பத்தோட மதிப்பு குறையவே செய்யும். ராணியோட வாழ்க் கையை சுமைன்னும் சொல்லிட முடியாது. மகிழ்ச்சின்னும் சொல்லிட முடியாது” என்றாள் வினு.

“இரான்ல தலைமுடியை வெட்டி, ஹிஜா பைக் கொளுத்தி பெண்கள் போராடிட்டு இருக்காங்க. கவனிச்சீங்களா வித்யாக்கா?”

“என்ன சொல்றே விமல்?”

 எலிசபெத்,  மாசா அமினி
எலிசபெத், மாசா அமினி

“இரான்ல பெண்களுக்குக் கடுமை யான சட்டங்கள் இருக்குன்னு உங்களுக்கே தெரியும். மாசா அமினிங்கிற 22 வயசுப் பொண்ணு ஹிஜாப் சட்டத்தை மீறினதா கைது செய்யப்பட்டாங்க. சிறையில அவங்க தாக்கப்பட்டதா சொல் றாங்க. திடீர்னு மயங்கி விழுந்து, கோமா வுக்குப் போயி, ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. இந்த மரணம் மற்ற இரானியப் பெண்களையும் போராட வைச்சிருச்சு. தினமும் பல இடங்கள்ல மக்கள் நியாயம் கேட்டுப் போராடிட்டு வர்றாங்க. அந்தப் போரட்டங்கள்ல தலை முடியை வெட்டறாங்க; ஹிஜாபைக் கொளுத்தறாங்க. அவங்களோட துணிச்சல் உலக நாடுகளை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. அஞ்சு நாள் போராட்டங்கள்ல ஏழு பேர் கொல்லப்பட்டிருக்காங்க.”

“சே... எவ்வளவு கொடுமையான விஷயம்? காவல்துறை என்ன சொல்லுது?” கோபமாகக் கேட்டாள் வினு.

“ஏற்கெனவே மாசா அமினிக்கு ஹார்ட் பிராப்ளம் இருந்திருக்கு, நாங்க ஒண்னும் பண்ணலைன்னு சொல்லுது. ஆனா, மாசா வோட குடும்பம் அதை மறுத்திருக்கு. இப்பவும் இது மாதிரியான கட்டுப்பாடுகளும் அதுக்குக் கடுமையான தண்டனைகளும் இருக்குறது அநியாயம். எந்த மதமா இருந் தாலும் அடிப்படைவாதிகள் எல்லாம் ஒரே மாதிரிதான் யோசிக்கிறாங்க. பெண்களோட விஷயங்களைப் பெண்களே தீர்மானிக்கும் காலம் சீக்கிரம் வரணும்” என்றாள் விமல்.

சட்டென்று அங்கே அமைதி நிலவ, வித்யா லிச்சி ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

“பாட்டில் ஜூஸ் மாதிரி தெரியலையே, ரொம்ப நல்லா இருக்கு.”

“லிச்சி பழம் கிடைச்சது. அதுலதான் ஜூஸ் போட்டேன் வினு'' என்று சொன்ன வித்யா, `வீல்' என்று அலறினார்.

“ஒரு பல்லிக்கா இப்படிப் பயப்படறீங்க? டூமச் வித்யாக்கா. ஹவாய் தீவுல கெய்லி கிராண்ட்னு ஒரு பெண் இருக்காங்க. அவங்க ஆபத்தான சுறாக்கள்கிட்டயிருந்து எப்படித் தப்பிக்கணும்னு சொல்லித் தர்றாங்க. கடல்ல சுறாகிட்ட மாட்டிக்கிட்டா, நேருக்கு நேர் பார்க்கணும். கை, கால்களை உடம்போடு ஒட்டி வச்சுக்கணும். இரையா, வேட்டை யாடியான்னு அது யோசிக்கும்போது தலையை வேற பக்கமா திருப்பி விட்டுட்டு, தப்பிச்சிடணும்கிறாங்க. `கைமனா ஓஷன் சஃபாரி’ங்கற பயிற்சி மையத்தையும் நடத்திட்டு வர்றாங்க. ஆபத்துல தப்பிக்க மட்டுமே சொல்லித் தர்றதாகவும் தனியா போய் சுறாகிட்ட இதையெல்லாம் செய்து பார்க்க வேணாம்னும் சொல்றாங்க. மனிதர்களை சுறா வேட்டையாட அதிக ஆர்வம் காட்டாது. ஆனாலும், அது ஒரு நாய்க்குட்டி இல்ல, வேட்டையாடின்னு சொல்றாங்க.”

“ஓ... இந்தச் சுறாவைக்கூடச் சமாளிச்சிட லாம் போல, பல்லியை என்னால சமாளிக்க முடியல” என்ற வித்யாவைப் பார்த்து வினுவும் விமலும் சிரித்தனர்.

“ராஜஸ்தானைச் சேர்ந்த நீலம் ராத்தல் ஒரு லோகோ பைலட். இவங்க இப்ப வடமேற்கு பகுதில பயணிகள் ரயிலை இயக்கறாங்க. ‘ரயில்ல பயணம் செய்யறதுக்கும் இன்ஜின்ல பயணம் செய்றதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. கவனக்குறைவா இருக்க முடியாது. அத்தனை பேரையும் காப்பாத்தற பொறுப்பு இருக்கு. என்னைப் பார்த்து, பல பெண்கள் நம்பிக்கை வருதுன்னு சொல்லியிருக்காங்க. லோகோ பைலட்டா ரொம்ப குறைவான பெண்கள்தான் இருக்காங்க. எல்லா வேலை களையும் நம்மால செய்ய முடியும். தைரியமா வாங்க’ன்னு சொல்றாங்க நீலம். அவங்க ரயில் ஓட்டுறதைப் பார்க்கும்போது நமக்கும் ஆசையாயிருக்கு!” ஆர்வமாகச் சொன்னாள் வினு.

``அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்னு ஒரு நிகழ்ச்சியில கலந்துகிட்ட ஒரு பொண்ணை போன வாரம் முழுக்க சோஷியல் மீடியாக்கள் திட்டித் தீர்த்துருச்சு. பல மணி நேரம் எடுத்து, எடிட் செய்யப்படுற நிகழ்ச்சி அது. அந்தப் பொண்ணு படிச்சிருக்காங்க, வேலைக்குப் போறாங்க. படிக்காதவரைக் கல்யாணம் செஞ்சிருக்காங்க. அவர் பிசினஸுக்கு நகை களைக் கொடுத்திருக்காங்க. இப்ப அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கு. அந்தச் செலவையும் பார்த்துக்கிறாங்க. மகளைப் படிக்க வைக்கிறாங்க. ‘ரிப்போர்ட் கார்டுல அவருக்கு என்ன தெரியும்... ரொம்ப நேரம் உத்துப் பார்த்திட்டிருப்பார்’னு அவங்க சொன்ன விதம் ஒருமாதிரி இருந்தாலும், அதுக்காக அவங்க கணவருக்குப் பரிசு கொடுத்துப் பாராட்டினது, மகளைப் பேச வச்சதுன்னு ரொம்பவே உணர்ச்சிவசப்பட் டுட்டார் கோபி. அப்பவே இது வைரலாகும்னு நினைச்சேன். அதே மாதிரி அந்தப் பொண்ணை உண்டு, இல்லைன்னு பண்ணிட் டாங்க, பாவம்.”

“ஆமா விமல்... அதே நிகழ்ச்சியில தினமும் இருநூறு கிலோ மீட்டர் தூரம் வேலைக்குப் போயிட்டு வரும் மனைவி, பாத்திரம் தேய்க்கச் சொல்றாங்கன்னு அவங்க கணவர் வேலைக் குப் போக வேணாம்னு சொன்னார். அவரைத் தானே ஒரு புடி புடிச்சிருக்கணும்?” கோபமாகக் கேட்டாள் வினு.

“ஆமா, வினு. ஒரு பொண்ணை ஒரு சமூகமே சேர்ந்து தண்டிக்கக் கூடாது. இது ரொம்ப மோசமான விஷயம்.”

“கரெக்ட். பள்ளிக்கூடங்கள்ல காலை உணவுத்திட்டம் ஆரம்பிச்சிருக்கிறது நல்லது தானே வினு?”

``நிச்சயமா வித்யாக்கா. வறுமையில இருக்கற எத்தனையோ பெற்றோர்கள், விடியறதுக்குள்ள வேலைக்குக் கிளம்பிட றாங்க. அவங்க வீட்டுக் குழந்தைங்க பட்டினியா ஸ்கூலுக்குப் போய், மதிய உணவைச் சாப் பிடறாங்க. சின்ன வயசுல பசியால வாடுறது ரொம்ப கொடுமையானது. அந்த மாதிரி குழந்தைகளுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும்.”

மூவரும் மீண்டும் ஒரு டம்ளர் லிச்சி ஜூஸைக் குடிக்க ஆரம்பித்தனர்.

“ ‘நாதான் கேஸ் கொடு’ங்கிற மலையாளப் படம் பார்த்தேன். ஹாட்ஸ்டார்ல தமிழ்லயே இருக்கு. படம் ஆரம்பிச்சு முடியற வரைக்கும் சிரிப்பும் சுவாரஸ்யமுமா போகுது. சிம்பிள் கதை. ஆனா, வித்தியாசமா இருந்தது. குஞ்சாகோ கோபனும் காயத்ரியும் லீட் ரோல் பண்ணியிருந்தாங்க. குஞ்சாகோ கோபன் பிரமாதமா நடிச்சிருக்காரு. அவசியம் பாருங்க நீங்க ரெண்டு பேரும்.”

“ஓ... பார்த்துடுவோம் வித்யாக்கா. இப்ப கிளம்பறோம்” என்று வினுவும் விமலும் எழுந்தனர்.

வாசல் வரை வந்து வழியனுப்பினார் வித்யா.

- அரட்டை அடிப்போம்...

***

வினு தரும் வித்தியாசமான தகவல்

பறக்கத் துடித்த பெண்!

விமானம் கண்டுபிடிக்கப்பட்ட எட்டே ஆண்டுகளில், அமெரிக்காவின் ஹரியெட் குயிம்பி என்ற பெண்மணி விமானி உரிமம் பெற்று விமானத்தில் பறந்த முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். அவர் விமானி உரிமம் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பெண் விமானியாக சரளா தாக்ரல் சாதனை படைத்தார். இவர்தான் விமானம் ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

1914-ம் ஆண்டு பிறந்த சரளா தாக்ரல், விமானம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றபோது வயது 21. ஒரு விமானத்தை ஆயிரம் மணிநேரம் ஓட்டி, ‘ஏ’ உரிமம் பெற்றதைத் தொடர்ந்து, ‘முதல் இந்தியப் பெண் விமானி’ ஆனார். ஏர்மெயில் பைலட் உரிமம் பெற்ற முதல் இந்தியரும் இவரே.

தொழில் முறை விமானியாக ‘பிரிவு பி விமானி உரிமம்’ பெற விரும்பிய இவரது கனவும் பயிற்சியும் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் சூழல் காரணமாக தடைப்பட்டது. விடாமுயற்சியோடு, சுதந்திர இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர், தொழில் முறை விமானி உரிமம் பெற்றார். பிறகு ராஜஸ்தான் ஆல்வார் அரசி விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 1948-ம் ஆண்டில் பணியேற்று ஆறுமாதங்கள் அப்பணியைச் செய்தார். இந்தியாவின் முதல் விமான நிறுவனமான அன்றைய ‘ஏர் இந்தியா’ தொடங்கப்பட்டு நான்காண்டுகளே ஆகியிருந்த காலகட்டத்தில், ஆண்கள் கார் ஓட்டுவதுகூட அரிதாக இருந்த நேரத்தில், சரளா விமானியானது வியப்பூட்டும் சாதனை!

பெண் கல்வியை மேம்படுத்துமா ‘புதுமைப் பெண்’ திட்டம்?

விவிவி கேள்வி... வாசகிகள் பதில்

வினு, விமல், வித்யா - மூவரும் சென்ற இதழில் கீழ்க்காணும் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.

தமிழ்நாடு அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டம் பெண் கல்வியை மேம்படுத்த உதவுமா? உங்கள் கருத்து என்ன?

சிறந்த பதில் அளித்துபரிசு ரூ.250 பெறும் வாசகர்கள்...

`கணவன் கைவிட்டதாக சரித்திரம் உண்டு; கல்வி கைவிட்டதாக சரித்திரம் இல்லை’ என புதுமைப்பெண் திட்டத்தை இரு வரி குறளாக அழகாகச் சொல்லிவிட்டார் மாணவி ஒருவர். அரசுப் பள்ளியில் ஆறு வருடங்களேனும் படித்த வசதியற்ற மாணவியர் உயர்கல்வி பெற கல்லூரி யில் சேர்ந்தால், அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அரசு தரும். இதுவே புதுமைப் பெண் திட்டம். பெண் கல்வியை ஊக்கப்படுத்த அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டம். இதனால் கணவனே கண்கண்ட தெய்வம் காந்தாரிகள் காணாமல் போகக் கூடும். நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வையோடு புதுமைப் பெண்ணாக பூமியை ஆளத் தயாராகுங்கள் பெண்களே!

- வித்யா வாசன், சென்னை-78

பல மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பின், மேல்படிப்பு படிக்க அனுமதிக்கப்படாமல் வீட்டில் நிறுத்தப்படுவதை ஓர் ஆசிரியராகப் பார்த்து வருத்தப் பட்டிருக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பணப்பற்றாக்குறையும் ஒரு காரணம். அரசின் இந்தத் திட்டம், குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையினால் நிறுத்தப்படுகின்ற மாணவியர் கல்வி தொடர ஏதுவாகும். பெண்கல்வி மேம்பட உதவும்.

- இல.தமிழ்க்குயில், சங்கராபுரம்

‘என்கிட்ட காசு கேட்காம இருந்தா சரி... நீ என்ன வேணா படிச்சுக்கோ’ என்ற மனநிலையில் பெற்றோர்கள் பலர் உள்ளனர். புதுமைப் பெண் திட்டம் மூலம், வறுமையினால் படிப்பைத் தொடர முடியாத நிலை மாறும். படித்த பெண் கள் எண்ணிக்கை உயர்ந்தால் சமுதாயம் உயரும். நாடும் முன்னேறும். பல்வேறு விஷயங்களில் ஆக்கபூர்வமாக எதிரொலிக்கும். பெண் பிள்ளைகளின் தன்னம்பிக்கை, மதிப்பு கூடும்.

- கே.தமிழரசி, சென்னை-116

புதுமைப் பெண் திட்டம் மட்டுமே, பெண் கல்வியை மேம் படுத்துமா என்றால், மேம்படுத்தாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியர்களின் தரம் உயர்த்தாமல், எந்தப் பலனும் கிடைக்காது. பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். செயல்வழி கற்றல் எனப் பல வகையில் தெளிவு பெற்றாலன்றி, வெறும் பட்டத்தை வைத்துக் கொண்டு ஒன்றும் சாதித்து விட முடியாது.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்

இந்த இதழ் கேள்வி

’பொன்னியின் செல்வன்’ வாசகரா நீங்கள்? அந்த அற்புதமான வாசிப்பு அனுபவத்தை இதோ சில நாள்களில் திரையில் காணப் போகிறோம். இதுபோல வேறு எந்த நாவல்களை திரைப்படமாகவோ, சீரி ஸாகவோ எடுக்கலாம்?

பதில் அளித்து அசத்துங்கள். பிரசுரமாகும் சிறப்பான பதில்களுக்கு ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

வினு விமல் வித்யா, அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 4.10.2022