ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வினு விமல் வித்யா: ஆன்லைன் சூதாட்டம்... ஆணவக் கொலை... இன்னும் தொடரும் ஈனச்செயல்கள்!

 சார்லி பிளாக்வெல் தாம்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
சார்லி பிளாக்வெல் தாம்சன்

- சஹானா

மிதமாக பனி பொழிந்து கொண்டிருந்த டிசம்பர் முதல் நாள் மாலை... கருப்பட்டி காபி கடையில் வினு, விமல், வித்யா மூவரும் கூடியிருந்தனர்.

“அந்தக் காலத்துல எங்க கிராமத்துல கருப்பட்டி காபி போட்டுக் கொடுத்தா, நான் குடிக்கவே மாட்டேன். இப்ப சென்னையில எங்க பார்த்தாலும் கருப்பட்டி காபின்னு போர்டு தெரியுது. இப்போ கருப்பட்டி சாப்பிடறது நல்லதுன்னு நினைக்கிறாங்க. கருப்பட்டி கேக், கருப்பட்டி கத்லினு கருப்பட்டில செய்யாத ஸ்வீட்ஸே இல்லைங்கிற அளவுக்கு இப்ப எல்லாத்துலயும் கருப்பட்டி மயம்” என்று அரட்டையை ஆரம்பித்து வைத்தார் வித்யா.

“சரி, கருப்பட்டி அல்வா ஆர்டர் பண்ணு. சார்லி பிளாக்வெல் தாம்சன் வெற்றியைக் கொண்டாடலாம்” என்றாள் விமல்.

“யாரு விமல்... உனக்கு வேண்டப்பட்டவங்களா” என்றார் வித்யா.

“வித்யாக்கா, 2025-ல நிலாவுல பெண்ணை நடக்க வைக்கப்போகுது நாசா. ஆர்டிமிஸ்ங்கிற அந்தத் திட்டத்துல நிறைய பெண்கள் வேலை செஞ்சிட்டு இருக்காங்க. நாசா வரலாற்றுல லாஞ்ச் டைரக்டரா முதல் முதல்ல ஒரு பெண்ணை நியமிச்சிருக்காங்க... அவங்கதான் சார்லி பிளாக்வெல் தாம்சன். இவங்க 2016-ம் வருஷத்துலேருந்தே இயக்குநர் பொறுப்புல இருந்தாலும், இப்போதான் லாஞ்ச் டைரக்டரா செயல்பட முடிஞ்சிருக்கு. மனிதர்களை அனுப்ப றதுக்கு முன்னோட்டமா ஆளில்லா ஆர்டிமிஸை அனுப்ப முடிவு பண்ணினாங்க. முதல் ரெண்டு தடவை ஆர்டிமிஸை அனுப்பும் முயற்சி தொழில் நுட்ப காரணங்களால நின்னுருச்சு. நவம்பர் 16-ல மூணாவது தடவையா ஆர்டிமிஸ் 1-ன் ஓரியன் விண்கலம் வெற்றிகரமா செலுத்தப்பட்டிருக்கு. லாஞ்ச் டைரக்டரான சார்லி பிளாக்வெல், தன்னோட வேலையை முடிச்சிட்டுப் பேசினாங்க. ‘இந்த அற்புதமான நேரத்துல நீங்களும் நானும் இங்கே இருக்கும் வாய்ப்பு தற்செயலானதல்ல. இதற்கான நம் அனைவரின் கடின உழைப்பும் அர்ப் பணிப்பும் மட்டுமே இங்கே நம்மை இருத்தி வெச்சிருக்கு. எல்லோரும் மகிழ்ச்சியாக இருங்க’னு சொல்லியிருக்காங்க!”

 பி.டி.உஷா
பி.டி.உஷா

“வாவ்... சூப்பர்...” என்று வித்யாவும் வினுவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

“பேசி முடிச்ச உடனே, அவங்க மாட்டி யிருந்த கழுத்து டையை, கத்தரிக்கோலால வெட்டினாங்க. இது லாஞ்ச் செய்யறவங் களோட மகிழ்ச்சியை வெளிப்படுத்துற விதமா செய்யறதாம்.!”

“சூப்பர்... அப்படியே நம்ம அதிவேக ராணி பி.டி. உஷாவுக்கும் ஒரு வாழ்த்தைச் சொல்லிடு வோம். ஒரு காலத்துல ஒலிம்பிக்ல ஓடி, நாலாவது இடத்தை அடைஞ்சவங்க உஷா. இப்போ இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்போட தலைவரா நியமிக்கப்பட்டிருக்காங்க. இந்தப் பதவியைப் பெறும் முதல் பெண் உஷாதான்...”

“அடடா... பிரமாதம்!”

“ஆன்லைன் சூதாட்டத்தால பந்தனா மஜ்கிங்கிற பொண்ணு தற்கொலை பண்ணிக் கிட்டாங்க. ஒடிசாவைச் சேர்ந்த இவங்க, வேலை தேடி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலுக்கு வந்திருக்காங்க. கணவர் அஜித்குமார் மண்டல், ஒரு நூற்பாலையில கூலித் தொழிலாளர். இந்தப் பொண்ணு ஆன் லைன் சூதாட்டத்துல எழுபதாயிரம் ரூபாயை இழந்துட்டாங்க. அதனால தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க...”

“ரொம்ப கொடுமையா இருக்கு வினு.....”

“கடந்த ரெண்டு மாசத்துல மட்டும் ஆன் லைன் சூதாட்டத்தால நாலு பேர் உயிரை இழந்திருக்காங்க வித்யாக்கா...”

“ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செஞ்சதா நினைச்சேனே வினு...”

“தமிழ்நாடு அரசு அக்டோபர் 1 அவசர சட்ட மசோதா மூலமா தடை கொண்டு வந்தாங்க. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமலே இருந்ததால நவம்பர் 27 அன்னிக்கு அது காலாவதியாகிடுச்சு. அதுக் குள்ள இப்படி இன்னொரு சோகம்... நிரந்தர மான தடைச்சட்டம் கொண்டு வரணும்.”

“ஆமா... ஏன் நிறைய பேருக்கு இப்படி ரம்மி ஆசை வருதுன்னே தெரியல...”

 சார்லி பிளாக்வெல் தாம்சன்
சார்லி பிளாக்வெல் தாம்சன்

“எளிய வழியில கிடைக்கற பணம்... ஆபத்துன்னு உணர்ந்தாலும்கூட ஆட வைக் குது போல... இதுவும் இன்னொரு போதை தான்” என்றாள் விமல்.

“ஆயுஷி பத்தி கேள்விப்பட்டீங்களா?”

“ஆயுஷி தல்வாரா விமல்?”

“இல்ல, வித்யாக்கா. இவங்க ஆயுஷி யாதவ். உத்தரப்பிரதேசத்துல உள்ள பரத்பூர்ல வசிச்ச வங்க. பிசிஏ படிச்ச 20 வயசுப் பொண்ணு. வசதியான குடும்பம். அந்தப் பகுதியில இருக் கிறவங்களுக்கு சாதிப்பற்று ரொம்பவே அதிகமா இருக்கு. வேற சாதியைச் சேர்ந்த சத்திரபால்ங்கிற 22 வயசு இளைஞரை, பெத்த வங்களுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக் கிட்டாங்க ஆயுஷி. ஆனாலும், பொறந்த வீட்லதான் இருந்திருக்காங்க. அடிக்கடி வெளியில போயிட்டு வருவாங்களாம். நவம்பர் 17-ம் தேதி மதியம் ஆயுஷியைத் தன்னோட ரிவால்வரால அவங்க அப்பா நிதிஷ் யாதவ் சுட்டுக் கொன்னுட்டார். ரத்தக் கறைகளைத் துடைச்சிட்டு, உடலை ஒரு சூட்கேஸ்ல வச்சு, தூரத்துல வீசிட்டு வந்துட் டார். உடல் காவல்துறையால கண்டுபிடிக்கப் பட்டுச்சு. ஆயுஷியோட தம்பியும் அம்மாவும் உடலை அடையாளம் காட்டினாங்க..”

“இன்னொரு ஆணவக் கொலையா விமல்... மகளைவிட அப்படி என்ன சாதிப் பாசம்?”

“இந்தக் கொலைக்கு அவங்க அம்மாவும் உடந்தைங்கிறது இன்னும் அதிர்ச்சியா இருக்கு வித்யாக்கா. ஆயுஷியோட தம்பிதான் பெத்தவங்க செஞ்ச கொலையை, காவல் துறைகிட்ட சொல்லிருக்கான். இப்போ அம்மாவும் அப்பாவும் ஜெயில்ல இருக்காங்க...”

“ஒரு கல்யாணத்தை ஏத்துக்கலைனாலும் பரவாயில்லை...இப்படிக் கொலை செய்யறதால யாருக்கு என்ன லாபம்?” வருத்த மும் கோபமுமாகச் சொன்னாள் வினு.

“வேர்ல்டு கப் ஃபுட்பால் கோலாகலமா நடந்துகிட்டிருக்கே... யாரும் பார்க்கறீங்களா?” என்று கேட்டார் வித்யா.

“நியூஸ்ல பார்க்கறதோட சரி வித்யாக்கா. ஆனா, கத்தார் நாட்டுல இந்தப் போட்டிகளுக் காக நிறைய வசதிகள் செஞ்சுருக்காங்கன்னு நினைக்கும்போது ரொம்ப பிரமிப்பா இருக்கு!” என்றாள் வினு.

“எனக்கும் பிரமிப்பாதான் இருந்துச்சு. கத்தார்ல இன்னும் பெண்களோட நிலைமை தான் மோசமா இருக்கு. அவங்க அப்பா, சகோதரன், கணவன், கார்டியன்னு யாராவது ஒரு ஆணோட அனுமதி இல்லாம எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்றாங்க”

“ஆமா விமல்... அதே நேரம் இது சட்டத்துல இல்லை, குடும்பங்கள்தான் இதையெல்லாம் இறுக்கமா பிடிச்சு வச்சிருக்குன்னும் சொல் றாங்க. சில பெண்கள் கத்தார்லேருந்து வெளி யேறியும் இருக்காங்க. சில குடும்பங்கள்ல பெண்கள் சுதந்திரமானவங்களாவும் இருக் காங்க. இப்போ நிலைமை மாறிட்டு வருது. பெண்களோட நிலை இன்னும் மேம்பட ணும்னும் சொல்லலாம்” என்றார் வித்யா.

“ஆமா, இரான்ல மாஷா அமினி இறப்புக் குப் பிறகான போராட்டம் இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டாள் வினு.

“போராட்டம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு வினு. இப்போ இரானின் பேஸ்கட் பால் வீராங்கனைகள் எல்லாரும் ஹிஜாபைத் துறந்து, தங்களோட போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்காங்க. உண்மையில போராட்டம் இவ்வளவு தீவிரமடையும்னு அரசாங்கம் நினைச்சிருக்காது. மாஷா அமினி யால இந்த ஹிஜாப் பிரச்னைக்குத் தீர்வு கிடைச்சா சரிதான்...”

“சரியா சொன்னே விமல்.... ரெண்டு பேரும் ஏதாவது சினிமா பார்த்தீங்களா?”

“இல்ல வித்யாக்கா.”

“நான் ‘ஆஹா ஓடிடி’யில ‘பேட்டைக் காளி’ங்கிற வெப் சீரிஸ் பார்த்துட்டு வரேன். வாரம் ஒரு எபிசோடு ரிலீஸ் ஆகுது. ஜல்லிக் கட்டு காளையை வச்சுதான் கதை. ரொம்ப நேர்த்தியா எடுக்கப்பட்ட தமிழ் வெப் சீரிஸ்ல இதுவும் ஒண்ணு. எனக்குப் பிடிச்சிருக்கு. நீங்களும் பாருங்க” என்றார்.

“இன்னொரு காபி குடிச்சிட்டு, கிளம்புவோம்” என்று விமல், காபிக்கு ஆர்டர் கொடுத்தாள்.

- அரட்டை அடிப்போம்...

****

வினு விமல் வித்யா: ஆன்லைன் சூதாட்டம்... ஆணவக் கொலை... இன்னும் தொடரும் ஈனச்செயல்கள்!

வினு தரும் வித்தியாசமான தகவல்

பேட்டரி பெண்மணி!

சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்க உதவும் விண்வெளி நிலைய பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் ஓல்கா டி கன்சாலெஸ் சனாபிரியா (Olga D Gonzalez-Sanabria). இந்த நிக்கல் - ஹைட்ரஜன் பேட்டரி நீண்ட ஆயுட்காலம் உடையது என்பதால், விண்வெளி நிலையத்தின் மிக முக்கியமான தேவையாக உள்ளது.

சனாபிரியா, அமெரிக்கா ஐக்கிய நாட்டுக்குட்பட்ட போர்ட்டோ ரிக்கோ என்கிற தீவுப்பகுதியைச் சேர்ந்தவர். 1980-களில் இந்த பேட்டரிகளை உருவாக்க உதவிய தொழில்நுட்பத்தை உருவாக்கினார். நாசாவில் 32 ஆண்டுக்கால சேவை புரிந்த கோன்சலஸ்-சனாபிரியா 2011 டிசம்பரில் ஓய்வுபெற்றார்.