லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா: பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தக் குற்றவுணர்வு?

 போலார் ப்ரீத்
பிரீமியம் ஸ்டோரி
News
போலார் ப்ரீத்

ஜெஸிந்தா இப்போ ரெண்டாவது முறையா பதவில இருக்காங்க. முதல்முறை பதவிக்கு வந்த உடனே பெண்களுக்கான பிரசவ விடுமுறை நாள்களை அதிகரிச்சாங்க.

வித்யா கொடுத்த கோகனட் மில்க் ஷேக்கை ருசித்து ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தார்கள் விமலும் வினுவும்.

“வினு, புக்ஃபேர்ல உனக்கு ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்’ நாவல் வாங்கிக் கொடுத் தேனே, படிச்சியா?” என்று கேட்டார் வித்யா.

“சொல்ல மறந்துட்டேன் வித்யாக்கா. ரெண்டு மணி நேரத்துல படிச்சு முடிச்சிட்டு தான் வச்சேன். ரொம்ப பிரமாதமா இருந்துச்சு. நாதிரா, ரஷீத், வீம்பு பிடிச்ச மஹமத்கான், பாத்திமான்னு ரெண்டு நாளா அவங்க நினை வாவே இருந்துச்சு. கண்டிப்பா எல்லாரும் படிக்கணும்.”

“இன்னிக்கே படிச்சிடுறேன் வினு” என்றாள் விமல்.

“இந்த நாவல் கன்னடத்துல வெளிவந்தது. சாகித்ய அகாடமி விருதும் கிடைச்சது. பிறகு தமிழ் உள்பட பதிமூணுக்கும் அதிகமான இந்திய மொழிகள்ல வெளிவந்துச்சு. தன் னோட சமூகத்துப் பெண்களோட மன சாட்சியா இருந்து இதை எழுதினதா சொன் னாங்க சாரா அபூபக்கர். இப்பதான் ஜனவரி 10-ம் தேதி 86 வயசுல இறந்துட்டாங்க” என்றார் வித்யா.

“உலகப் புகழ்பெற்ற நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா செய்யப் போறதா அறிவிச்சிட்டாங்களே... ஏன்?” என்று கேட்டார் வித்யா.

“ஆமா, ஜெஸிந்தா இப்போ ரெண்டாவது முறையா பதவில இருக்காங்க. முதல்முறை பதவிக்கு வந்த உடனே பெண்களுக்கான பிரசவ விடுமுறை நாள்களை அதிகரிச்சாங்க. மாதவிடாய் பொருள்களை இலவசமா கொடுத்தாங்க. தீவிரவாத தாக்குதல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலா இருந் தாங்க... துரிதமா நடவடிக்கை எடுத்தாங்க. கோவிட் காலத்தைச் சிறப்பா கையாண்ட பெண் பிரதமர்கள்ல ஜெஸிந்தாவும் ஒருத்தர். தன்னோட பிரசவத்தை அரசு மருத்துவமனை யில வச்சுக்கிட்டு, எல்லாருக்கும் முன்னு தாரணமா இருந்தாங்க. இப்படிப்பட்ட ஜெஸிந்தா இப்போ ராஜினாமா செய்யறதுக் கான காரணம்தான் எனக்கு அதிர்ச்சியாவும் ஆச்சர்யமாவும் இருக்கு...”

“அப்படி என்ன சொன்னாங்க?”

“என் குழந்தையை என்னால நல்லா கவனிச்சுக்க முடியல. ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போய், அழைச்சிட்டு வர முடியல. கணவரோட நேரத்தைச் செலவிட முடியலை. எப்போதும் வொர்க் பிரஷர் அதிகமா இருக்கு. இதுலேருந்து விலகி, கொஞ்சம் ஜாலியா, இயல்பா வாழணும்னு சொல்லிருக்காங்க” என்றாள் வினு.

“அடப்பாவமே... இவ்வளவு பெரிய பொறுப் புக்குப் பெண்கள் வந்தாலும் குடும்பப் பொறுப்பை விட முடியல. ஒரு ஆண் என்னிக் காவது நான் வேலைக்குப் போறதால என் மனைவியை நல்லா கவனிச்சுக்க முடியல. என் குழந்தைகளை ஸ்கூல்லவிட முடியலைன்னு குற்றவுணர்வா இருக்குன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கோமா? பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தக் குற்றவுணர்வு வருது?”

“சரியான கேள்வி விமல். இந்தக் குற்ற வுணர்வுலேருந்து விடுபட இன்னும் கொஞ்ச காலம் போகணும் போல... கணவனும் பிள்ளைகளும் குடும்பமும் அதுக்கு ஒத்துழைப் பும் தரணும்.”

“பொருளாதாரச் சூழ்நிலையை ஜெஸிந்தா அரசாங்கம் சரியா ஹேண்டில் பண்ண லைன்னும் சொல்றாங்க. அதனால அவங்க கட்சிக்கு மக்கள்கிட்ட செல்வாக்கு குறைஞ் சிட்டு வருது. ஜெஸிந்தா பதவி விலகி, கட்சி யைக் காப்பாத்தறாங்கன்னும் சொல்றாங்க. உண்மை ஜெஸிந்தாவுக்குத்தான் தெரியும்” என்றாள் வினு.

 போலார் ப்ரீத்
போலார் ப்ரீத்

“நம்ம மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரா போராட்டம் நடத்தினாங்களே, பார்த்தீங்களா?”

“ஆமா... ஆனா, நேஷனல் மீடியா அதைப் பெருசா எடுத்துக்கல. இந்திய மல்யுத்த கூட்டமைப்போட தலைவரும் பாஜக எம்.பி யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக ணும்னு போராடினாங்க.”

“ போராட்டம்னு சொல்றீங்களே, எதுக்கான போராட்டம்னு சொல்லுங்க” என்றார் வித்யா.

“பாலியல் குற்றச்சாட்டு வித்யாக்கா. உடல் ரீதியாவும் மன ரீதியாவும் வீராங்கனைகள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க. குற்றம் சொன்னவங்க முன்னணி வீராங்கனைகள். வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், சரிதா, சங்கீதா போகத்னு எல்லாரும் டெல்லியில உள்ள ஜந்தர் மந்தர்ல போராட்டத்தை நடத்தினாங்க. இவங்களுக்கு ஆதரவா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் போராடினார். விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினதால போராட்டம் முடிவுக்கு வந்துச்சு. இப்போ மல்யுத்த கூட்டமைப்பின் செயலர் வினோத் தோமரை சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க.”

“எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு வீராங்கனையா உருவாகறாங்க. அவங்களை இப்படிப் பாலியல் ரீதியா துன்புறுத்தினா எப்படி வீராங்கனைகள் உருவாவாங்க? இவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கணும்.”

சற்று நேர அமைதிக்குப் பிறகு, “பொங்கலுக் காகத் திருநெல்வேலியில் உள்ள வடலிவிளை கிராமத்துல ஆண்களுக்கும் பெண்களுக்கும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப் பட்டிருக்கு. இதுல பெண்கள் 50 கிலோ கல்லை அநாயாசமா தூக்கிப் போட்டாங்க. 10 முறை தூக்கிப் போட்ட ராஜகுமாரிக்கு முதல் பரிசு கிடைச்சது. சேலை கட்டி, டிஷர்ட் போட்டு கல்லைத் தூக்கிப் போட்டதைப் பார்க்கவே சுவாரஸ்யமா இருந்துச்சு”- சந்தோஷமாகச் சொன்னாள் வினு.

“சூப்பர்! உடல் வலிமைலயும் பெண்கள் கலக்கறாங்க. நைஜீரியாவுல பருமனான பெண்கள் சேர்ந்து, டிராகன் ஸ்குவாட்ங்கிற பவுன்சர் குழுவை நடத்தறாங்க. பவுன்சர் துறையில பொதுவா ஆண்கள் மட்டுமே இருந்துகிட்டு இருந்தாங்க. இப்போ பெண் களும் பவுன்சர்களா அங்கே வலம் வர்றாங்க. அரசியல் கூட்டங்கள், விழாக்கள்னு இந்தப் பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு கொடுக் கறாங்க!” - புது தகவல் சொன்னார் வித்யா.

“கலக்கறாங்க... ஹரிப்ரீத் சாண்டி பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா?”

“யாரு, நம்ம நாட்டுப் பேரா இருக்கு?”

“இவங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வங்கதான். இங்கிலாந்துல பிறந்து வளர்ந்தவங்க. சின்ன வயசுல டென்னிஸ் வீராங்கனையா இருந்தாங்க. அப்புறம் மாரத்தான் போட்டி கள்ல ஓடிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம் மலையேற்றம் செஞ்சிட்டிருந்தாங்க...இப்போ அண்டார்டிகாவுக்குத் தனியா, எந்த உதவியும் இல்லாம போயிட்டு வந்திருக்காங்க!”

“சோலோ ட்ரிப்? அதுவும் அண்டார்டிகா வுக்கா?”

“ஆமா வித்யாக்கா, அதுவும் ரெண்டாவது தடவை. 2021 நவம்பர்ல அண்டார்டிகாவுக்குப் போனாங்க. உணவு, உடை, அத்தியாவசியப் பொருள்கள்னு 90 கிலோ எடையைப் பனிச் சறுக்கு வண்டில வச்சு இழுத்துக்கிட்டு, 48 நாள் பயணமா கிளம்பினாங்க. பனிப் பாலைவனத்துல தனியா டிராவல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கும். 48 நாள் பயணத்தை 40 நாள்ல முடிச்சாங்க. அண்டார் டிகாவுக்கு தனியா பயணம் செஞ்ச மூணாவது பெண்ணுங்கிற சாதனையைப் படைச்சாங்க!”

“அடடா! அப்புறம் எதுக்கு ரெண்டாவது ட்ரிப்?”

“அவங்களுக்கு மறுபடியும் அண்டார்டிகா வுக்கு போகணும்னு எண்ணம் வந்திருச்சு. இந்தத் தடவை ரீடி க்ளேசியரை 75 நாள்கள்ல அடையணும்னு புறப்பட்டாங்க. 68 நாள்கள்ல இலக்கை அடைஞ்சாங்க. இந்தப் பயணத்துல 1,397 கி.மீ தூரத்தைக் கடந்திருக்காங்க. தனியாளா, எந்த உதவியுமே இல்லாம, நீண்ட தூரம் பயணம் செஞ்ச முதல் பெண்ணுங்கிற சாதனையைத் தன் வசப்படுத்திட்டாங்க! இவங்களுக்கு இப்போ ‘போலார் ப்ரீத்’னு பேர் வச்சிருக்காங்க மக்கள்... இங்கிலாந்து ராணுவ மருத்துவமனையில பிசியோதெரபிஸ்டா வேலை செய்யறாங்க. 34 வயசு ஆகுது.”

“ சூப்பர் வினு....நாமளும் அண்டார்டிகாவுக்கு ஒரு ட்ரிப் போகலாமா?” என்றாள் விமல்.

“இந்தப் பனியே தாங்க முடியல... அண்டார்டிகாவா?” என்று அதிர்ச்சி யடைந்தார் வித்யா.

“சும்மாதான் சொன்னேன் வித்யாக்கா. அதுக்கெல்லாம் உடம்பும் மனசும் தயா ராகணும். சரி, நாங்க கிளம்பறோம்.”

வினுவும் விமலும் விடைபெற்றுக்கொண்டு படி இறங்கினர். வித்யா அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்.

- அரட்டை அடிப்போம்...

வினு விமல் வித்யா: பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தக் குற்றவுணர்வு?

வினு தரும் வித்தியாசமான தகவல்

பெண்ணால் முடியாதாம்!

பாலிதீன் பரவலிருந்து விடுபட நினைக்கும் நமக்குப் பெரிதும் கைகொடுப்பவை காகிதப் பைகளே... சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தக் கண்டுபிடிப்பை 19-ம் நூற்றாண்டிலேயே செய்தவர் மிகவும் பிரபலமான பெண் கண்டுபிடிப்பாளரான மார்கரெட் ஈ. நைட் (1838 - 1914). அமெரிக்காவில் பிறந்த நைட், 30 வயதில் உருவாக்கிய காகிதப் பை தயாரிப்பு இயந்திரம் மிகவும் பிரபலமானது. ஒருவர் இந்த ஐடியாவை திருடி காப்புரிமை பெற முயன்றார். நைட் அவரை நீதி மன்றத்தில் சந்தித்தபோது, அந்த ஆசாமி, ‘ஒரு பெண்ணால் இயந்திர சிக்கல் களைப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் இந்த இயந்திரத்தை அவர் தயாரிக்கவில்லை’ என்று வாதிட்டார். இறுதியில், இயந்திரம் தன்னால்தான் வடிவமைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை அளித்து, தனது இயந்திரத்துக்கு காப்புரிமை பெறும் உரிமையைப் பெற்றார் நைட்.

‘லேடி எடிசன்’ என்று அழைக்கப்பட்ட இந்த விஞ்ஞானி, மொத்தத்தில் 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இயந்திரங்களைக் கண்டுபிடித்தார். அவற்றில் 20-க்கு காப்புரிமை பெற்றார். இதில் ரோட்டரி இயந்திரம், ஷூ-கட்டிங் இயந்திரம், ஜன்னல் சட்டகம் ஆகியவையும் அடங்கும். நைட்டின் காகிதப் பை நூறாண்டுகளைத் தாண்டியும் பயன்படுத்தப்படுவதும், சமீபகாலமாக அதன் பயன்பாடு அதிகரித்து வருவதும் அவரது தீர்க்கதரிசன கண்டுபிடிப்பின் வெற்றியே!