
சேதனா கலா திருமணமாகி மஸ்வத் கிராமத்துக்குப் போனாங்க. அங்கே பெரும்பாலும் எளிய மக்கள்தான். வீட்டுல எந்த வசதியும் இருக்காது. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம்.
விமல் கொடுத்த லெமன் டீயை வித்யாவும் வினுவும் ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தனர்.
“நியூஸ் பார்த்தீங்களா?”
“இல்ல வினு, துருக்கிலயும் சிரியாலயும் ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பார்த்து நடுங்கிப் போயிட்டேன். என்னால பார்க்கவே முடியல. பல்லாயிரக்கணக்கானவங்க உயிரிழந்துட் டாங்க... கொடுமை...”
“ரொம்ப மோசமான பேரழிவு. எனக்கும் பார்க்க முடியல வித்யாக்கா. மீண்டு வர்றது அவ்வளவு ஈஸி இல்ல...”
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, “ஒரு திரு நம்பி கர்ப்பமா இருக்கார்னு பக்கத்து வீட்ல சொல்லிட்டிருந்தாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. எப்படி இது?” என்று பேச்சை ஆரம்பித்தார் வித்யா.
“கேரளாவைச் சேர்ந்தவர் ஸஹாத். பெண்ணா பிறந்து, ஆணா மாறின திருநம்பி. ஜியா பாவல் ஆணா பிறந்து, பெண்ணா மாறின திருநங்கை. இவங்க ரெண்டு பேரும் காதலிச்சு, ஒண்ணா வாழ்ந்துட்டு வர்றாங்க. இவங் களுக்குக் குழந்தை வேணும்னு ஆசை. ஆனா, தத்தெடுக்க சட்டச் சிக்கல் இருந் துச்சாம். அதனால ஜியாவோட விருப்பத் துக்காக, இன்னும் முழுமையா திருநம்பியா மாறாத ஸஹாத், குழந்தை பெத்துக் கொடுக்க சம்மதிச்சார். ஜியாவோட விந்தணுவை வாங்கி, டெஸ்ட் டியூப்ல கருவை உருவாக்கி, ஸஹாத்தோட கர்ப்பப்பையில வச்சிட்டாங்க. குழந்தையும் பிறந்துடுச்சு. இதுக்கப்புறம் ஸஹாத் முழுமையா திருநம்பியாகிடுவாராம்” - ஆச்சர்யம் விலகாமல் விளக்கினாள் வினு.

“அப்படியா! குழந்தை நல்லபடியா வளரட்டும்...” வாழ்த்தினார் வித்யா.
“ரெண்டு பேரோட லவ் எனக்குப் பிடிச் சிருக்கு. ஸஹாத் மார்பக அறுவை சிகிச்சை செய்துகிட்டதால பால் கொடுக்க முடியாது. யாரோ தாய்ப்பால் கொடுத்து உதவப் போறதா சொல்லிருக்காங்களாம்” - கூடுதல் தகவல் சொன்னாள் வினு.
“ஓ... நல்லது. இங்க பாருங்க வித்யாக்கா. இவங்கதான் சியன் க்ரீன்” என்று ஒரு வீடியோவைக் காட்டினாள் விமல்.
ஆச்சர்யப்பட்ட வித்யா, “ஒரு காலோட எவ்வளவு அநாயாசமா எல்லாத்தையும் பண்றாங்க...” என்றார்.
“பத்து வருஷம் முன்னால நியூயார்க் ரோடுல நண் பரோட நடந்து போயிட் டிருந்தாங்க சியன். அப்போ ஒரு கார் வேகமா வந்து, ஒரு சைக்கிள்காரர் மேல மோதி, சியனையும் தள்ளிவிட்டிருச்சு. அவங் களால எழுந்திருக்கவே முடியல. அப்புறமா தான் இடது கால் முட்டிக்குக் கீழ நொறுங்கிருச் சுன்னு தெரிஞ்சது. எப்படியாவது மீண்டு வந்துரணும்னு நினைச்சாங்க சியன். ஆபரேஷன் செஞ்சுகிட்டாங்க. செயற்கைக் கால் வச்சு நடக்க ஆரம்பிச்சாங்க. மாடலா னாங்க. தன்னம்பிக்கைப் பேச்சாளரானாங்க. இப்போ ஜிம்முக்கு தனியாவே போய், வொர்க் அவுட் செய்யறாங்க. ஜிம் பயிற்சி தனக்கு ரொம்ப தன்னம்பிக்கையைத் தர்றதா சொல்றாங்க.”
“கிரேட்... ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவங்க எல்லி வில்சன். கல்லூரி மாணவி, தடகள வீராங்கனை. இவங்க மருத்துவ மாணவரும் விளையாட்டு வீரருமான டேனியல் மெக்ஃபர்லேனால பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டாங்க. டேனியலுக்கு சமூகத் துல நல்ல மனிதர்ங்கிற பேர் இருந்துச்சு. இந்த மாதிரி நல்ல பேர் வாங்கினவங்களும் பாலியல் குற்றவாளியா இருக்கலாம்கிறதை வெளியுலகத் துக்குச் சொல்ல நினைச்சாங்க எல்லி வில்சன். டேனியலை சந்திச்சுப் பேசினாங்க. அவர் தான் செய்ததை நினைச்சுக் கவலைப்படல. ஆனா, தன்னோட நல்ல பேருக்கு ஆபத்து வரக் கூடாதுன்னு சொன்னார். அவர் பேசினதை ரெக்கார்டு செஞ்ச எல்லி, அதை கோர்ட்டுல சாட்சியமா காட்டினாங்க. இப்போ டேனியல் இன்னும் ஒரு வழக்குலயும் பாலியல் குற்றவாளியா சேர்க்கப்பட்டு, அஞ்சு வருஷம் தண்டனை அனுபவிக்கிறார். பாதிக்கப்பட்டவங்க ஏன் தண்டனை அனுபவிக்கணும்னு நினைச்சேன். அதனால தான் அம்பலப்படுத்தினேன்னு சொல்லிருக் காங்க எல்லி” என்றார் வித்யா.

“ஆமா, ஆனா அந்தச் சாட்சியத்தைக்கூட கோர்ட் முழுமையா ஏத்துக்கலையாம். ரொம்ப ரொம்ப போராடிதான் இந்தத் தண்டனையை வாங்கிக் கொடுத்திருக்காங்க எல்லி.”
“எல்லியின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். விமல், இன்னும் கொஞ்சம் லெமன் டீ கிடைக்குமா?”
“உங்களுக்காகவே போட்டு, ஃப்ளாஸ்க்ல வச்சிருக்கேன். கொண்டு வரேன்” என்று எழுந்து சென்றாள் விமல்.
“வித்யாக்கா, கனகாவுக்கு பேங்க்ல லோன் கிடைச்சிருச்சா?”
“இன்னும் கிடைக்கல... இந்த மாசமே பிசினஸ் ஆரம்பிக்கணும்னு நினைச்சா. ஆனா, லோன் கிடைக்காததால தள்ளிப் போயிட்டே இருக்கு.”
விமல் மூன்று கோப்பைகளில் டீயுடன் வந்தாள்.
“நாமளே, நமக்காக ஒரு பேங்க் ஆரம்பிக் கணும் போல...”
‘`நாமளே ஆரம்பிச்சிடுவோமா விமல்?’’
“அதை, 25 வருஷத்துக்கு முன்னயே ஆரம் பிச்சிட்டாங்க வித்யாக்கா. மகாராஷ்டிராவுல மான் தேஷி மகிளா கூட்டுறவு வங்கியை நடத்தறது பெண்களேதான். இந்த வங்கியை ஆரம்பிக்கும்போது அவங்களுக்கு எழுதப் படிக்கக்கூட தெரியாது. பெண்களுக்காக, பெண்களால நடத்தப்படற வங்கி இது.”
“அடடா! சூப்பர் விமல். இதை எப்படி, யார் ஆரம்பிச்சாங்க?”
“சேதனா கலா திருமணமாகி மஸ்வத் கிராமத்துக்குப் போனாங்க. அங்கே பெரும்பாலும் எளிய மக்கள்தான். வீட்டுல எந்த வசதியும் இருக்காது. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம். பெண்களும் வேலை செய்வாங்க. அந்தச் சொற்ப வருமானத்துலயும் கொஞ்சம் சேமிக்க நினைப்பாங்க. வீட்டு ஆண்கள் அதை எடுத்துட்டுப் போய் குடிச்சிடுவாங்க. சேதனா அந்தப் பெண்களை அழைச்சிட்டு வங்கிகளுக்குப் போனாங்க. ஆனா, 5, 10 ரூபாய்களை எல்லாம் சேமிக்க முடியாதுன்னு வங்கிகள்ல சொல்லிட்டாங்க. அதனால பெண்கள் வங்கியை ஆரம்பிக்கணும்கிற ஐடியா சேதனாவுக்கு வந்துச்சு. ரிசர்வ் பேங்குக்கு விண்ணப்பிச்சாங்க. ஆனா, படிப்பறிவு இல்லாத பெண்கள் வங்கி ஆரம்பிக்க முடியாதுன்னு ரிசர்வ் வங்கி சொல்லிருச்சு. கலங்கிப்போன சேதனாவுக்கு மத்த பெண்கள் தைரியம் கொடுத்தாங்க. படிக்கிறதா சொன்னாங்க. வீட்டு வேலை, கூலி வேலை முடிச்சிட்டுப் படிக்க வந்தாங்க. கொஞ்ச காலத்துக்குப் பின்னால ரிசர்வ் பேங்குக்கு போனாங்க. அப்ப என்ன நடந்துச்சு தெரியுமா?”

“ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு... நிறுத்தாம சொல்லு.”
“எங்ககிட்ட என்ன கணக்கு கொடுத்தாலும் போட்டுக் காட்டறோம். உங்க அதி காரிகள் கால்குலேட்டர்ல போடறதைவிட நாங்க வேகமா கணக்குப் போடுவோம்னு சொன்னாங்க. வங்கி ஆரம்பிக் கிறதுக்கு அனுமதி வாங் கினாங்க. அவங்களே பங்குகளை வாங்கி, முதலீடும் செஞ்சாங்க. இந்த வங்கியில ஆண்களும் பெண்களும் கணக்கு ஆரம்பிக் கலாம். ஆனா, பெண்களுக்கு மட்டுமே லோன் கொடுக் கறாங்க. 25 வருஷத்துல ஒரு லட்சம் பெண்களுக்குக் கடன் கொடுத்திருக்காங்க. இப்போ ஒவ்வொரு வருஷமும் பல்லாயிரம் கோடி ரூபாய் இந்த வங்கி மூலமா கடனா கொடுக்கும் அளவுக்கு வங்கி வளர்ந்திருச்சு. இப்போ இந்த வங்கி எட்டு கிளை களோட பெண்களோட தொழி லுக்கும் சேமிப்புக்கும் ஆதரவா இருக்கு.”
“பெண்கள்தான் எவ்வளவு புத்திசாலிகளா இருக்காங்க... உழைக்கிறாங்க, சேமிக்கிறாங்க, குடும்பத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுட்டுப் போறாங்க” என்றார் வித்யா.
“நீங்க சொல்றது சரிதான்.”
“இந்த வருஷம் எம்மி மியூசிக் அவார்ட்ஸ்ல ரெண்டு விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன். அமெரிக்காவோட பிரபலமான பாடகி, பாடலாசிரியர் பியான்ஸுக்கு நாலு அவார்ட்ஸ் கிடைச்சிருக்கு. இதோட 32 கிராமி அவார்டுகளை வாங்கியிருக்காங்க பியான்ஸ். பெங்களூருல பிறந்த ரிக்கி கேஜுக்கு மூணாவது கிராமி அவார்டு கிடைச்சிருக்கு. ரெண்டு பேருக்கும் நம்மளோட வாழ்த்துகள்!”
“சரி, விமல் நேரமாச்சு... நான் கிளம்பறேன்” என்று எழுந்தாள் வினு.
“நானும் கிளம்பறேன்” என்று வித்யாவும் விடைபெற்றார்.
- அரட்டை அடிப்போம்...
வினு தரும் வித்தியாசமான தகவல்
‘பெரிஸ்கோப்’ உருவாக்கத்துக்குக் காரணம்...
நீர்மூழ்கிக் கப்பல் விளக்கு மற்றும் தொலைநோக்கியைக் (Underwater Telescope) கண்டுபிடித்தவர் ஒரு பெண். அவர் பெயர் சாரா மாதர்.

ஆண்டு - 1845. மாதர் 1845-ம் ஆண்டில் காப்புரிமை பெற்ற நீர்மூழ்கிக் கப்பல் தொலைநோக்கி என்பது ஒரு குழாயுடன் இணைக்கப்பட்ட ஒரு விளக்கு கொண்ட கருவி. அது நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் உள்நாட்டுப் போரின் சிதைவுகள், சேதமடைந்த கப்பல் பொருள்கள் மற்றும் எதிரிகளின் செயல்பாடுகளை புலனாய்வு செய்வதற்காக தண்ணீருக்குக் கீழே பார்க்க முயற்சி செய்தற்காகப் பயன்படுத்தினார்கள். இவரது இந்தக் கண்டுபிடிப்பே ‘பெரிஸ்கோப்’ என்ற கருவியின் உருவாக்கத்துக்குக் காரணமாக அமைந்தது.