ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வினு விமல் வித்யா: சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஒரு போராட்டம்!

 வந்திதா பாண்டே
பிரீமியம் ஸ்டோரி
News
வந்திதா பாண்டே

இந்தப் புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்துல பட்டியலின மக்கள் வாழும் பகுதியில உள்ள குடிநீர்த் தொட்டில மலம் கலந்த சம்பவம் ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு..

2022-ம் ஆண்டின் இறுதிச் சந்திப்பை மெரினாவில் வைத்துக் கொள்ளலாம் என்று விமல் சொன்னவுடன், வித்யாவும் வினுவும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தனர்.

“பனி பெய்யுது. நல்ல குளிர் வேற. இதுல பீச்சுல சந்திப்பா விமல்... டூமச்” என்று குளிர் வெடவெடக்க வந்து நின்றார் வித்யா.

“என்னக்கா, இதெல்லாம் ஒரு பனியா... இதெல்லாம் ஒரு குளிரா...” என்று சிரித்தாள் விமல்.

“விஷப்பனின்னு சொல்வாங்க. ஜலதோஷம், காய்ச்சல்ல கொண்டு விட்டுடும்!”

“இதுக்கே இப்படிப் பயப்படறீங் களே, உங்களை எல்லாம் அமெரிக்கா, கனடால விட்டா என்ன செய்வீங்க?”

“அமெரிக்கால இருக்கிற என் கஸின்கிட்ட பேசினேன். பனி கட்டிக் கட்டியா கொட்டித் தீர்க்குதாம். தண்ணியைப் பிடிச்சு டம்ளர்ல வச்ச அஞ்சாவது நிமிஷம் பனிக்கட்டியா உறைஞ்சிடுதாம். பெரும்பாலான அமெரிக்க மாகாணங்கள் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்காம். பவர் இல்லையாம். தண்ணி இல்லை யாம். குளிர் தாங்காம காருக்குள்ளேயே இருந்த சிலரும் வெளியில வந்த சிலரும் இறந்து போயி ருக்காங்க. மனுஷங்களே இவ்ளோ கஷ்டப்படும்போது கால்நடைகள், செல்லப் பிராணிகள் எல்லாம் ரொம் பவே பாவம்னு சொன்னான். ரொம்ப கஷ்டமாயிருந் துச்சு” என்றார் வித்யா.

“ஆமா, காலநிலை மாற்றம் ரொம்பவே பயமுறுத் திட்டிருக்கு. இதனால கிறிஸ்துமஸ், நியூ இயர் எல்லாம் வழக்கமான உற்சாகத்தோட கொண்டாட முடியல. இப்ப சொல்லுங்க வித்யாக்கா, குளிருதா இங்கே?”

“இல்ல விமல். சூடா ஸ்வீட் கார்ன் சாப்பிட்டா நல்லாயிருக்கும்!”

“அதோ, வினு வாங்கிட்டு வர்றா பாருங்க...”

மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“இந்தப் புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்துல பட்டியலின மக்கள் வாழும் பகுதியில உள்ள குடிநீர்த் தொட்டில மலம் கலந்த சம்பவம் ரொம்பவே அதிர்ச் சியா இருக்கு...” கோபமும் வருத்தமுமாக ஆரம்பித்தாள் வினு.

“என்ன மனுஷங்க இவங்க? எவ்வளவு ஜாதிவெறி இருந்திருந்தா இப்படிப் பண்ணியிருப்பாங்க? இதுக் கெல்லாம் கடுமையான தண்டனை கொடுக்கணும்.”

 வந்திதா பாண்டே
வந்திதா பாண்டே

“ஆமா விமல், இதை விசாரிக்கறதுக்குதான் புதுக் கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவும், எஸ்.பி வந்திதா பாண்டேயும் போனாங்க. அப்போதான் அந்தக் கிராமத்துல உள்ள பட்டியலினத்தைச் சேர்ந் தவங்கள, கோயிலுக்குள்ள நுழைய விட மாட்டேன்னு சொல்றாங்கன்னு கேள்விப்பட்டிருக்காங்க. உடனே கலெக்டரும் எஸ்.பியும் மக்களை அழைச்சிட்டு கோயிலுக்குள்ள போய் சாமி கும்பிட வச்சாங்க!”

“அவங்க ரெண்டு பேருமே துணிச்சலானவங்க வினு. இந்த விஷயத்துக்காக அவங்களைப் பாராட் டணும். ஆனா, சுதந்திரம் அடைஞ்சு முக்கால் நூற் றாண்டாகியும் பெரியார் மண்ணுன்னு சொல்லிக்கிற தமிழ்நாட்டுலயும் இப்படியெல்லாம் ஜாதிக்காக ஒடுக்கப்படறது எல்லாம் ரொம்ப மோசமான விஷய மாயிருக்கு... அரசு இது மாதிரி கொடுமைகளுக்கு எதிரா தீவிரமா நடவடிக்கை எடுக்கணும்.”

“இதைக் கேளுங்க வித்யாக்கா... க்ரீன்லாந்துல வசிக்குற ஃபெவியன், திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்கலைன்னு ரொம்பவே வருத்தப் பட்டாங்க. ஒருகட்டத்துல மருத்துவமனைக்குப் போய் பரிசோதனை செஞ்சப்ப, அவங்க உடம்புல காப்பர்-டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடிச்சிருக்காங்க. ஃபெவியன் அதிர்ந்து போனாங்க. `16 வயசுல மருத்துவ மனைக்குப் போனப்ப, என் உடம்புல என் சம்மதமோ, என் குடும்பத்தார் சம்மதமோ கேட்காம காப்பர்-டி வச்சிட்டாங்க. அப்பவே எனக்கு சந்தேகம் வந்து, என்னன்னு கேட்டேன். குழந்தை உண்டாகற மாதிரி யான காப்பர்-டி வந்திருச்சுன்னு சொன்னாங்க. நானும் அதை நம்பிட்டேன். இப்பதான் தெரியுது அவங்க என்னை ஏமாத்திருக்காங்க. அந்தக் கால கட்டத்துல நிறைய பெண்களுக்கு இப்படி அனுமதி இல்லாம, காப்பர்-டியை வச்சிருக்காங்க. இப்பதான் இது சம்பந்தமா விசாரணை நடக்க ஆரம்பிச்சிருக்கு'ன்னு சொல்றாங்க ஃபெவியன்.”

 கவிதா ராமு
கவிதா ராமு

“என்ன காரணத்துக்காக இதைச் செஞ்சிருந்தாலும் இது ரொம்பவே தப்பு. குழந்தைப் பிறப்பைக் கட்டுப் படுத்த இப்படியெல்லாம் பண்ண முடியுமா..?”

“உரிமை மீறல்... நிறைய பெண்களோட உடம்புல பல ஆண்டுகளா இருந்த இந்த காப்பர்-டியால நிறைய உடல்நலப் பிரச்னைகள் வந்திருக்கு. குழந்தை இல் லைங்கிற மன அழுத்தமும் ஏற்பட்டிருக்கு, பாவம்...” கூடுதல் தகவல் சொன்னாள் விமல்.

“அல்பேனியாவில உள்ள பால்கன் கிராமத்துல நூறு வருஷங்களா பல பெண்கள், தங்களை ஆணாக வெளிப்படுத்திட்டு வாழ்ந்துட்டு வர் றாங்க. அதாவது ஆணின் உடை, ஆணின் ஹேர் ஸ்டைல், ஆண்கள் மட்டுமே செய்யக் கூடிய வேலைனு கருதப்படறத எல்லாம் செஞ்சிட்டு வர்றாங்க!”

“ஏன் இப்படிச் செய்யறாங்க வினு?”

“பெண்களுக்கு அங்கே ரொம்ப குறை வான உரிமைகள்தான் கொடுக்கப் பட்டிருந்ததாம். கணவன் இறந்துட்டா மனைவி வேலை செஞ்சு சம்பாதிக் கணும். அதுவும் கம்மியாதான் வருமானம் கிடைக்கும். அதனால மகள்கள் வேலைக்குப் போகணும். பெண்ணா போனா சரியான வேலை கிடைக்காது. அதுவே ஆண் மாதிரி போனா நல்ல வேலை, நல்ல சம்பளம், மதிப்பும் கிடைக்கும்ங்கிறதால பல பெண்கள் இப்படி இருந்துட்டு வந்திருக்காங்க. அங்கே பெண்களுக்கு சிகரெட், டிரிங்ஸ் எல்லாம் அனுமதி கிடையாது. ஆனா, ஆண் தோற்றத் துல இருக்குற பெண்களுக்கு அனுமதி உண்டு!”

“அதாவது வறுமையை விரட்ட, இப்படி ஆண் தோற்றத்துக்கு மாறிடறாங்கன்னு சொல்லு.”

“ஆமா வித்யாக்கா, அதோட உரிமைகளும் கிடைக்குது. 15-ம் நூற்றாண்டுல ஆரம்பிச்ச இந்த நடைமுறை, இப்ப ரொம்பவே குறைஞ் சிடுச்சி. 12 பெண்கள் மட்டும்தான் இப்படி ஆண் மாதிரி இப்போ வாழ்ந்துக்கிட்டிருக் காங்க. இந்தப் பழக்கம் முழுக்கவே நின்னுட ணும்னு அந்தக் கிராமத்துப் பெண்கள் இப்ப சொல்றாங்க...”

“இரான் நிலவரம் இப்ப எப்படி இருக்கு விமல்?”

“ரொம்பவே கலவரமா கிடக்கு வித்யாக்கா. இளைஞர்கள் துணிச்சலோட போராட்டத்துல கலந்துக்கறாங்க. அதைத் தடுக்க மரண தண்டனை கொடுத்திட்டு வர்றாங்க. 500 பேருக்கு மேல இப்படி அரசாங்கத்தால கொல்லப்பட்டிருக்கலாம்னு சொல்றாங்க. கொல்லப்பட்ட இளைஞர்களோட அம்மாக் களே துணிச்சலோட வீதிக்கு வந்து போராட ஆரம்பிச்சிட்டாங்க. குழந்தைகள் உயிர் மேல அக்கறையும் பயமும் இருக்கிற தாய்மார்கள் உறுதியோட போராட்டத்துல இறங்கியிருக் காங்க. இது பெண்கள் சுதந்திரக் காற்றை சுவா சிக்கணும்னு முடிவு எடுத்த மாதிரி இருக்கு.”

“அவங்க போராட்டம் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. அப்புறம் ஆப்கானிஸ்தான்ல என்ன நடக்குது...” ஆர்வமாகக் கேட்டாள் வினு.

“அங்கே தாலிபன்கள் இனி பெண்கள் பல்கலைக்கழகத்துக்குப் போகக் கூடாதுன்னும் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங் கள்ல வேலை செய்யக் கூடாதுன்னும் சட்டத் தைக் கொண்டு வந்துட்டாங்க. இதை எதிர்த் துப் பெண்கள் போராட்டங்களை நடத்திட்டு வர்றாங்க.”

“தாலிபன் அரசாங்கத்தை உலக நாடுகள் அங்கீகரிக்கல. பெண்களுக்கான கல்வி, உரிமைகள் கொடுத்தாதான் அங்கீகாரம் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க. இவங்க அத பத்தியெல்லாம் கவலைப்படாம, பெண்களை ஒடுக்கறதையே முழு நேர வேலையா வச்சிருக் காங்க போல!”

“என்னது, இந்த வருஷத்தோட கடைசி அரட்டை ஒரே சோகமாகவும் வேதனையாகவும் இருக்கு. வினு, சந்தோஷமா கிளம்பற மாதிரி ஏதாவது சொல்லேன்” என்றார் வித்யா.

“சரி, எல்லாருக்கும் ஹேப்பி நியூ இயர். அடுத்த வருஷம் எல்லாருக்கும் நல்லதே நடக் கட்டும். சமூகம் ஆரோக்கியமா மாறட்டும். கிளம்பலாமா வித்யாக்கா... கொஞ்சம் குளிருது” என்று விமல் சிரித்தாள். மூவரும் வண்டிகளை எடுத்தனர்.

- அரட்டை அடிப்போம்...

****

வினு தரும் வித்தியாசமான தகவல்

வினு விமல் வித்யா: சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஒரு போராட்டம்!

தேவையின் தாய்!

டிஷ்வாஷர் எனும் பாத்திரங்கழுவியைக் கண்டுபிடித்தவர் ஜோசபின் காக்ரேன் என்ற பெண்மணி. வேலையாட்கள் செய்வதைவிட வேகமாக பாத்திரங்களைக் கழுவும் எந்திரத்தை உருவாக்க விரும்பினார் அவர். அதோடு, விலையுயர்ந்த சீனா பாத்திரங்களும் உடையாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தார். செப்பு கொதி கலனுக்குள் சக்கரத்தைத் திருப்பும் மோட்டாரை உள்ளடக்கிய அவரது எந்திரம், நீர் அழுத்தத்தைப் பயன்படுத்திய முதல் தானியங்கி பாத்திரங்கழுவியாக மாறியது. சுத்தம் செய்ய தேவையான நீர் அழுத்தத்தைப் பயன்படுத்தும்போது, அது பாத்திரங்களையும் உடையாமல் பாதுகாப்பாக வைத்திருந்தது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜோசபினின் கணவர், அவரைப் பெரும் கடனில் விட்டுவிட்டு இறந்துபோனார். இதுவே ஜோசபினை 1886-ம் ஆண்டில் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்று சொந்த உற்பத்தித் தொழிற்சாலையைத் திறக்கத் தூண்டியது.