
பெண்கள்னா கதை, கவிதைதான் எழுதுவாங்கங்கறதை உடைச்சு, அறிவியல், வரலாறு, அரசியல், சமூகம்னு எல்லா சப்ஜெக்ட்லயும் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதறதைப் பார்க்கறப்போ சந்தோஷமா இருக்கு
சென்னை புத்தகக் காட்சிக்கு வந்து சேர்ந்தார்கள் வினு, விமல், வித்யா மூவரும்.
“ஒருபக்கம் இலக்கிய விழா, இன்னொரு பக்கம் புத்தகத் திருவிழா. சென்னையே பரபரப்பா இருக்கு...”
“ஆமா, வித்யாக்கா. சண்டேங்கிறதால நல்ல கூட்டம் வேற. உள்ளே ரொம்ப நேரம் இருக்க முடியல. வெளியில சில்லுனு பனி.”
நவதானிய சுண்டலும் லிச்சி ஜூஸும் வாங்கிக்கொண்டு வந்தாள் வினு. மூவரும் புல் தரையில் அமர்ந்து, சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள்.
“இந்த வருஷம் சில பிரத்யேக ஸ்டால்களை பார்த்தேன் வித்யாக்கா. ‘குயர் பப்ளிஷிங் ஹவுஸ்’ ரொம்பவே அட்ராக்ட் பண்ணுது. திருநர் எழுதின புத்தகங்கள் இங்கே பிர தானமா இருக்கு. ஸ்டாலே வானவில் நிறங்கள்ல அட்டகாசமா இருந்துச்சு.”
“நான் நம்ம கீதா இளங்கோவனோட ‘துப்பட்டா போடுங்க தோழி’ புத்தகத்தை வாங்கினேன்.’’
‘‘சூப்பர் வினு... 2022-ல வெளியான முக்கிய மான புத்தகங்கள் பட்டியல் நிறைய வந் துருக்கு. அதுல பெரும்பாலான புத்தகங்கள் ஆண்களோடதுதான். ஆனா, கீதாவோட `துப்பட்டா' புக்கும், கடல்சார் ஆய்வாளர் நாராயணி சுப்ரமணியன் எழுதின ‘விலங்கு களும் பாலினமும்’ புக்கும் நல்ல கவனத்தைப் பெற்றிருக்கு!’’

‘‘நான் நாராயணியோட எழுத்துகளை விகடன்.காம்-ல (https://bit.ly/3QrbRpv) படிச் சிருக்கேன். அறிவியலை இவ்ளோ அழகாவும் எளிமையாவும் எழுத முடியுமான்னு ஆச்சர்யப்படுத்திடுவாங்க அவங்க!’’
‘‘ஆமா விமல்... பெண்கள்னா கதை, கவிதைதான் எழுதுவாங்கங்கறதை உடைச்சு, அறிவியல், வரலாறு, அரசியல், சமூகம்னு எல்லா சப்ஜெக்ட்லயும் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதறதைப் பார்க்கறப்போ சந்தோஷமா இருக்கு. கோகிலான்னு ஒரு பொண்ணு நவீன இணையத் தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்தறதுங்கறதைப் பத்தி தமிழ்ல எழுதியிருக்காங்க. அதுவும் நல்லா இருக்கு!’’
“அப்படியா வித்யாக்கா... நான் இலங்கை எழுத்தாளர்களோட நூல்களை எல்லாம் `இலங்கை படைப்புகள்'கிற ஸ்டால்ல பார்த் தேன். பெண்களோட படைப்புகள் கண்ணுல பட்டுச்சு. வாங்கிப் படிக்கணும்’’ என்றாள் வினு.
“அதேபோல சிங்கப்பூர் இலக்கிய அரங்கும் சென்னை புத்தகக் காட்சில இருக்கு. அதுலயும் பெண் படைப்பாளர்கள் நிறைய எழுதியிருக் காங்க!’’
“சரி, இப்போ சிவாவுக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுவோம். சியாச்சின் பனிமலை ரொம்ப உயரமான இடம். அங்கே நாட்டைக் காக்கும் பணியில முதல் முறையா சிவா செளகான்ங்கிற பெண் அதிகாரி நியமிக்கப் பட்டிருக்காங்க. இது இந்தியாவும் பாகிஸ் தானும் அடிக்கடி சண்டை போட்டுக்குற இடமாவும் இருக்கு. ராஜஸ்தானைச் சேர்ந்த சிவா செளகான், 11 வயசுலேயே அப்பாவை இழந்துட்டாங்க. அம்மாதான் படிக்க வெச்சிருக்காங்க... இன்னிக்கு உயர்ந்த பொறுப்புக்கு வந்திருக்காங்க.”
“கிரேட் விமல்... பெங்களூரு அமிர்தஹள்ளி கோயில்ல ஒரு பெண் தாக்கப்பட்ட வீடியோ பார்த்தேன். ரொம்ப அதிர்ச்சியாயிருச்சு. கூட்டம் இல்லாத நேரத்துல, நேர்த்தியா உடை அணிஞ்ச அந்தப் பெண், சுவாமி சிலைகிட்ட உட்காரப் போயிருக்காங்க. அவங்களை உட்காரக்கூடாதுன்னு கோயில் நிர்வாகிகள் சொல்ல, அவங்க அதைக் கேட்காம உட்கார்ந்திருக்காங்க. அவங்களைத் தரதரன்னு இழுத்துத் தள்ளி, அடிக்கிறார் ஒருத்தர். அதை, காவி உடையில இருந்த ஒருத்தரும் பார்த்துக்கிட்டே இருக்கார். அடிக்கிறவரை யாரும் கண்டிக்கல. அந்தப் பொண்ணு மறுபடியும் மறுபடியும் கோயிலுக் குள்ளே போறாங்க. இந்த வீடியோ வைர லானதும் விசாரணை நடக்குது. அவங்க மன நிலை பாதிக்கப்பட்டவங்கன்னு சொல்றாங்க.”

“மனநலம் சரியில்லாதவங்கனு சொல்லிட றது இப்ப ஃபேஷனாயிருச்சு வித்யாக்கா.”
“கரெக்ட்தான் வினு. இவ்வளவுக்கும் அவங்க அப்படி எதுவுமே வித்தியாசமா நடந்துக்கல.”
“ம்... இதே மாதிரிதான் அமெரிக்காவுல இருந்து வந்த ஏர் இந்தியா ஃப்ளைட்ல சங்கர் மிஸ்ராங்கிறவர், பிசினஸ் கிளாஸ்ல பயணிச்ச வயசான பெண் மேல சிறுநீர் கழிச்சிருக்கார். அந்தப் பெண் புகார் கொடுத்திருக்காங்க. முதல்ல கண்டுக்கல. அதுக்கப்புறம் விசாரணை நடத்தி, சங்கர் மிஸ்ராவைக் கைது செஞ்சிருக் காங்க. போதையில இப்படி செஞ்சிருக்காராம். அமெரிக்காவுல சங்கர் வேலை பார்க்கிற நிறுவனம் அவரை வேலையை விட்டு அனுப்பிருச்சு...”
“நானும் அந்த நியூஸை படிச்சேன். வெரி ஹாரிபிள்” - எரிச்சலான குரலில் சொன்னாள் விமல்.
“நான் ஒரு நல்ல நியூஸ் சொல்லட்டா...’’ என ஆரம்பித்தார் வித்யா... ``ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை விர்ஜினியா டார சில்லாவுக்கு கோவிட் காலத்துல வீட்டி லிருந்தப்ப திடீர்னு தலைவலி, தூங்கவே முடியல. மெடிக்கல் டெஸ்ட் பண்ணினதுல மூளையில் பெரிய புற்றுக்கட்டி இருக்குறது தெரிஞ்சிருக்கு. விர்ஜினியாவுக்கு பிழைப் போமா, மறுபடியும் விளையாட முடியுமான்னு வருத்தமாயிருந்துச்சு. அவங்க அம்மாவும் அப்பாவும் உயிர் பிழைக்கிறதுதான் முக்கியம்னு சொல்லி, விர்ஜினியாவை தயார் செஞ்சாங்க. 10 மணி நேரம் ஆபரேஷன் நடந்திருக்கு. அப்புறம் 15 ரேடியோதெரபி,
30 கீமோதெரபி எடுத்துக்கிட்டாங்க. அவங்களால ரெண்டு கிலோவைக்கூட தூக்க முடியல. கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தாங்க. மேட்ச் நடக்கறப்ப ஸ்டேடியத்துல போய்ப் பார்த்தாங்க. சக வீராங்கனைகள் விர்ஜினியாவை மறுபடியும் விளையாடச் சொல்லிக்கிட்டிருந்தாங்க. 13 மாசத்துல விர்ஜினியா ஒரு வீராங்கனையா கிரவுண்ட்ல விளையாடினாங்க. நோயையும் ஜெயிச்சு, தன்னோட பழைய வாழ்க்கையையும் மீட்டுட் டாங்க. விர்ஜினியாவை 2022-ம் ஆண்டோட சிறந்த வீராங்கனையா ‘தி கார்டியன்’ நாளிதழ் தேர்ந்தெடுத்திருக்கு’’ என்றார் வித்யா.

“கேள்விப்பட்டீங்களா... பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா வுக்கு மார்பகப் புற்றுநோயும் தொண்டைப் புற்றுநோயும் வந்திருக்கு” - விமல் சொன்னதும் அதிர்ச்சியானார்கள் வினுவும் வித்யாவும்.
“இப்ப அவங்களுக்கு 66 வயசாகுது.... ரெண்டு கேன்சரும் ஆரம்ப ஸ்டேஜ்ல இருக் கிறதால, குணப்படுத்திடலாம்னு சொல்றாங்க.”
“விர்ஜினியா மாதிரி, குணமாகி வரணும் மார்ட்டினா.”
“ மிகச் சிறந்த வீரராவும் மிகச் சிறந்த மனித ராவும் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்த கால்பந்தின் ராஜா பீலேவுக்கு அஞ்சலி செலுத்திடுவோம்.”
“ஆமா, எங்க அப்பா, அம்மாவெல்லாம் பீலேவுக்காகத்தான் ஃபுட் பால் மேட்ச் பார்க்க ஆரம்பிச்சாங்களாம். அவர் ஆடும் போதும் நம்மூர்ல டிவி பயன்பாடு அதிகம் இல்ல. ஆனாலும், அவருக்கு செல்வாக்கு இருந்துச்சு” என்றாள் விமல்.
“வறுமையில பிறந்து வளர்ந்தவர். பீலேவின் அப்பாவும் கால்பந்து வீரர்தான். தன் மகனையும் ஒரு வீரனா உருவாக்கணும்னு நினைச்சாரு. பீலேவின் திறமையால 17 வயசுலேயே வேர்ல்டு கப் போட்டியில விளையாட சான்ஸ் கிடைச்சது. ஃபைனல்ல ரெண்டு கோல்களை அடிச்சு, பிரேசில் கப் வாங்க முக்கியமான காரணமா இருந்தார். அதுலேருந்து பீலேவுக்கு ஏறுமுகம்தான்.அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் திறமையும் பிரேசில் தாண்டியும் மக்களோட அன்பைப் பெற காரணமா இருந்துச்சு. நாலு உலகப் போட்டிகள்ல விளையாடி, மூணு உலகப் கோப்பைகளைத் தன் நாட்டுக்காக வாங்கிக் கொடுத்தவர்.”
“ஆமா, வித்யாக்கா. புகழ், பணம் எல்லாம் வந்தும் அவர் எளிமையான மனிதராவே கடைசி வரை இருந்தார். ரெண்டு தடவை இந்தியாவுக்கு வந்தார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு இங்கே ரசிகர்கள் இருந்ததைப் பார்த்து நெகிழ்ந்துட்டார். அமெரிக்காவுல இன்னிக்கு ஃபுட்பால் மேல மக்களுக்கு க்ரேஸ் இருக்குன்னா அதுக்கு பீலே, அங்கே விளை யாட்டை வளர்த்துவிட்டதுதான் காரணம். ரிட்டையர் ஆகி நாற்பது வருஷங்களாகியும் மக்கள் மனசுல இருந்துகிட்டே இருந்தார். இன்னும் இருப்பார்.”

“அவதார்-2 பார்த்தியா விமல்?”
“எனக்கு டைமே இல்லக்கா. நீங்க பார்த்துட் டீங்களா?”
“பார்த்துட்டேன்... ஆனா அவதார்-1 அளவுக்கு இல்ல... ஜேம்ஸ் கேமரூன் எதிர் பார்த்த அளவுக்கு இதைப் பண்ணலைனு தோணுது.”
“ஓ... அமெரிக்கப் பூர்வகுடி மக்களும் இந்தப் படத்தை எதிர்க்கிறாங்க. ஹாலிவுட் சினிமாக்கள்ல அமெரிக்கப் பூர்வகுடி மக்களை மோசமா சித்தரிக்கிறாங்க. எங்களுக் காக நீங்க யோசிச்சதெல்லாம் போதும். எங்களை நாங்களே பார்த்துக்கறோம்னு சொல்றாங்க.”
“ஆமா வினு.... வரலாறோ சினிமாவோ அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறவங்களால தான் உருவாகுது. அவங்க நாட்டுக்குப் போய், சண்டை போட்டு, ஒழிச்சுக் கட்டி, தங்களோட குடியேற்றத்தை அமைச்சு, நாட்டையே சொந்தமாக்கிட்டு, இப்ப அவங்களுக்காக ஏதோ செய்யறதா படங்களை எடுக்கும்போது எனக்கே எரிச்சல் வருது. அவங்களுக்கு வராதா?”
“எங்கள மனுஷங்களா காட்டாம, ஏதோ ஏலியன்கள் போல காட்டறதெல்லாம் ரொம்ப கொடுமை. எங்க மேல நீலச்சாயம் பூசுறதை நிறுத்துங்கன்னு சொல்லிட்டாங்க.”
“குட்... சரி, ரொம்ப நேரம் பனியில உட்கார்ந்துட்டோம். ஒரு ரவுண்டு புக்ஸை பார்த்துட்டுக் கிளம்பலாம்” என்றாள் வினு.
மூவரும் எழுந்தனர். ஒரு செஃல்பி ஸ்டாண்டில் ஒவ்வொருவராகத் தலையை நுழைத்து செஃல்பி எடுத்தனர். அதிலிருந்த வாசகம்...
‘எங்கிட்ட வச்சுக்க வேணாம் வீணா
என்கிட்ட இருக்கு பேனா!’
- அரட்டை அடிப்போம்...
****

வினு தரும் வித்தியாசமான தகவல்
ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள்...
`அக்வேரியம்' எனும் மீன்வளக் காட்சியகத்தின் கண்டுபிடிப்பாளர் ஜீன் வில்பிரெக்ஸ்-பவர் (Jeanne Villepreux-Power) என்கிற பெண்தான். 1832-ல் செய்யப்பட்டது அக்வேரியத்தின் முதல் உருவாக்கம். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண், ஓர் இயற்கை ஆர்வலர். சில உயிரினங் களை நீண்டநேரம் கண்காணிக்கவும், கடல்வாழ் உயிரினங்களை ஆராய வும், அவர் ஒரு கண்ணாடிப் பெட்டியை உருவாக்கினார். அதிலிருந்தே உருவானது அக்வேரியம்!