சமூகம்
Published:Updated:

காஷ்மீர் இன்று எப்படி இருக்கிறது?

காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மீர்

சுற்றுலாத் துறையும் நீண்டகாலமாக முடங்கியுள்ளதால் காஷ்மீர் பொருளாதாரம் மீள்வதற்கு வெகுகாலம் தேவைப்படும் எனக் கணிக்கப்படுகிறது.

கொரோனா நெருக்கடியின் பிடியில் முடங்கிப் போயிருந்த உலக நாடுகள், மெல்ல மெல்ல அதிலிருந்து மீள ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியா தற்போது மூன்றாம்கட்ட நாடு தழுவிய ஊரடங்கில் இருந்துவருகிறது. நாளுக்குநாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், மே 17-ம் தேதிக்குப் பிறகு என்னவென்பதை எதிர்நோக்கி இந்திய மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கொரோனாவுக்கு முன்பிருந்தே ஊரடங்கால் முடங்கிப்போயிருந்த ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், தற்போதும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மத்திய அரசு. ஒன்றுபட்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங் களாகவும் பிரித்தது. அதை தொடர்ந்து, காஷ்மீரில் இணைய சேவை முடக்கப்பட்டு தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஜனவரி மாதத்துக்குப் பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட இருந்தன. ஆனால், கொரோனா நெருக்கடியால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் இன்று எப்படி இருக்கிறது?

2ஜி - 4ஜி இணைய சேவை

‘காஷ்மீரில் உள்ள இணைய முடக்கத்தை நீக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தர விட்டிருந்தது. அதை தொடர்ந்து இணையப் பயன்பாட்டுக்காக பிராட்பேண்ட் சேவைகள் அனுமதிக்கப்பட்டன. மொபைல் இணைய சேவை 2ஜி வேகத்தில் மட்டுமே அனுமதிக்கப் பட்டுவந்தது. இதை 4ஜி வேகத்துக்கு அதிகப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. இதில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், ‘4ஜி சேவை வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது. இணையத்தின் வேகம் குறைவாக உள்ளதால், முக்கிய சேவைகள், தொழில்களை அணுகுவதிலும், ஊரடங்கு முடக்கத்தால் இணையவழி வகுப்புகள் நடத்தப்படுவதிலும் சிரமங்கள் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரில் செயல்பட்டுவரும் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதக் குழுவின் தலைவர் ரியாஸ் நைகு, இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரின் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் கடந்த ஜனவரி மாதம் வரையில் மட்டும் 17,878 கோடி ரூபாய் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் காஷ்மீர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா நெருக்கடியால் காஷ்மீரில் நாள் ஒன்றுக்கு 270 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முன்பிருந்தே காஷ்மீர் பொருளாதாரம் பெரும் இழப்புகளைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது இணைய முடக்கமும் தொடர்வதால் அதைச் சார்ந்திருந்த தொழில்களும் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறையும் நீண்டகாலமாக முடங்கியுள்ளதால் காஷ்மீர் பொருளாதாரம் மீள்வதற்கு வெகுகாலம் தேவைப்படும் எனக் கணிக்கப்படுகிறது.

காஷ்மீர் இன்று எப்படி இருக்கிறது?

தலைவர்கள் விடுதலை... அரசியல் எதிர்காலம்?

2018-ம் ஆண்டிலிருந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜனாதிபதி ஆட்சியின்கீழ் இருந்துவருகிறது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட உடனே, பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முஃப்தி ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் அரசியலில் பெரும் வெற்றிடம் உருவாகிவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மெஹபூபா முஃப்தி போன்ற சில தலைவர்கள் தற்போது வரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற குரல்களும் எழுந்துள்ளன.

`ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து காக்கப்பட வேண்டும்’ என, கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் அனைத்து பிரதான கட்சிகளும் இணைந்து தீர்மானம் வெளியிட்டிருந்தன. அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலையும் அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்திருந்தன. இந்த நிலையில் உமர் அப்துல்லாவின் சமீபத்திய ட்வீட் ஒன்றில், `மாநில அந்தஸ்தைத் திருப்பித் தருவதோடு தேர்தலும் நடத்தப்பட வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். மேலும், காஷ்மீர் கட்சிகள் புறக்கணித்துவந்த உள்ளாட்சித் தேர்தலில், அடுத்த முறை கலந்துகொள்ளப் போவதாக ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி அறிவித்துள்ளது. இவை, காஷ்மீர் அரசியல் கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. சிறப்பு அந்தஸ்து கோரிக்கை யிலிருந்து தேசிய மாநாட்டுக் கட்சியும் அப்துல்லா குடும்பமும் பின்வாங்கிவிட்டார்களோ என்கிற யூகங்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன. தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்த முடிவு, மற்ற கட்சிகளையும் தேர்தல் புறக்கணிப்பிலிருந்து பின்வாங்க நிர்பந்திக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் போராட்டம் கொரோனாவுக்குப் பிறகும் தொடரும் என்றே தெரிகிறது!