35 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை... - மாறிப்போன உலகம்... மறுவாழ்வுக்கு ஏங்கும் வீரப்பன் நண்பர்கள்!

‘தமிழக - கர்நாடக எல்லையிலுள்ள செங்கப்பாடி கிராமம்தான் எனக்குச் சொந்த ஊர். வீரப்பனுக்கும், பெருமாளுக்கும்கூட அதுதான் சொந்த ஊர்.
வனச்சரகர் கொலை வழக்கில் 35 ஆண்டுக்காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, அண்மையில் விடுதலையான வீரப்பனின் நண்பர்கள், முற்றிலும் மாறிப்போன உலகில் வாழ்வாதாரமின்றி தவிக்கிறார்கள்!
தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தனக் கடத்தல் வீரப்பன் 2004-ல் தமிழக சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்டார். முன்னதாக 1987-ம் ஆண்டு வனச்சரகர் சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேரை வீரப்பன் கும்பல் சுட்டுக் கொன்றது. இந்த வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையன், நண்பர்கள் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் குன்றி உயிரிழந்தார்.
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த ஆண்டியப்பன், பெருமாள் இருவரும் சமீபத்தில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்களின் நீண்ட நெடும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகே நன்னடத்தை விதிகளின்கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
இளமைக்காலம் முழுவதையும் சிறைக்கம்பிகளுக்குள் தொலைத்துவிட்ட இருவரும் தற்போது வயது முதிர்ந்து, பேசுவதற்குக்கூடத் தெம்பில்லாத நிலையில் விடுதலையாகி யிருக்கிறார்கள். சேலம் மாவட்டம், கத்திரிப்பட்டி அருகேயுள்ள தாண்டவக்கொட்டாய் கிராமத்தில் வசித்துவரும் ஆண்டியப்பனிடம் பேசினோம்.
‘‘தமிழக - கர்நாடக எல்லையிலுள்ள செங்கப்பாடி கிராமம்தான் எனக்குச் சொந்த ஊர். வீரப்பனுக்கும், பெருமாளுக்கும்கூட அதுதான் சொந்த ஊர். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பால்ய காலத்திலிருந்தே வீரப்பனுடன் நல்ல நட்பில் இருந்தோம். பின்னர் சந்தனமரக் கடத்தல் வழக்கில், வனத்துறையும் காவல்துறையும் வீரப்பனைத் தேடியபோது எங்களது குடும்பத்தினரையும் டார்ச்சர் செய்ததால், நாங்கள் இருவருமே வனத்துறையினரைத் தேடிச் சென்று சரணடைந்தோம். இதையடுத்து 1987-ல் நான், பெருமாள், வீரப்பனின் அண்ணன் மாதையன் மூன்று பேரையும் கர்நாடக போலீஸார் கைதுசெய்து மைசூர் சிறையில் அடைத்தனர்.
ஐந்து ஆண்டுகள் மைசூர் சிறையில் தண்டனை முடிந்து வெளியே வருவதற்கு முந்தைய நாளில், மைசூர் சிறைக்கு வந்த தமிழக போலீஸார் எங்கள் மூவரையும் வனத்துறை அதிகாரி சிதம்பரம் கொல்லப்பட்ட வழக்கில் கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்தபோது, நன்னடத்தை, அரசு விடுமுறை தினங்களைக் கழித்திருந்தால் நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலையாகியிருப்போம்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டோம். சிறைச்சாலை எங்களது உழைக்கும் திறன் அனைத்தையும் உறிஞ்சிக் கொண்டு, சக்கையாகத்தான் வெளியே தள்ளியிருக்கிறது. இனி எங்களது பிழைப்புக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு இப்போது 70 வயதாகிறது. என் மனைவி காலமாகிவிட்டார். என் தம்பி பரமசிவன்தான் என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியதோடு, என் மகளுக்குத் திருமணமும் செய்துவைத்தான்.
என் மகன் 19 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டான். என்னுடைய காலமும் கரைந்து போய்விட்டது. இருந்தாலும் இனி பிழைப்புக்கு வழி தேட வேண்டும். எனது விடுதலைக்காகத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தோழர்கள், பிழைப்புக்கு ஏதாவது உதவி செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்’’ என்றார்.

ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூர் கிராமத்தில் வசித்துவரும் பெருமாள் நம்மிடம் பேசியபோது, ‘‘19 வயதில் என்னைக் கைதுசெய்தனர். சிறையில் இருக்கும்போதே என்னுடைய அம்மாவும், இளைய அண்ணனும் இறந்துவிட்டார்கள். அவர்களது இறப்புக்குக்கூடப் போக முடியவில்லை. 35 ஆண்டுகளைச் சிறைக்குள்ளேயே கழித்துவிட்டு, இப்போது வெளியே வந்து பார்க்கும்போது உலகமே வேறு மாதிரியாக இருக்கிறது. கலர் டி.வி., செல்போன், ஏ.டி.எம்., பே.டி.எம் என்று என்னென்னவோ வந்துவிட்டன. இப்போது எனக்கு 54 வயது. திருமணம் செய்துகொள்ளுமாறு என் பெரிய அண்ணன் சொல்கிறார். அப்படிப் பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை வாழவேண்டியதுதான்’’ என்கிறார் கண்கள் பனிக்க.
மனித உரிமை ஆர்வலரும், மூத்த வழக்கறிஞருமான ப.பா.மோகன் இருவரின் விடுதலை குறித்துப் பேசும்போது, ‘‘ஒருவர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தாலே அவர்களை 433-ஏ சட்டப்பிரிவின்படி விடுதலை செய்ய முடியும். ஆனால், அரசு இந்தச் சட்டப்பிரிவை, ‘அரசியல் காரணங்களுக்காக கொடுஞ்செயல் செய்து’ சிறைக்குச் சென்றவர்களை மட்டுமே விடுவிக்கப் பயன்படுத்துகிறது. உதாரணமாக, லீலாவதி கொலை வழக்கில் கைதான நபர்கள் ஏழு ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவித்தார்கள். தருமபுரியில் பஸ்ஸில் மூன்று மாணவிகளை எரித்துக் கொன்று கொடுஞ்செயல் செய்தவர்கள்கூட வெளியே வந்துவிட்டார்கள். ஆட்சியாளர்கள் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினர், உழைக்கும் மக்கள் போன்றவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்கத் தயக்கம் காட்டுகின்றனர். சிறைவாசிகளுக்கும் மனித உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தண்டனை அனுபவித்தவர்களும் சமூகத்தில் திருந்தி வாழ சந்தர்ப்பம் வழங்க வேண்டும்’’ என்றார்.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் செயலாளர் அன்புராஜ் கூறுகையில், ‘‘பெருமாளும் ஆண்டியப்பனும் உழைக்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்த இவர்களின் வாழ்க்கை, தண்ணீரிலிருந்து வெளியே தூக்கிப்போட்ட மீனைப்போலத்தான் இருக்கிறது. வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்களுக்கு, எங்கள் தோழர்களின் உதவியுடன் ஆடுகள் வாங்கிக்கொடுக்க முடிவுசெய்திருக்கிறோம்’’ என்றார் தீர்க்கமாக.
காலம்தான் மனிதர்களை வைத்து எப்படியெல்லாம் விளையாடுகிறது..!