சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

இதான் டிரெண்டிங்கா? ஆமாங்கய்யா!

டிரெண்டிங்
பிரீமியம் ஸ்டோரி
News
டிரெண்டிங்

செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டபோது குடையைக் கையில் பிடித்தபடி வந்தார் எடப்பாடியார்.

டிரெண்டிங்கை வைத்து மீட்டர் போடுவது எப்படி? - வேற ஒண்ணுமில்லைங்க. `என்ன வேணா நடக்கட்டும். நான் சந்தோஷமா இருப்பேன்!' என நாட்டில் நடக்கும் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கி ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடுவதுதான் இப்போ டிரெண்ட். இதோ சமீபத்திய நம் சமூகங்களின் பங்களிப்பு...

`எசப்பாட்டு' எடப்பாடி

செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டபோது குடையைக் கையில் பிடித்தபடி வந்தார் எடப்பாடியார். `பார்த்தீங்களா தலைவனை... தன் கையில் தானே குடைபிடித்தபடி வரும் அழகை... Advantage EPS now' என இணையத்தில் கூவினார் ஒருவர். நான்கு ஆண்டுகளாக வடிகால் திட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு தாம்பரமே தாவாந்து கிடக்கும்போது கேஷுவலாகக் குடைபிடித்தபடி வந்ததற்கே `குடைபிடிச்சிட்டுப் போற பெரியவரே வணக்கமுங்கோ!' எனச் சொல்வதைப் பார்த்தால், ‘இதெல்லாம் ரொம்பத் தவறுங்க!'

இதான் டிரெண்டிங்கா? ஆமாங்கய்யா!

‘ஸ்டெமினா’ ஸ்டாலின்

`நாலுபக்க அறிக்கை விடுறோமோ இல்லையோ, ப்ளோரசன்ட் ஹெட் கியர்களோட நாலு சைக்கிளிங் போட்டோக்களைத் தாறுமாறா இறக்கிவிடுறோம்.' - இதுதான் ‘பி.கே அண்ட் கோ' போட்டுக் கொடுத்த ‘நான் இன்னும் யூத்துதான்' மீட்டர் ஸ்ட்ராடஜி! ‘தினமும் பாண்டிச்சேரி போற நடிகர் ஆர்யாவே இத்தனை போட்டோ போட்டது இல்லை!', ‘முட்டுக்காடு வரைக்கும் ஓட்டிட்டுப்போனா முட்டி தேய்ஞ்சிராது' என்றெல்லாம் நெட்டிசன்ஸ் ஆராய்ச்சி செஞ்சாலும் ‘வாவ் வாட்டே மேன்!' சொல்லாமல் இருக்க முடியவில்லை!

‘ஆக... அ.தி.மு.க அரசைப் பார்த்துக் கேட்கிறேன். கொளத்தூரிலே குளம் இருக்கிறது. சூளைமேட்டிலே சூளை இருக்கிறதா..?' என்று புலன்விசாரணை விஜயகாந்த் போல ரெயின்கோட்டோடு களத்தில் இறங்கிப் பின்னுகிறார். #களத்தில் ஸ்டாலின் #வெள்ளக்களத்தில்_தி.மு.க என டிரெண்டிங் அடிக்கிறது இணைய உ.பி களம்.

‘சீற்றமிகு’ சீமான்

அந்த மரபுக்கு உட்பட்ட ‘புகுஹா’ சிரிப்பும் டிரெண்டிங்கோடு பயணிப்பதுமே நாம் தமிழர் தம்பிமார்களின் பலமும் பலவீனமும்! நாட்டில் என்ன நடந்தாலும், ‘சீமான் அண்ணன் இதை எப்போதோ சொல்லிவிட்டார்' என நம்பவைக்க மெனக்கெடுகிறது ஒரு கூட்டம். `எடப்பாடியார் ஆட்சியில் வெள்ளம் வரும் எனச் சொல்ல சீமானாய் இருக்க வேண்டியதில்லை. மனிதனாய் இருந்தாலே போதும்!' எனச் சொல்லிக்கொடுக்கத்தான் ஆளில்லை.

மரடோனா மரித்தபோதும், மரடோனா பற்றி முன்பு பேசிய வீடியோவை எடிட் செய்து இணையத்தில் உலவவிடுவதுவரை எப்போதும் வைப்ரேட் மோடிலேதான் இருக்கிறார்கள்.

ஆனால், ‘எப்பேர்ப்பட்ட மனிதரை செஃப் தாமு கணக்காய் சீமான் மாற்றிவிட்டாரே’ என தம்பிமார்களே கிசுகிசுப்பதும், ‘ஒரு தடவை கதை சொன்னா பரவாயில்லை... ஒவ்வொரு தடவையுமா’ எனக் கேட்பதெல்லாம் அவருக்குக் கேட்குதா... கேட்குதா?

‘கொலைவெறி’ கவிஞர்கள்

`புயல் வரும்போது பூச்செண்டு கொடுப்பாய்...புரியாத புதிர் நீ பாபா!' என்று எழுதியவர் அல்லவா கவிப்பேரரசு. கொரோனாவோ, புயலோ, கவிதையாலேயே திரும்பிப் போகச் சொல்லித் திணறவைப்பதும் கவிதையாரின் டிரெண்ட் தான்.

`போ புயலே போய்விடு... சுகமாய்க் கடந்துவிடு... சுவாசமாகி விடு!' என்றெல்லாம் புயலோடு பேச்சுவார்த்தை நடத்திக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். தாவாங்கட்டையில் பேனாவை வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கும் கவிஞர்களைக் கால் நூற்றாண்டுக்கு முன்பே கடைசி ரயிலில் ஏற்றிவிட்ட பிறகும் வான்டடாக இறங்கியிருக்கிறார் நம் செல்லக் கவிஞர்.

இதென்ன பிரமாதம் எனக் களத்தில் குதித்து நிவர் கவிதைகளைக் கிறுக்கித் தள்ளினார்கள் ஏனைய நெட்டிசன்ஸ். சாம்பிளுக்கு ஒண்ணு...

‘எங்கள் வீட்டில் இல்லை பவர்,

எங்களுக்கு சரியாகக் கிடைக்கவில்லை டவர்,

உன் வேகத்தால் விழும் பழைய சுவர்,

உன்னால் சாலையில் ஓடுகிறது ரிவர்,

எங்களைக் காப்பது இனி எவர்,

நீ விரைந்து இங்க இருந்து நகர்..!' எனப் புயலோடே சரசமாடினார்கள். அப்புறம் ஏன் புயலுக்குக் கோபம் வராது?

மோடி ‘மஸ்தான்’

டிரெண்டிங் ஸ்டார் மோடிஜியைப் பற்றிச் சொல்லாமல் விட்டால் எப்படி? கேமராவைப் பார்த்தாலே கையைத் தூக்குவது, நின்றால் போட்டோ, நடந்தால் போட்டோ எல்லாம் சரிதான். ஆனால், ஆளே இல்லாத காஷ்மீர் சுரங்கப் பாதையில் கைகளை ஆட்டியபடி ஜீப்பில் போன நம்ம பிரதமர் மோடி ‘தமிழ்நாட்டுக்கு என்னதான் நான் செய்யணும்? இன்னும் என்ன வேணும்னாலும் கேளுங்க பிரதர்... எல்லாம் கிருப கிருப!' என எடப்பாடிக்கே போன்போட்டுப் பேசி அதை ட்வீட் பண்ணி டிரெண்டிங் அள்ளினார். ‘கொண்டக்கடலையே இன்னும் வந்து சேரல, இதுல பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை’ என நினைத்தாலும் சொல்லவாச்சும் செய்கிறாரே என திருப்தி அடைய வேண்டியதுதான்!

ஃபிட்னெஸ் சேலஞ்ச், மயில் செல்ஃபி, வாக்கிங் போட்டோ ஷூட் என நாளுக்குநாள் டிரெண்டிங்கில் மெருகேறிக்கொண்டே இருக்கிற மோடியை நிவர் புயலே ஏமாற்றிவிட்டது. இல்லையென்றால் ஹெலிகாப்டரில் ஜன்னலோரம் உற்றுப்பார்த்தபடி ஒரு செல்ஃபியைத் தட்டியிருப்பார்.