வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல் அதி தீவிரப் புயலாக நாளை மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 முதல் 145 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மறு உத்தரவு வரும்வரை அரசுப் பேருந்து சேவை இன்று மதியம் 1 மணி முதல் நிறுத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட ஏழு மாவட்டங்களிலும் ஆம்னி பேருந்து சேவைகளும் முழுமையாக ரத்துசெய்யப்படுவதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக ஆறு விரைவு ரயில்களை ரத்துசெய்வதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்திருந்தது.
அதேநேரம், சென்னை எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களை ரத்துசெய்ய, தெற்கு ரயில்வே ஆலோசித்துவருவதாகத் தகவல் வெளியானது. இந்தநிலையில், சென்னை எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 விரைவு ரயில்கள் இரு மார்க்கமாக நாளை (நவம்பர் 25) ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுமையான கட்டணமும் திரும்ப அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவம்பர் 25) ஒரு நாள் தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நாளை அரசு விடுமுறைவிடப்படுகிறது. புயல் பாதிப்புகளைச் சமாளிக்க அரசு அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது’’ என்றார்.