அதிகரிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை!... தமிழ்நாடு முதலிடம்... ஷாக் ரிப்போர்ட்!

வடமாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உயர்வான கூலி வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
`தினக்கூலித் தொழிலாளர் தற்கொலைப் பட்டியலில், தமிழ்நாட்டுக்கு முதலிடம்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகம். கடந்த ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவைக் கூட்டத்தொடரில் இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் திக் விஜய் சிங், நீரஜ் டாங்கி ஆகியோர் கேள்வியெழுப்பினர். இதைத் தொடர்ந்து மாநிலவாரியாக தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 7,673 தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்திருப்பதும், தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துவருவதும் தெரியவந்திருக்கிறது.

மேலும் அந்த விவரக்குறிப்பில், ‘அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டம்-2008-ன் படி, விவசாயம், கட்டுமானம், வீட்டு வேலை மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலன், கல்வி, சுகாதாரம், விடுப்பு, ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றுக்கான நலத்திட்டங்களைக் கொண்டுவருவதே இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம். இவை சரியாக கண்காணிக்கப்படாததன் விளைவாகவே, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தினக்கூலித் தொழிலாளர்களின் தற்கொலை நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில், நாடு முழுவதும் 42,004 தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறது’ என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலும் இடம்பெற்றிருக்கிறது.


இது குறித்து இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கண்ணன் பேசும்போது, “வடமாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உயர்வான கூலி வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், கேரளா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஊதியம் குறைவானது என்பதையும் மறுக்க முடியாது. கடந்த ஐந்தாண்டுகளின் விலைவாசி உயர்வைக் கணக்கிட்டால், அதற்கு நிகராகக் கூலியோ, ஊதிய உயர்வோ இங்கு ஏற்படவில்லை. ‘அனைத்து தினக்கூலித் தொழிலாளருக்கும் சராசரியாக மாதம் ரூ.21,000 வருமானம் கிடைக்க வேண்டும்’ என அனைத்திந்திய தொழிற் சங்கம் கூறுகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தினக்கூலித் தொழிலாளர்களின் மாத வருமானத்தை ரூ.18,000-ஆக உயர்த்த வேண்டுமென அரசிடம் வைத்த கோரிக்கையே இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்.குமாரிடம் விளக்கம் கேட்டோம். அவர், “மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, தினக்கூலித் தொழி லாளர்களின் தற்கொலை தமிழ்நாட்டில் அதிகரித்துவருவது அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பழக்கம், கொரோனா பொதுமுடக்கம், ஆன்லைன் சூதாட்டம், கடன் தொல்லை போன்ற காரணங்களால் தொழிலாளர்களின் தற்கொலை மரணங்கள் அதிகரித்திருக்கின்றன. இதன் காரணமாகவே, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய, தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். தொழிலாளர்கள் தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை முறையாக மாவட்ட அளவில் பதிவாகிறது. தற்போது வெளியாகியிருக்கும் இந்தத் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு மாவட்டம்தோறும் கள ஆய்வுகளை நடத்தி, உண்மைநிலையைக் கண்டறிந்து அதை அரசுக்குத் தெரியப்படுத்துவோம்” என்றார்.