Published:Updated:

தினந்தோறும் 50 பேருக்கு உணவு, புற்றுநோயாளிகளுக்கு உதவி; எளியவர்களின் நாயகி டெய்சி ராணி! #SheInspires

புதுக்கோட்டை பெண்ணின் நேசக்கரம்
News
புதுக்கோட்டை பெண்ணின் நேசக்கரம்

50-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் மதிய சாப்பாடு கொடுத்து அவர்களை நெகிழ வைக்கிறார், புதுக்கோட்டையைச் சேர்ந்த டெய்சி ராணி.

Published:Updated:

தினந்தோறும் 50 பேருக்கு உணவு, புற்றுநோயாளிகளுக்கு உதவி; எளியவர்களின் நாயகி டெய்சி ராணி! #SheInspires

50-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் மதிய சாப்பாடு கொடுத்து அவர்களை நெகிழ வைக்கிறார், புதுக்கோட்டையைச் சேர்ந்த டெய்சி ராணி.

புதுக்கோட்டை பெண்ணின் நேசக்கரம்
News
புதுக்கோட்டை பெண்ணின் நேசக்கரம்

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. குறிப்பாக, கூலித் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையே, சாலையோரங்களில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் பலரும் ஒரு வேளை சாப்பாடு கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அப்படித் தவிப்பவர்களுக்கும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கும் என 50-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் மதிய சாப்பாடு கொடுத்து அவர்களை நெகிழ வைக்கிறார், புதுக்கோட்டையைச் சேர்ந்த டெய்சி ராணி.

`ஜோமன் ஃபவுண்டேஷன்' என்ற தன் அமைப்பு மூலம் புற்றுநோயாளிகளுக்குத் தொடர்ந்து உதவி செய்து வரும் டெய்சி ராணி, ஊரடங்கு நேரத்தில் இப்படி சாப்பாடின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

தினந்தோறும் 50 பேருக்கு உணவு, புற்றுநோயாளிகளுக்கு உதவி; எளியவர்களின் நாயகி டெய்சி ராணி! #SheInspires

அதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவுப் பொருள்கள், மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொடுப்பது எனத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வேலைபார்த்த ஆசிரியை மாரடைப்பால் திடீரென இறந்தார். அவர் மகளுக்கு 9 வயது. ஏற்கெனவே அந்தச் சிறுமியின் அப்பாவும் உயிரிழந்துவிட்டார். நிர்க்கதியாக நின்ற அந்தச் சிறுமியின் படிப்புச் செலவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அந்தக் குடும்பத்தையும் நெகிழ வைத்திருக்கிறார் டெய்சி ராணி.

டெய்சி ராணியிடம் பேசினோம்.

``அஞ்சு வருஷத்துக்கு முன்னால என்னோட ஃப்ரெண்டோட தம்பிக்கு கேன்சர் வந்திருச்சு. சின்ன வயசுதான். தனியார் மருத்துவமனையில வச்சு முடிஞ்சளவு வைத்தியம் பார்த்தாங்க. ஆனாலும், குணப்படுத்த முடியலை. ஒரு கட்டத்துல அவரைக் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வீட்டுக்குக் கூட்டி வர ஆம்புலன்ஸுக்குக்கூட பணம் இல்ல. அப்போ என்னால முடிஞ்ச உதவியை செஞ்சேன். சில தினங்கள்லேயே அவர் இறந்து போயிட்டார். சின்ன வயசுலேயே அவரோட மனைவியும் பிள்ளைகளும் நிர்கதியாகிட்டாங்க. உடனே இன்னொரு நண்பர் மூலமா அவங்களுக்குப் பண உதவி செஞ்சேன். அதோட ஒரு டிரஸ்ட்கிட்ட பேசி, அந்தப் பிள்ளைகளோட படிப்புச் செலவு முழுவதையும் ஏத்துக்க வச்சேன்.

டெய்சி ராணி
டெய்சி ராணி

அந்த நிகழ்வுக்கு அப்புறம்தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஆரம்பிச்சேன். அதே நேரத்துல நிறைய நண்பர்கள் தானா உதவ முன்வந்தாங்க. இந்த உதவுகளை வெளிப்படைத் தன்மையோட பண்ணலாம்னு அப்பா, அம்மா பெயரைச் சுருக்கி `ஜோமன் ஃபவுண்டேஷன்' என்ற பெயர்ல 2016-ல ஒரு அமைப்பை ஆரம்பிச்சேன். இப்போ அஞ்சு வருஷமா, புற்றுநோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு மருந்து மற்றும் மருத்துவ உதவி, அவங்க குடும்பங்களுக்குத் தேவையான உணவு, பிள்ளைகளுக்குக் கல்வி உதவினு தொடர்ச்சியா உதவிக்கிட்டு வர்றேன். என் அப்பா, அம்மா, கணவர்னு மூணு பேருமே எனக்கு ரொம்ப சப்போர்ட். அதனாலதான் என்னால இப்படி சுதந்திரமா இயங்க முடியுது.

டிரஸ்ட் அப்படீன்னா அமெரிக்க நிதி, ஆப்பிரிக்கா நிதின்னு எல்லாம் வரும்னு சிலர் சொல்வாங்க. நமக்கு அப்படியெல்லாம் இல்ல. எனக்கு நெருக்கமான அஞ்சு பேராலதான், `ஜோமன்' தொடர்ச்சியா இயங்கிட்டு இருக்கு. என்னோட அக்கவுன்ட்டுக்குப் பணம் போட்டுட்டா, கஷ்டப்படுறவங்ககிட்ட உடனே சரியாகப் போய் சேர்ந்திடும்னு நம்பித்தான் அனுப்புறாங்க. அதை இதுவரையிலும் சரியா செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

இது ஒருபுறம் இருக்க, லாக்டௌன்ல பொதுமக்கள் ரொம்பவே கஷ்டப்படுறதைப் பார்த்தப்போ மனசு சோர்ந்துபோச்சு. போன வருஷம் லாக்டௌன் அப்போ 21 நாள் தொடர்ச்சியா ஆதரவற்றவங்களுக்குச் சாப்பாடு கொடுத்தேன். இந்த வருஷமும் லாக்டௌன் ஆரம்பிச்சப்போ, ராணியார் மருத்துவமனையில நோயாளிகளின் உறவினர்கள் சாப்பாடு இல்லாம தவிப்பதாகத் தகவல் கேள்விப்பட்டு, அவங்களுக்கு தொடர்ச்சியா 15 நாள் வரைக்கும் சாப்பாடு கொடுத்தேன்.

டெய்சி ராணி
டெய்சி ராணி

அதுக்கப்புறம், அவங்களுக்கு இன்னும் சிலர் மூலமா சாப்பாடு கிடைக்க வர, நான் நிறுத்திட்டேன். பின்னர்தான், கொரோனாவால பாதிக்கப்பட்டு வீட்ல தனிமைப்படுத்தப்பட்டவங்க, அவங்களோட குடும்பத்தினர் வெளியே வர முடியாம சிரமப்படுவதாகக் கேள்விப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, அரிசி, காய்கறிகள், மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொடுத்துக்கிட்டு வர்றேன்.

இதுக்கிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் பணியும் தொடருது. கொரோனா பேரிடர் காலத்துல தொடர்ந்து என்னால முடிந்ததைச் செய்யணும். அதேபோல, இயன்றவர்கள் இல்லாதவர்களுக்கு உதவணும்" என்கிறார் டெய்சி ராணி.