அலசல்
Published:Updated:

“பட்டியல் சமூகத்துல பொறந்தா கார் வெச்சுக்கக் கூடாதா!” ?

சதீஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சதீஷ்

- இளைஞரை நிர்வாணப்படுத்தித் தாக்கினாரா அ.ம.மு.க பிரமுகர்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிலர், நடுரோட்டில் நிர்வாணமாக்கித் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. சதீஷ் சொந்த கார் வைத்திருந்ததையும், தங்களை எதிர்த்துப் பேசியதையும் பொறுத்துக்கொள்ள முடியாமலேயே, இந்தக் கொடுஞ்செயலை அவர்கள் செய்ததாகச் சொல்கிறார்கள். இந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதை அடுத்து, ‘‘ஒரத்தநாடு அ.ம.மு.க தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆசைத்தம்பியும் இந்தக் தாக்குதலுக்கு முக்கியக் காரணம். அவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்’’ என்று பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தஞ்சாவூர் மதுக்கூர் அருகேயுள்ள கருப்பூரைச் சேர்ந்தவர் சதீஷ். கடந்த பத்தாண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தவர், ஐந்து மாதங்களுக்கு முன்புதான் அவரது திருமணத்துக்காகச் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார். திருமணம் முடிந்து மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சதீஷைச் சந்தித்துப் பேசினோம்...

ஆசைதம்பி
ஆசைதம்பி

“கல்யாணத்துக்குப் பிறகு திரும்பவும் வெளிநாடு போறதுக்காக, ஏஜென்ட் ஒருத்தரைப் பார்க்குறதுக்கு தொண்டராம்பட்டு கிராமத்துக்கு என்னோட காருல போனேன். ஏஜென்ட் என்னைக் கடைத்தெருவுல காத்திருக்கச் சொன்னாரு. அப்போ அந்தப் பக்கமா வந்த என்னோட அண்ணன் ராஜேஷ், என்னைப் பார்த்துட்டு என் காருக்குப் பின்னாலேயே டூ வீலரை நிறுத்திட்டு வந்தார். ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருந்தோம். ஏஜென்ட் வர்றதுக்கு லேட் ஆனதால கிளம்பினோம். நான் காரை ரிவர்ஸ் எடுத்தப்ப, பின்னாடி நின்ன என் அண்ணனோட டூ வீலர் மேல மோதினதுல கீழே விழுந்துடுச்சு. அந்த இடத்துல குடிபோதையில நின்ன மூணு பேரு, ‘ஏன் டூ வீலர்ல இடிச்ச?’னு கேட்டாங்க. ‘தெரியாம இடிச்சுட்டேன். அதுவும் எங்க வண்டிதான்... பிரச்னை ஒண்ணும் இல்லை’னு சொன்னதுக்கு, ‘வேற யார் வண்டியாச்சும் நின்னுருந்தா?’னு கேட்டாங்க. ‘தெரிஞ்சே இடிப்பாங்களா? எங்க வண்டி... நாங்க பேசிக்குறோம்’னு சொன்னதுக்கு, ‘என்னடா எதிர்த்து பேசுற... எந்த ஊர்டா நீ?’னு ஒருமையில் பேச ஆரம்பிச்சாங்க. ‘கருப்பூர், கீழத்தெரு’னு சொன்னதும், ‘ஓ... அப்ப நீ அந்தச் சாதிப் பயலா... கார்ல வர்ற அளவுக்கு வளர்ந்துட்டியா?’னு தகாத வார்த்தைகள்ல பேசிக்கிட்டே அடிக்க ஆரம்பிச்சாங்க.

அப்போ அங்க வந்த அ.ம.மு.க ஒரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆசைத்தம்பி, அவங்ககிட்ட என்னன்னு கேட்டார். என் சாதியைச் சொல்லி, ‘நம்மளை எதிர்த்துப் பேசுறான்’னு சொன்னாங்க. உடனே கார் சாவியைப் பிடுங்கிய ஆசைத்தம்பிகிட்ட, ‘நான் எந்த வம்பும் செய்யலை... என்னை அடிக்குறதுக்கு என்ன உரிமை இருக்கு?’னு கேட்டேன். ‘ஒன்றியத்தையே எதிர்த்து பேசுறியா?’னு ஆசைத்தம்பியும் மத்தவங்களும் என் வேட்டி, சட்டையைக் கிழிச்சு எறிஞ்சாங்க.

“பட்டியல் சமூகத்துல பொறந்தா கார் வெச்சுக்கக் கூடாதா!” ?

அதுக்குள்ள என்னோட மச்சான் பிரவீன், சொந்தக்காரர் வீரராகவன் வந்துட்டாங்க. நிர்வாணமா கிடந்த எனக்கு ஓடியாந்து வேட்டியை எடுத்துக் கொடுத்த வீரராகவனையும் காதுல அடிச்சாங்க. ‘ஏன் மாட்டை அடிக்குற மாதிரி அடிக்கிறீங்க?’னு என் மச்சான் கேட்டதுக்கு, ‘உங்களுக்கெல்லாம் கார் ஒரு கேடா’னு கேட்டாங்க. விஷயம் தெரிஞ்சு ஓடிவந்த என் அப்பா, ‘எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். நான் எல்லார் கால்லேயும் விழுறேன்’னு கதறினார். எந்தத் தப்புமே செய்யாத என்னை அம்மணமாக்கி அடிச்சதுக்கு, அவங்க பதில் சொல்லியே ஆகணும். அதுக்காகத்தான் அவங்க மேல பிசிஆர் கேஸ் கொடுத்தேன். மூணு பேர் மேல மட்டும் கேஸ் போட்ட போலீஸ்காரங்க, ஆசைத்தம்பி உள்ளிட்டவங்களை விட்டுட்டாங்க. ஏன் சார்... பட்டியல் சமூகத்துல பொறந்தா கார் வெச்சுக்கக் கூடாதா?’’ என்றார் கண்ணீரோடு.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் சிவகுரு நம்மிடம், ‘‘பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சதீஷ், சொந்தமாக கார் வைத்திருந்ததையும், தங்களை எதிர்த்து பேசியதையும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். பிரச்னைக்கு முக்கியக் காரணமான ஆசைத்தம்பி மீது வழக்கு பதிவு செய்யவில்லை. போலீஸாரும் சாதி பாரபட்சத்துடன்தான் நடந்துகொள்கிறார்கள்’’ என்றார் ஆதங்கத்துடன்.

குற்றம்சாட்டப்படும் ஆசைத்தம்பியிடம் பேசினோம். ‘‘கார் ஓட்ட முடியாத அளவுக்கு சதீஷ் குடிச்சிருந்தார். அவருக்கு உதவி செய்யுற நோக்கத்துல, அவங்க வீட்ல யாரையாவது வரவெச்சு அனுப்பறதுக்கு அவரை உட்காரவெச்சிருந்தோம். அவர்தான் எல்லாரையும் கெட்ட வார்த்தையில திட்டினார். அதனால, சிலர் அவரை அடிச்சாங்க. சாதிப் பெயரைச் சொல்லி ஆதிக்கச் சாதியினர் அடிச்சதா சொல்றது தப்பு. சிலர் அவரைத் தூண்டிவிட்டு பிசிஆர் கேஸ் கொடுக்கவெச்சுருக்காங்க’’ என்றார்.

பிரவீன், வீரராகவன், சிவகுரு
பிரவீன், வீரராகவன், சிவகுரு

ஒரத்தநாடு டி.எஸ்.பி சுனிலிடம் பேசினோம்... ‘‘சதீஷுக்கும் அவர் அண்ணனுக்கும் சண்டை நடந்திருக்குது. அதை அங்கே இருந்தவங்க விலக்கிவிட்டிருக்காங்க. அப்போ சதீஷ் முதல்ல அடிக்க கை ஓங்கியதால, அவரைச் சிலர் அடிச்சிருக்காங்க. உடம்புல பெரிய காயம் இல்லாத நிலையில ஆஸ்பத்திரியில சேர்ந்த சதீஷ், பிசிஆர் கேஸ் கொடுத்துருக்கார். அதன்பேரில் மூணு பேர் மேல வழக்கு பதியப்பட்டிருக்கு. தலைமறைவா இருக்கும் அவங்களைத் தேடிக்கிட்டு இருக்கோம். இந்தப் பிரச்னையை சில அமைப்புகள் சாதியை மையமாவெச்சு பெருசாக்குறாங்க. விசாரணை முடிந்த பிறகே முழு உண்மைகள் தெரியவரும்’’ என்றார்.

உண்மையிலேயே சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் தகராறா என்பதை போலீஸார்தான் நேர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இந்த விவகாரத்தை முன்வைத்து ஊருக்குள் மேலும் பிரச்னைகள் எழாதபடி பார்த்துக்கொள்ளவேண்டியதும் போலீஸாரின் கடமை!