
சமீபத்தில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அஜித்தின் `வரலாறு' படத்தில் அவருடைய பரதநாட்டிய கேரக்டருக்கு நளினம் கற்றுக் கொடுத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர். நடிகர் திலகம் நடித்த `பாட்டும் பரதமும்' படத்தில் உதவி நடன இயக்குநராக கரியரைத் தொடங்கியவர் `கவிக்குயில்' படத்தின் மூலம் கொரியோகிராபராகக் கலக்க ஆரம்பித்து `பாகுபதி' வரை அசத்தியிருக்கிறார். `கண்ணா லட்டு தின்ன ஆசையா', `தானா சேர்ந்த கூட்டம்' உட்பட பல படங்களின் மூலம் நடிகராகவும் ஸ்கோர் செய்தவர். சமீபத்தில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருடன் பழகிய நினைவுகள் குறித்து இங்கே நெகிழ்கிறார் `கண்ணா லட்டு தின்ன ஆசையா' இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன்.
``எங்க படத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே அவர் சில படங்கள்ல நடிச்சிருக்கார்னாலும், `கண்ணா லட்டு தின்ன ஆசையா'ல தான் அவருக்கு சரியான ரோல் அமைஞ்சது. அவரை நடிக்கக் கேட்டுப் போனபோது, `ராமநாராயணன் சார் படமா?’னு கேட்டார். ஏன்னா, அவங்க படம்னா ஒரே நாள்ல ஒரு பாடலை கம்ளீட்டா ஷூட் முடிச்சு அனுப்பிடுவாங்களாம். ஸோ, இங்கேயும் ஒருநாள் ஒர்க்தான் இருக்கும்னு நினைச்சார். ஆனால், நீங்க நடிக்கப்போறீங்கன்னு சொன்னதும் சந்தோஷமாகிட்டார்.

செட்ல முதல்நாள் அவரைப் பார்த்ததும், ஜெர்க் ஆச்சு. ஏன்னா, அவர் டான்ஸ் மாஸ்டர்னால அவர் ஸ்பாட்டுக்குள்ள நுழையும் போதே அவருக்குன்னு தனியா ஒருத்தர் குடை பிடிக்க, ஜம்முனு வந்தார். வந்ததும் என்னைப் பார்த்து `ஏய்ய்ய்ய் என்ன்னடா...'ன்னு ஒரு கொஞ்சலும் குழைவுமா அவர் அன்போடு கூப்பிடும் அழகே தனியா இருக்கும். பழகப் பழக அவருக்கு நகைச்சுவை இயல்பாகவே வரும்னு புரிஞ்சுக்கிட்டேன். நாம சொல்ற விஷயத்தை அப்படியே வேற லெவல்ல எடுத்துட்டுப் போயிடுவார். உதாரணமா, படத்துல `போட்டியின்னு வந்துப்புட்டா' பாடல் அந்தாக்ஷரி போல வரும்னு அவர்கிட்ட சொன்னதும், பாடலையும் போட்டுக் காட்டினேன். `ஏய்ய்.. வேறமாதிரி அசத்துடா’ன்னு முழு உற்சாகமாகிட்டார். அந்தப் பாடலுக்கான அட்மாஸ்பியர், நடிகர்கள் யார் யார் எங்கே உட்காரணும், யார் கையில என்ன வச்சிருக்கணும்னு அவரே பல ஐடியாக்கள் கொடுத்து, சிறப்பாக்கினார். அதைப்போல `ஆடாமல் ஆடுகிறேன்'ல கொரியோகிராப் அவரே பண்ணிக்கிட்டார். சவுக்கை வச்சு அடிக்கச் சொன்னதுன்னு பல ஐடியாக்கள் கொடுத்து, காமெடியைத் தூக்கலாக்கினார்.
அவருடைய அனுபவங்களை எல்லோர்கிட்டேயும் பகிர்ந்துக்குவார். என்னோட ரெண்டாவது படம் `ஓடி ஓடி உழைக்கணும்'லகூட அவரை கமிட் பண்ணியிருந்தேன். ஆனா, அந்தப் படம் வளரல. மாஸ்டர்கூடப் பழகினது இன்னமும் ஞாபகத்துல இனிக்குது. சந்தோஷம் வந்தா நிறைய சந்தோஷப்படுவார். துக்கம் வந்தா அப்படியே உடைஞ்சுபோயிடுவார். அப்படி ஒரு எமோஷனலானவர். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துடுவார்னு நினைச்சேன். அவரோட இழப்பு சினிமாவுக்கும் இழப்புதான்!'' என்கிறார் மணிகண்டன்.