லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

அனைத்து வயதினரையும் அடிமையாக்கும் ஆன்லைன் கேம்ஸ்! - மீளவும்... மீட்கவும்...

ஆன்லைன் கேம்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் கேம்ஸ்

சரணி ராம்; படங்கள்: மதன்சுந்தர்

தொடரும் கொரோனா, அடுத்தடுத்த ஊரடங்கு, பலரின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. குழந்தைகள் மொபைல் பார்க்கிறார்கள் என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்னையாக இருந்தது. ஆனால், இந்த லாக்டெளனில் பெரியவர்களும் `யூனோ', `லூடோ' போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை யாகியுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள், அவற்றிலிருந்து மீளும் வழிகள் குறித்துப் பேசுகிறார் சென்னை யைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னை சேரன்.

அனைத்து வயதினரையும் அடிமையாக்கும் ஆன்லைன் கேம்ஸ்! - மீளவும்... மீட்கவும்...

“அடிமையாக வேண்டும் என்ற எண்ணத் துடன் யாரும் ஆன்லைன் கேம்களை விளை யாட ஆரம்பிப்பதில்லை . சிறிது நேர ஓய்வுக் காக, பொழுதுபோக்குக்காக விளையாடத் தொடங்குவார்கள். ஆன்லைன் விளை யாட்டில் கிடைக்கும் பரிசுகளும், பாராட்டு களும் மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டும். கையிலிருக்கும் செல்பேசியிலேயே அதற்கான வசதி இருக்கும்போது கிடைக்கும் நேரம் எல்லாம் விளையாடத் தொடங்கு வார்கள்.

விளையாடும் நேரம் அதிகரிக்கும்போது பழக்கம், அடிக்‌ஷனாக மாறும். பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளும் ஆன்லைனில் இருக்கின்றன. அவற்றின் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா என்பது தெரி யாது. ஆனால், அதை விளையாடுபவருக்கு, பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற தீவிரமான தூண்டுதல் உண்டாகும். அதில் தோற்றால் மன அழுத்தமும், ஜெயித்தால் தொடர்ந்து ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் சிலருக்கு ஏற்படும்.

பதின்ம வயதினரும்கூட ஆன்லைன் கேம்கள் விளையாடுகின்றனர். பொதுவாக பதின்ம வயதினர் தனிமையை விரும்புவார்கள். இந்த வயதில் மொபைல் கேம்களால் அவர்களுக்குப் படிப்பில் கவனம் குறையத் தொடங்கும். கற்பனை உலகத்திலேயே இருப்பது போன்ற நிலை ஏற்படலாம். மேலும் விளையாட்டில் வரும் ஹீரோக்களாகத் தங்களை எண்ணத் தொடங்கலாம். இதனால் அவர்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை இழந்து விடுவார்கள்.

குழந்தைகள், பதின்ம வயதினர் என்பதைத் தாண்டி, இப்போதெல்லாம் குடும்பமாக இணைந்து ஆளுக்கொரு மொபைலில், பேசிக்கொண்டே ஆன்லைன் கேம்ஸ் விளை யாடுவதைப் பார்க்க முடிகிறது. இதில் உறவு என்பதைத் தாண்டி, அவர்களை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். தோல்வி அடையும்போது குடும்பத்தினர் மீதே கோபம், வெறுப்பு போன்றவை ஏற்படும்” என்கிற நப்பின்னை சேரன், ஆன்லைன் விளையாட்டுகளிலிருந்து மீளும் வழிகளை விளக்கினார்.

“அதிக நேரம் விளையாடினால்தான் அடிக்‌ஷனாக மாறும் என்றில்லை. குறைந்த நேரம் விளையாடினாலும்கூட தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் சிலர் அதில் மூழ்கியிருப்பார்கள். விளையாடி முடித்த பின்பும் கூட விளையாட்டில் கிடைத்த வெற்றி - தோல்வியை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் அடிக்‌ஷன்தான்.

தொடர்ந்து பல மணிநேரம் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடும்போது வேலைகளில் கவனமின்மை, தூக்கமின்மை, பொறுமையின்மை, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற பதற்றம், எரிச்சல் போன்றவை ஏற்படும். மேலும், யோசிக்கும் தன்மையும் குறையும். ஆன்லைன் விளையாட்டால் கண், கழுத்து பாதிப்புகளும் ஏற்படும்.

அனைத்து வயதினரையும் அடிமையாக்கும் ஆன்லைன் கேம்ஸ்! - மீளவும்... மீட்கவும்...

ஆன்லைன் விளையாட்டுகளின் பாதிப்பி லிருந்து ஒருவரை மீட்க வேண்டும் என்றால் முதலில் கணினி மற்றும் போனிலிருந்து சம்பந்தப்பட்டவரை விலக்கி வைக்க வேண்டும். இதனால் அவருக்கு கோபம், எரிச்சல் வரக்கூடும். அந்தச் சூழலில் குடும்பமும், நண்பர்களும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் நேரத்தைச் செலவழிக்க மாற்றுவழிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். யோகா, உடற் பயிற்சிகள், நீச்சல் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றில் அவர்களுடன் சேர்ந்து குடும்ப உறுப்பினர்களும் ஈடுபடலாம். ஆன்லைன் விளையாட்டு விளையாடும் எண்ணம் தோன்றும்போதெல்லாம், இது தவறு என்று சம்பந்தப்பட்ட நபருக்கு தொடர்ந்து அறி வுறுத்தி அவர்களை மீட்க வேண்டும்.

குழந்தைகள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் மூளைக்கு அல்லது உடலுக்கு வேலை தரும் விளையாட்டுகளை ஊக்கப்படுத்துங்கள். அதுவே ஆரோக்கியத்தை நோக்கி அழைத்துச் செல்லும்’’

- அழுத்தமாக அறிவுறுத்து கிறார் நப்பின்னை.