
- ராணி கார்த்திக்
சென்னையின் பொம்மை விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், குழந்தைகளுக்கு ஊறு விளைவிக்கும் பொம்மைகள் ஏராளமாகப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. உயர் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் செல்லும் கடைகளிலேயே இந்த நிலை என்றால், சிறுநகரங்கள், திருவிழாக்கடைகளில் விற்கப்படும் பொம்மைகளின் தரம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பொம்மைக்கடைகளில் சோதனை!
சொந்தக்காரர்களிடம்கூட குழந்தைகளை நம்பி விட முடியாத சூழல் இருக்கும் நம் நாட்டில் சோகம், மகிழ்ச்சி எனக் குழந்தைகள், தங்கள் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்துகொள்வது பொம்மைகளுடன்தான். அப்படி விளையாடுவதற்காக நாம் வாங்கித்தரும் பொம்மைகள் சில நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கே எமனாக மாறிவிடுகின்றன. அவை உரிய பாதுகாப்பு விதிமுறைகள், தர நிர்ணய விதிகள் ஆகியவற்றைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படுவதே இதற்குக் காரணம். `ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை விற்கக் கூடாது’ என 2021, ஜனவரியிலேயே மத்திய அரசு உத்தரவிட்டிருந்தாலும், யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை.
இந்த நிலையில், சென்னையில் இந்த மாதம் மட்டும் விமான நிலையம், ஓ.எம்.ஆர்., ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் 2,658 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஐ.எஸ்.ஐ சான்று ஏன் அவசியம்?
இந்தச் சோதனையில் ஈடுபட்ட (BIS - Bureau of Indian Standards) சென்னை கிளையின் இயக்குநர் பவானியிடம் ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்ற பொம்மைகளுக்கும், பெறாத பொம்மைகளுக்குமான வித்தியாசம் குறித்துக் கேட்டோம். “இயந்திர பொம்மைகளுக்கு 9 தர நிலைகளும் (Quality Standards), எலெக்ட்ரிக் பொம்மைகளுக்கு ஒரு தர நிலையும் உள்ளன. இவற்றில் தேர்ச்சி பெற்றால்தான் அவை ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற முடியும். பொம்மைகளில் கூர்மையான பாகங்கள் இருக்கின்றனவா, அவை குழந்தைகளுக்கு உடலில் காயத்தை ஏற்படுத்துமா, பொம்மை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் குழந்தைகளின் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருக்கின்றனவா, அந்த பொம்மைகளைக் குழந்தைகள் கடிக்கும்போது அந்த ரசாயனங்களால் ஆபத்து நேரிடுமா, மின்னணு விளையாட்டு பொம்மைகள் மூலம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பான பல ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகே சான்றளிக்கப்படும். சான்று பெறாத பொம்மைகளை உற்பத்திசெய்வது, இறக்குமதி செய்வது, விநியோகிப்பது, காட்சிப்படுத்துவது, விற்பனை செய்வது அனைத்துமே குற்றம்தான். மீறும் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்கள் நடவடிக்கைக்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் விற்கப்பட்டாலோ, ஐ.எஸ்.ஐ முத்திரையை போலியாகப் பயன்படுத்துவது தெரிந்தாலோ சென்னை தரமணியிலுள்ள பி.ஐ.எஸ் தெற்கு மண்டல அலுவலகத்தில் நேரிலோ, BIS Care செயலி அல்லது cmbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமோ புகார் தெரிவிக்கலாம்” என்றார்.

கேன்சர் வர வாய்ப்பு உண்டு!
இது தொடர்பாக சில பொம்மை உற்பத்தி யாளர்கள், வியாபாரிகளின் கருத்தை அறிய முயன்றோம். பெயர், புகைப்படம் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய வியாபாரி ஒருவர், “இப்படியான தடை இருப்பது பெரும்பாலான வியாபாரிகளுக்குத் தெரியாது சார். பொம்மைகளை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் பல உள்நாட்டிலேயே இருக்கின்றன. ஆனாலும், நடவடிக்கைகளுக்கு பயந்து ‘Made In China’ என்று போலியாக முத்திரையிடு கிறார்கள். உற்பத்தியைத் தடுத்துவிட்டாலே விற்பனையும் குறைந்துவிடும்” என்றார்.
“தரமற்ற பொம்மைகள்மீது சூரியஒளி படும்போது, அதில் கெமிக்கல் ரியாக்ஷன் நடைபெற அதிக வாய்ப்பிருக்கிறது. அவற்றிலுள்ள பிளாஸ்டிக், ரப்பர் துகள்கள் குழந்தைகளின் வாயினுள் செல்ல நேரிடலாம். இதில் பூசியிருக்கும் நிறங்களில் அடங்கியிருக்கும் லெட் மற்றும் சிந்தடிக் கெமிக்கல்ஸ் அவர்களுக்கு ஃபுட் பாய்சன், வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் அலர்ஜியையும், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். இந்த கெமிக்கல்களால் கேன்சர் அபாயமும் உள்ளது. ‘சாஃப்ட் டாய்ஸ்’ என்று சொல்லப்படும் தரமற்ற டெடி பியர் போன்ற `புஸு புஸு’ பொம்மைகளுடன் விளையாடும்போது, இவற்றிலிருக்கும் சிந்தடிக் நூல் இழைகள் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். இதைவிட ஆபத்தானது ‘டஸ்ட் மைட்’ (Dust Mite) எனப்படும் ஒருவித உண்ணி. இது, மூச்சுக்குழல் சுருங்கி விரிவதில் சிக்கல் முதல் ஆஸ்துமா வரை கொண்டுபோய் விடும். மலிவு விலை பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொம்மைகளில் ஒன்று சேர்க்கும் வகையிலான தனித்தனி பகுதிகளைக்கொண்ட பொம்மைகளும் நிறைய வருகின்றன. இவற்றை, குழந்தைகள் தவறி வாயில் வைக்கும்போது, இதிலிருக்கும் ஏதேனும் ஒரு பகுதி பிரிந்து வாய்க்குள் சென்று தொண்டைக்குழிக்குள் மாட்டி சுவாசத் தடை ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்த விஷயத்தில் வியாபாரிகள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டுமென்றாலும், பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்கிறார் குழந்தைகள்நல மருத்துவர் ஜனனி.

“மத்திய அரசின் பி.ஐ.எஸ் நிறுவனத்துக்கு சென்னை, மதுரையில் மட்டுமே கிளைகள் இருக்கின்றன. இரு அலுவலகங்களையும் சேர்த்து வெறும் 20 பணியாளர்கள்கூட இல்லை. கடந்த ஆண்டு சில ரெய்டுகள், இந்த ஆண்டு தொடக்கத்தில் சில ரெய்டுகளை மட்டுமே அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். மாநில அரசின் உதவியையும் நாடுவதோடு, பொதுமக்களுக்குப் பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினால் மட்டுமே பொம்மைகளால் ஏற்படும் ஆபத்துகளுக்கு முடிவுகட்ட முடியும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
விளையாட்டுக் காரியமில்லை. விரைந்து செய்யுமா இந்திய தர நிர்ணய நிறுவனம்?