தஞ்சாவூர் பெரியகோயில் அருகே உள்ள மேம்பாலம், மருத்துவக் கல்லூரி சாலை மற்றும் ராமநாதன் ரவுண்டானா சாலை ஆகியவற்றை இணைக்கிறது. இந்த மேம்பாலம் முடியும் இடத்தில் மூன்று சாலைகள் சந்திக்கின்றன. மேம்பாலத்தின் வலது புறத்தில் பார்வை மற்றும் செவித்திறன் குறையுடையோர் மேல் நிலைப் பள்ளிகள், ஆதரவற்றோர் பள்ளி, அனைவருக்கும் கல்வித் திட்டம் அலுவலகம் மற்றும் தேர்வுத்துறை அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

குறிப்பாகச் செவித்திறன் மற்றும் பார்வை குறையுடையோருக்கான பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த இடத்தில் அமைந்திருக்கும் சிக்னல் பல ஆண்டுகளாகச் செயல்படவில்லை. மேலும், வேகத்தடையும் அமைக்கப்படவில்லை. அதனால், வாகனங்கள் அதிக அளவில் செல்லும் பகுதியாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சாலையைக் கடப்பதாகவும், இது தொடர்பாகப் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``பல அரசு அலுவலகங்கள், பார்வை மற்றும் செவித்திறன் குறையுடைய பள்ளிகள் உள்ளிட்டவை இந்தப் பகுதியில் அமைந்திருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் ஏராளமான பார்வை, செவித்திறன் குறையுடைய மாணவர்கள் படித்து வருகின்றனர். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி வீட்டுக்குச் சென்று வரும் மாணவர்களும் இருக்கின்றனர். அதே போலப் பார்வை, செவித்திறன் குறையுடைய ஆசிரியர்களும் உள்ளனர்.

சாலையைக் கடந்து பள்ளிக்கு வந்து செல்வதற்குள் தினமும் எந்த வாகனம் மோதும் எனத் தெரியாமல் படபடப்புடன் கடக்க வேண்டியிருக்கிறது. மேம்பால சாலை முக்கியமான இணைப்பு சாலையாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அந்த சாலையைக் கடந்து செல்கின்றன. சாலைகள் சந்திக்கக் கூடிய இடத்தில் உள்ள ரவுண்டானாவில் சிக்னல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பல வருடங்களாகச் செயல்படாமல் இருக்கின்றன. அந்த இடத்தில் வேகத்தடைகளும் இல்லை.
இதனால், அசுர வேகத்தில் வாகனங்கள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதில் சிலர் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. `பீக் ஹவர்' எனச் சொல்லப்படுகிற நேரத்தில் கூட போக்குவரத்து போலீஸார் அந்த இடத்தில் பணியில் நிறுத்தப்படுவதில்லை. இது போன்ற பல காரணங்களால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. பார்வை குறையுடைய பள்ளியில் வேலை பார்க்கும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் பஸ்ஸை விட்டு இறங்கி சாலையைக் கடக்கும் போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதி காயம் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டார்.

பின்னர் ஒரு வாரச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டார். கடந்த வாரம்கூட செவித்திறன் குறையுடைய மாணவன் ஒருவன் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டிருக்கும், கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் அதிலிருந்து தப்பி விட்டான். ஆசிரியர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். எல்லாம் சரியாக இருப்பவர்களே பெரும் இன்னலுக்கு ஆளாகின்ற நிலையில், குறையுடைய எங்களைப் போன்றவர்களால் என்ன செய்ய முடியும்.
இந்த துயரத்திலிருந்து எங்களை மீட்க வேண்டும் எனத் தஞ்சாவூர் எஸ்.பி ரவளிபிரியாவிடம் மனு கொடுத்திருக்கிறோம். அந்த இடத்தில் சிக்னல்கள் சரிசெய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வரவேண்டும். மேலும், வேகத்தடைகள் அமைப்பதுடன் எப்போதும் போக்குவரத்து போலீஸாரை பணியில் அமர்த்த வேண்டும். சிக்னல் செயல்படுத்தப்பட்டாலே ஓரளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும். பல லட்சங்கள் செலவு செய்து சிக்னல்கள் அமைத்து விட்டு அவற்றை ஏன் செயல்படுத்த மறுக்கின்றனர் என்பது எங்களுக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு நாளையும் நாங்கள் நடுக்கத்துடனே கடக்கிறோம். குறையுடையோரான எங்களிடத்தில் இருந்து பார்த்தால்தான் எங்களுடைய அவஸ்தை புரியும். எனவே ஏதேனும் விபரீதம் நிகழ்வதற்குள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
சிக்னல்கள் சரிசெய்யப்பட்டு, வேகத்தடைகள் அமைக்கப்பட்டு விழிச்சவால் மற்றும் செவித்திறன் குறையுடையோரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.