கட்டுரைகள்
Published:Updated:

டீசல் திருட்டு... அபராத மெஷினில் குளறுபடி... வைரலாகும் மறைந்த காவலர் லோகேஷின் ஆடியோ!

மறைந்த காவலர் லோகேஷின் ஆடியோ
பிரீமியம் ஸ்டோரி
News
மறைந்த காவலர் லோகேஷின் ஆடியோ

டி.சி அய்யா வணக்கம், காவல்துறையில் சிலர் என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாமூல் வாங்குவது எனக்குத் தெரியும். நான் மெடிக்கல் லீவ் எடுத்திருக்கிறேன்

லோகேஷ், வயது 39. தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2003-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்து, சமீபத்தில் பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்துவந்த லோகேஷ், கடந்த 5.2.2023 அன்று கழிவறைக்குச் சென்றபோது அங்கேயே மயங்கி விழுந்து, உயிரிழந்தார்.

அவர் மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத சூழலில், உயரதிகாரி ஒருவருக்கு, காவலர் லோகேஷ் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஒன்று வெளியாகி, சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது.

அந்த ஆடியோவில், ``டி.சி அய்யா வணக்கம், காவல்துறையில் சிலர் என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாமூல் வாங்குவது எனக்குத் தெரியும். நான் மெடிக்கல் லீவ் எடுத்திருக்கிறேன். ஆனால், எனக்கு மனரீதியாகச் சிலர் டார்ச்சர் கொடுத்துவருகிறார்கள். இதற்கு மேலும் என்னை டார்ச்சர் செய்தால் நான் செத்து விடுவேன். நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. தவறு செய்தவர்கள் யார் என்று விசாரியுங்கள். முடிந்தால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர்மீது நடவடிக்கை எடுங்கள்.

டீசல் திருட்டு... அபராத மெஷினில் குளறுபடி... வைரலாகும் மறைந்த காவலர் லோகேஷின் ஆடியோ!

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னை 100 லிட்டர் டீசலைத் திருடச் சொன்னார். அதில் 20 லிட்டர் ஏ.சி-க்கும் 80 லிட்டர் இன்ஸ்பெக்டருக்கும் எனப் பங்கு. ஆனால், டீசலைத் திருட மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். உதவி கமிஷனருக்கு மாதம் ரூபாய் ஐந்து லட்சமும், இன்ஸ்பெக்டருக்கு ரூபாய் ஒன்றரை லட்சமும் மாமூலாக வருகிறது. அதைக் காவலர் ஒருவர் வசூல்செய்து கொடுத்துவருகிறார். அபராதம் விதிக்கும் மெஷினில் முறைகேடு செய்கிறார்கள். இந்தத் தகவலை டி.ஜி.பி-யிடமும், கமிஷனரிடமும் நேரில் சொல்வேன்” என்று பல அதிர்ச்சித் தகவல்களைச் சொல்லியிருக்கிறார் காவலர் லோகேஷ்.

இது குறித்து காவலர் லோகேஷின் மனைவி ஷாலினியிடம் பேசினோம். ``நானும் அவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5-ம் தேதி வேலைக்குச் செல்ல அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். கழிவறைக்குச் சென்றவர், அங்கேயே உயிரிழந்துவிட்டார். வேலையில் அவருக்கு டார்ச்சர் என வெளியான ஆடியோ எங்களுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது குறித்து அவர் எங்களிடம் எதையும் சொல்லவில்லை. கோட்டை போக்குவரத்து போலீஸாரும், பெரவள்ளூர் போலீஸாரும் எங்களுக்கு உதவியாகத்தான் இருந்துவருகிறார்கள்” என்றார்.

லோகேஷ்
லோகேஷ்

இந்த ஆடியோ விவகாரம் குறித்து சென்னை போக்குவரத்து பிரிவின் போலீஸ் துணை கமிஷனர் ஹர்ஷ் சிங்கிடம் பேசினோம். ``கடந்த சில மாதங்களுக்கு முன்பே கோட்டை போக்குவரத்து பிரிவிலிருந்து லோகேஷ் பெரவள்ளூர் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுவிட்டார். அவர் உயிரிழந்த பிறகு வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. காவலர் லோகேஷ் மீது சார்ஜ் ஒன்று பெண்டிங்கில் இருக்கிறது. இருப்பினும், காவலர் லோகேஷ் குற்றம்சாட்டியிருக்கும் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். ஆடியோவில் இருப்பதுபோல் அபராதம் வசூலிக்கும் கருவியில் குளறுபடி செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், அது தொடர்பாகவும் விசாரித்து முழு அறிக்கை வெளியிடப்படும்” என்றார்.