Published:Updated:

`வீட்ல சொல்லவே இல்ல!' - 22 வயதில் கொரோனாவுக்குப் பலியான 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்

`எனக்குக் கொரோனா வந்துடுச்சிங்கிறது தெரிஞ்சா வீட்ல எல்லாரும் பதறிப் போயிடுவாங்க’ எனக் கடைசி வரை வீட்டிற்கு விஷயத்தையே சொல்லாமலே இருந்திருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் அவர். நர்சிங்கில் டிப்ளோமா படித்தவருக்கு, திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக வேலை கிடைத்திருக்கிறது. திருப்பூர் மங்கலம் பகுதியில் தங்கியிருந்து, அவினாசிபாளையம் ஆம்புலன்ஸில் டெக்னீசியனாக கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த 4 மாதங்களாகவே ஊருக்குச் செல்லாமல் இருந்தவர், கொரோனா சமயத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பெற்றோர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என ஜூன் 7-ம் தேதி சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு, 9-ம் தேதி திருப்பூர் திரும்பியிருக்கிறார்.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

திருப்பூருக்கு வந்த சில நாள்களிலேயே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்திருக்கிறது. சிகிச்சைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்குச் சென்றவரை, `கொரோனா சோதனை செய்யதுவிட்டு வாருங்கள்’ எனச் சொல்லி மருத்துவர்கள் அனுப்பியிருக்கின்றனர். பரிசோதனை முடிவில் கொரோனா பாசிட்டிவ் என ரிப்போர்ட் வர, மருத்துவ உதவியாளரான அந்த இளைஞர் அதிர்ந்து போயிருக்கிறார். ஜூன் 18-ம் தேதி தனி ஆம்புலன்ஸ் கொரோனா சிகிச்சைக்காக கோவை சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக நல்ல ஆரோக்கியத்துடன் சிகிச்சையில் இருந்தவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. வென்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்திருக்கின்றனர். இருந்தும் சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார்.

``கொரோனாவுக்கெனத் தனியே ஒதுக்கப்பட்ட ஆம்புலன்ஸில் வேலை செய்யாமல் இருந்தாலும், ஒருவித பயத்துடனேயே அவர் இருந்தார். காய்ச்சல் வந்து கொரோனா உறுதி செய்யப்பட்டதும் உடைந்து போய்விட்டார். நாங்க ஒரு கொரோனா கேஸை கோயம்புத்தூர் சி.எஸ்.ஐ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்ய போறப்ப அவரைப் பார்த்துப் பேசினோம்.

கொரோனாவால் உயிரிழந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்
கொரோனாவால் உயிரிழந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்

`நல்லா இருக்கேன்னா. சீக்கிரமா சரியாகி வந்துடுவேன்’னு சொன்னாரு. ரெண்டு நாளைக்கு முன்னாடி நண்பர்களோட வீடியோ கால் எல்லாம் பேசியிருக்காரு. நல்லா இருந்தவருக்கு 23ம் தேதி நைட்டு வென்டிலேட்டர்ல வைக்கிற அளவுக்குப் பிரச்னை தீவிரமாகியிருக்கு. வீட்ல விஷயத்தைச் சொன்னா பயந்துடுவாங்கன்னு, கொரோனா பாசிட்டிவ் ஆனதைக் கூட சொல்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தாரு” என சக ஊழியர்கள் நம்மிடம் கலங்கினர்.

சென்னை:`கொரோனா பரவினால் வழக்கு' -அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ரகசியத் திருமணம்

களத்தில் பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களோ, ``கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மட்டுமே பி.பி.ஐ கிட் உட்பட தரமான உபகரணங்களை வழங்குகின்றனர். சாதாரண 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு எவ்விதக் கொரோனா தடுப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை. ஆம்புலன்ஸில் வருகிறவர்களுக்குக் கொரோனா இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்கு எப்படி தெரியும்?

ஆம்புலன்ஸில் கொரோனா பாதித்தவரே வந்தாலும், அது எங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட ஓர் சூழ்நிலையில்தான் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்களது பணி பாதுகாப்பு தொடர்பாகப் பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம். எதையுமே அவர்கள் கேட்கவில்லை. அந்த அலட்சியம் ஓர் உயிரையே பறித்துவிட்டது” என ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

ஆம்புலன்ஸ் (மாதிரிப் படம்)
ஆம்புலன்ஸ் (மாதிரிப் படம்)

தமிழகத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் கொரோனாவுக்குப் பலியானது இதுவே முதன்முறை ஆகும். கோவையில் கொரோனா பாதித்த 28 வயது இளைஞர் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், தற்போது 22 வயதே ஆன, 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவால் நடந்த முதல் உயிரிழப்பு இதுதான். அதேபோல, திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் பலி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு