Published:Updated:

குரங்கணி காட்டுக்குள் கூகுள் மேப்ஸ் உதவவில்லை... இவர்கள் உதவினார்கள்!

குரங்கணி காட்டுக்குள் கூகுள் மேப்ஸ் உதவவில்லை... இவர்கள் உதவினார்கள்!
குரங்கணி காட்டுக்குள் கூகுள் மேப்ஸ் உதவவில்லை... இவர்கள் உதவினார்கள்!

குரங்கணி காட்டுக்குள் கூகுள் மேப்ஸ் உதவவில்லை... இவர்கள் உதவினார்கள்!

ழங்குடியின மக்களை, புழுவைப்போலவே பார்த்துப் பழகிவிட்டோம். `காட்டுவாசிகள், இவர்களுக்கு என்ன தெரியும்?'  என்ற ஆதிக்க மனப்பான்மையே அவர்களைக் கண்டதும் நம்மிடையே எழும். மது சம்பவமே இதற்கு உதாரணம். வனங்கள், அவர்களின் வாழ்விடம். விலங்குகளுக்கு அடுத்தபடியாக வனத்தை உரிமைகொண்டாடும் தகுதி அவர்களுக்குத்தான் உண்டு. காட்டின் அத்துணை மூலை முடுக்குகளையும் அறிந்து வைத்திருப்பார்கள். மரம் அசையும் சத்தத்தை வைத்தே அனைத்தையும் சொல்வார்கள். ஒரு நகக்கீறலை வைத்து புலி நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பார்கள். குரங்கணி போன்ற காடுகளுக்குள் உங்களுக்கு கூகுள் உதவாது. ஆனால், இவர்கள் காட்டு `கூகுள்' போன்றவர்கள்.

காட்டுத் தீ, காலம் காலமாக வனத்துக்குள் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. `அதோ காட்டுத் தீ!' என்று பார்த்துவிட்டு நாம் நகர்ந்துவிடுகிறோம். உள்ளே பற்றும் வனத்தீ, அரிய வகை மரங்களை, விலங்குகளின் உயிர்களைக் கபளீகரம் செய்துவிட்டே அணையும். மனித உயிர்களும் இப்போது பலியாகியிருப்பதால், நாம் காட்டுத் தீயின் கோரத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறோம். தீ உருவாகாமல் தடுப்பதற்காக வனத்துறையில் தீ தடுப்புக் காவலர்கள் உண்டு. 4, 5 அடி அகலத்துக்குக் கோரைப்புற்களை வெட்டி இடைவெளி ஏற்படுத்துவதுதான் தீ தடுப்புக் காவலர்களின் பணி. யானை ஊருக்குள் வராமல் இருக்க அகழி வெட்டுவது போன்றதுதான்.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடையின் தாக்கத்தால் புற்கள், சருகுகள் காய்ந்து எளிதாகத் தீ பற்றிவிடும் நிலையில் இருக்கும். கோடைக்காலத்தில் முதுமலை, பண்டிப்பூர் வனச் சரணாலயங்கள்கூட காட்டுத்தீக்கு பயந்தே மூடப்பட்டு மனித நடவடிக்கைகள் தடை செய்யப்படுகின்றன. மின்னல் வேகத்தில் பரவும் காட்டுத்தீயை,  தீ தடுப்புக் கோடு கொஞ்சம் கட்டுப்படுத்த உதவும். இதுபோன்ற பணிகளுக்கு ஆதிவாசிகளைத்தான் வனத்துறை நியமிக்கிறது. இவர்களுக்குக் காட்டு வழியும் அத்துப்படி!

காட்டுக்குள் இவர்களை நம்பிச் சென்றால்,  நிச்சயம் நம்மை கைவிட மாட்டார்கள். ஒருமுறை, அகழி அருகே அப்பர்பவானி ஆற்றில் கேரள விவசாயிகள் மோட்டார் வைத்துத் தண்ணீர் திருடுவதாகவும், இதனால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. உண்மை நிலவரம் அறிய, அப்பர்பவானி காட்டுக்குள் இறங்கினோம். எதிரே நிற்பவர்கள்கூட தெரியாத அடர்த்தியான காடு அது. வழிகாட்ட ஓர் ஆதிவாசி இளைஞரும் இருந்தார். காட்டுக்குள் இறங்குவதற்கு முன் கார் ஓட்டுநர், `அண்ணே, நான் இங்கே தனியா இருந்து என்ன செய்யப்போகிறேன்... நானும் உங்களுடன் வருகிறேன்' என்றார். `சரி... வாங்க' என்று அவரையும் கூட்டிக்கொண்டு காட்டுக்குள் இறங்கினேன். அவரோ மிகுந்த பருமனாக இருந்தார்.  `இவரால் நடக்க முடியுமா?' என்று அப்போது நான் யோசிக்கவில்லை. 

காட்டுக்குள் கொஞ்சம் தூரம் இறங்கிச் சென்றுவிட்டாலும் ஆதிவாசி மக்கள் உதவியில்லாமல் மீண்டும் வெளியே வர முடியாது. நாங்கள் போக வேண்டிய இடம் வெகுதொலைவு. பல யானைக் கூட்டங்களைக் கடந்தோம். `சாணம் வாசம் வருது... சாமி இருக்குது... இப்படி போவோம்' என்று பார்த்துப் பார்த்து எங்களைக் கூட்டிச் சென்றார். எங்களுக்கு முன்னால் சென்ற அவரின் கையில் ஒரு அருவாள் மட்டும் பாதுகாப்புக்கு இருந்தது. என்னுடன் வந்த ஓட்டுநரோ, கொஞ்ச தூரம் செல்வதற்குள் நடக்க முடியாமல் சிரமப்படத் தொடங்கினார். ஒருகட்டத்தில், அவருக்கும் `ஏன் வந்தோம்?' என்றாகிவிட்டது. எனக்கும், `ஏன் அவரைக் கூட்டிவந்தோம்?' என்று எரிச்சலானது. அந்தச் சமயத்தில் அந்தப் பழங்குடியின இளைஞர்தான் அவருக்கு ஆறுதலாக இருந்தார். 

காலை 9 மணியளவில் காட்டுக்குள் இறங்கினோம். சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவு நடந்து மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தை அடைவதற்குள் மாலை 3 மணியாகிவிட்டது. அதற்குள் டிரைவர் ஒரு வழியாகியிருந்தார். திரும்பிப் போவதை நினைத்து அவருக்குக் கண்களில் நீரே திரண்டுவிட்டது. திரும்பும் பாதையில் ஒரு சிறிய ஓடை. அதன் எதிர்புறத்தில் 10, 12 யானைகள் அடங்கிய கூட்டம். நாங்களோ எதிர்புறம் இருக்கிறோம். இருட்டுவதற்குள் மேலே ஏறிவிட வேண்டும். மாற்றுப்பாதையைப் பற்றி யோசிக்க முடியாத நிலை. யானைக் கூட்டம் நகர்வதாகத் தெரியவில்லை. சாதுவாக மேய்ந்துகொண்டிருந்தன. இருட்டிவிட்டால் அவ்வளவுதான். டிரைவரும் நானும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தோம். ஆதிவாசி இளைஞர் மட்டும் அவ்வப்போது, ஓடையைக் கடந்து சென்று எட்டிப்பார்த்துவிட்டு வந்தார். யானைக் கூட்டம் ஒரு மணி நேரம் கழித்தே நகர்ந்தது.

கொஞ்சம் தெம்பு வந்தது. மளமளவென மேலே ஏறத் தொடங்கினோம். மேட்டில் ஏற முடியவில்லை. நானும் தடுமாறத் தொடங்கினேன். மடமடவென சென்ற ஆதிவாசி இளைஞர்,  இரு கம்புகளை வெட்டிக்கொண்டு வந்தார். ஆளுக்கொன்றாகக் கையில் தந்தார். சற்று சப்போர்ட்டாக இருந்தது. இருட்டும் தறுவாயில் ரோட்டை எட்டினோம். ஓட்டுநர், `யாப்பா செத்தேன்யா!' என்று அப்படியே ரோட்டில் சாய்ந்தார். `அந்தக் காட்டுப்பயணம் பாதுகாப்பற்றது மட்டுமல்ல, பொறுப்பற்றதும்கூட' என்று எனது உள்மனம் சொன்னது. அப்பர்பவானி போன்ற அடர்த்தியான காட்டுக்குள் சென்றது எனக்கும் அதுதான் முதன்முறை. அந்த டிரைவருக்கும் அதுதான் முதலும் கடைசியுமாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். அன்றோடு ஆர்வக்கோளாறை மூட்டை கட்டிவைத்தேன். அந்த ஆதிவாசி இளைஞர் மட்டும் இல்லையென்றால், அன்றே எங்கள் கதை முடிந்திருக்கும்!

குரங்கணி விஷயத்திலும் ஆதிவாசி மக்கள்தான் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவியிருக்கின்றனர். ஆடைகள் கருகி நிர்வாண நிலையில் கிடந்த பெண்களின் உடல்களை மூட போர்வைகள் கொடுத்து மானம் காத்துள்ளனர். இதுகுறித்துப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவரே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். `குரங்கணி தீ விபத்தில் மாண்டோர் மாண்டுவிட்டனர். மீண்டோர் மீண்டுவிட்டனர். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக தங்களின் உடைகளையும் உணவுப்பொருள்களையும் மீட்புக் குழுவினருக்கும் அங்கு தீயில் சிக்கியவர்களுக்கும் செலவிட்ட அப்பாவி மலைவாழ் மக்களைப் பற்றி எந்த டிவி சேனலும் ஒரு வார்த்தைகூட பேசவோ, அந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவோ மனமற்றுப்போனது. எங்கள் குடும்பம் சார்பாக சாஷ்டாங்க நமஸ்காரங்களையும், அந்த நல் உள்ளங்களுக்கு கோடானுகோடி நன்றிகளையும் இங்கு பதிகிறேன். நிச்சயம் அந்தப் பகுதி மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை இன்னும் சில நாள்களில் செய்ய ஏற்பாடு செய்வோம் என உறுதியளிக்கிறேன்.

நம் பிள்ளைகள் மீது போர்த்திக் கூட்டிவந்த அத்தனை துணிகளும், தூளி கட்டித் தூக்கிவந்த பெட்ஷீட்டுகளும் காட்டிலும் மேட்டிலும் கடுமையான பணியிலும் கஷ்டப்பட்டு அவர்கள் வாங்கி வைத்தவைதானே. அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் இவர்கள் உள்ளே சென்று மீட்புப் பணியை முடுக்கிய பிறகுதான் செய்தி சேனல்கள் குரங்கணி பக்கம் திரும்பியது... அந்த மக்களின் நல்லெண்ணத்துக்கும் அன்புக்கும் ஈடாக நம்மால் ஆனதை இணைந்து செய்வோம். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து சில இளைஞர்களை மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகளும் நலமுடன் திரும்ப உதவிய உள்ளங்களுக்கு நம்மால் ஆன சிறு உதவியேனும் செய்ய வேண்டும்.

குரங்கணி காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, பெரிதும் உதவிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பாராட்டுகள். தேனி, பெரியகுளம் பகுதியிலிருந்து யாரேனும் உண்மையான தொண்டுள்ளம் படைத்தவர்கள் முன்வந்தால், அவர்கள் மூலமாக அனைவரும் சேர்ந்து இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம்' என்று கூறியுள்ளார்.

உண்மையில், பழங்குடியின மக்களின் கள்ளங்கபடம் இல்லாத அன்பை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் தெய்வமென்று! மது சம்பவமும் காட்டுக்குள் நடந்ததுதான். குரங்கணி தீ விபத்தும் வனத்துக்குள் நிகழ்ந்ததுதான். காட்டுக்குள் அவர்கள் நம்மைக் கருணையுடன் நடத்துகிறார்கள். ஆனால்,  நாம் அவர்களை எப்படி நடத்துகிறோம்?

அடுத்த கட்டுரைக்கு