Published:Updated:

``என்ன செய்தார் இந்த கருணாநிதி...ஏன் இப்படியெல்லாம் நடந்தது? - ஒரு 'ஆங்ரி' நிருபரின் பதிவு

``என்ன செய்தார் இந்த கருணாநிதி...ஏன் இப்படியெல்லாம் நடந்தது? - ஒரு 'ஆங்ரி' நிருபரின் பதிவு
News
``என்ன செய்தார் இந்த கருணாநிதி...ஏன் இப்படியெல்லாம் நடந்தது? - ஒரு 'ஆங்ரி' நிருபரின் பதிவு

அந்தக் குழிக்குள் மிகவும் இருட்டாக இருக்கும். அந்த அழகான சந்தனப் பேழைகளை அரித்து பூச்சிகளும், புழுக்களும் உள்ளே புகும். பட்டும், தங்கமும் இணைத்து செய்யப்பட்டிருந்த அந்த படுக்கையின் மீது கிடக்கும் கருணாநிதியின் உடலை அவை உணவாக்கிக் கொள்ளத் தொடங்கும்.

இது ஒரு அம்மணமான பதிவு. 

கோபம் தான். ஆம் நிறையவே கோபம் இருக்கத்தான் செய்தது. முரண்பாடுகளும், விமர்சனங்களும் நிறையவே இருந்தன. மனம் பெரும் முரண்பாட்டில் இருந்ததால், அங்கு நான் கேட்ட அழுகைகளும், கதறல்களும், வேண்டுதல்களும் என்னை ஆச்சர்யப்படுத்தியதே தவிர, எந்தவொரு தாக்கத்தையும் இத்தனை நாள்களில் ஏற்படுத்திவிடவில்லை. அன்று... 7.8.2018 மாலை காவேரி மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்தேன். ``கருணாநிதியின் உடல்நிலையில் பெரும் பின்னடைவு. அவரது முக்கிய உறுப்புகள் எத்தனை சிகிச்சைகள் செய்தும் ஒத்துழைக்க மறுக்கின்றன" என்ற மருத்துவ அறிக்கை அப்போதுதான் வந்திருந்தது. 

``என்ன செய்தார் இந்த கருணாநிதி...ஏன் இப்படியெல்லாம் நடந்தது? - ஒரு 'ஆங்ரி' நிருபரின் பதிவு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``எழுந்து வா...தலைவா" என்கிற கோஷம் விடாமல் கேட்டுக்கொண்டேயிருந்தது. பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்துக்கு இடையே புகுந்து போய்க் கொண்டிருந்தேன். எங்கு பார்த்தாலும் கேமராக்கள். அந்தக் கேமராக்களுக்காக ஒரு பெருங்கூட்டம் அழுதுகொண்டிருந்தது. கேமரா ஆன் ஆனதும்... ``ஐயோ... எங்க தலைவர்... எனக்கு சோறு போட்டவர்..." என்றெல்லாம் கதறி கூப்பாடு போட்டுக் கத்தியவர்கள், கேமரா அணைக்கப்பட்ட அடுத்த நொடி, தேர்ச்சியான நடிகை போல் சேலை முந்தானை எடுத்து முகத்தை துடைத்து, ``ஹேய்...அடுத்த டிவிக்கு தேவிய பேசச் சொல்லு... அவதான் இன்னும் பேசவே இல்லை..." என்று மிக இயல்பாக பேசி நகர்ந்துகொண்டிருந்தனர். சிலர் கேமராமேன்களைத் தொடர்ந்து துரத்தி தங்களை வீடியோ எடுக்கவும், போட்டோ பிடிக்கவும் வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் குடித்துவிட்டு அரற்றிக் கொண்டிருந்தார்கள். 

ஆனால், இது எல்லாவற்றையும் கடந்து ஒரு பெருங்கூட்டம் உண்மையான உணர்ச்சிப் பேரலையில் கதறிக்கொண்டிருந்தது. தங்கள் தலைவனின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருப்பது தாளாமல் கண்ணீர்விட்டுக் கதறி அழுதுகொண்டிருந்தது. கூட்ட நெரிசலில் நகர முடியாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தேன். என் அருகே ஒரு விசும்பல் சத்தம் நிற்காமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. அவர் ஆள் சற்று குள்ளமாக இருந்தார். கறுப்பு நிறம். முகத்தில் அம்மைத் தழும்புகள். அவர் யாரையும், எதையும் பொருட்படுத்தவில்லை... விசும்பி, விசும்பி அழுதுகொண்டேயிருந்தார். 

``ஐயா...தலைவா...எழுந்து வாய்யா... எழுந்து வந்துருய்யா...ஐயா....ஐயா...ஐயா...ஐயா..." என்று நொடி விடாமல் அழுதுகொண்டேயிருந்தார். மெல்லிய கோடாக அவரின் கண்களில் இருந்து நீர் வழிந்துக்கொண்டேயிருந்தது. அவரின் அந்தக் கண்ணீர், அந்த அம்மைக் குழிகளில் ஆங்காங்கு தேங்கிக் கிடந்தன. அதைத் துடைக்கவும் அவர் முனையவில்லை. ஏனோ, அவரைப் பார்த்த அந்த நொடி என்னை ஏதோ செய்தது. 

அவரிடம், ``ண்ணா...எங்கருந்து வர்றீங்க?" என்று கேட்டேன். அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். அந்த விசும்பல் தொடர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால், எனக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. தோளில் ஒரு பை மாட்டியிருந்தார். அது பெண்களின் ஹேண்ட்பேக் மாதிரியான தோற்றத்தில் இருந்தது. போன் அடித்தது. அதிலிருந்து ஒரு சிறிய பட்டன் போனை எடுத்தார். ``தீபா காலிங்" என்று அதில் வந்தது. எடுத்துப் பேசினார்.

``ம்மா... தீபா... நம்ம ஐயா... ஐயா...ஐயா....’ என்று தேம்பினார். அந்த விசும்பலைவிட சற்று அதிகமான சத்தத்தை இந்தத் தேம்பல் ஏற்படுத்தியது. அதிகரித்த கூட்டம் என்னையும், அவரையும் பிரித்தது. அங்கு ஒரு ஓரம் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளில் தட்டுத் தடுமாறி ஏறி அதை உறுதியாகப் பிடித்து இரண்டு பெண் குழந்தைகள் நின்றனர். அவர்களை நோக்கி நகர்ந்தேன். அவர்களோடு பேச்சுக் கொடுத்தேன்.

``என் பேரு ஆன்னி எஃப்ஸிபா. இவ என் அக்கா ஏஞ்சல். எங்களுக்கு கலைஞர் தாத்தாவ ரொம்பவே பிடிக்கும். ஏன்னா... அவரு பெரியவங்களுக்கு மூக்குக் கண்ணாடி கொடுத்திருக்காரு, எங்களுக்கு சத்துணவுல கொண்டக்கடலை, முட்டை எல்லாம் கொடுத்திருக்காரு. அவரு ரொம்ப நல்லவரு. அவரு சாகக் கூடாது. நல்லா இருக்கணும்ன்னு நாங்க தினமும் பிரே பண்ணுவோம். அதா, இன்னிக்கு அவரு பக்கத்துல வந்து பிரே பண்ணலாம்னு எங்கப்பா எங்கள இங்க கூட்டி வந்தாரு" என்று அவசர அவசரமாக சொல்லி முடித்துவிட்டு, அத்தனைப் பெரிய கூட்டத்தின் நிகழ்வுகளைக் கண்களில் மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தனர் ஆன்னியும், ஏஞ்சலும். 

``என்ன செய்தார் இந்த கருணாநிதி...ஏன் இப்படியெல்லாம் நடந்தது? - ஒரு 'ஆங்ரி' நிருபரின் பதிவு

ஆன்னி எஃப்ஸிபா மற்றும் ஏஞ்சல்.

அவர்களின் அப்பா சார்லஸ், ``நாங்க கொளத்தூர் பகுதியிலருந்து வர்றோம். கலைஞர் ஒரு வரலாற்று நாயகர். அவரைப் பத்தி என் பசங்க இனி புத்தகத்துல கண்டிப்பா படிப்பாங்க. அவர் எப்பேர்பட்ட தலைவருங்குறத அவங்கங்களுக்கு உணர்த்தத்தான் இங்க கூட்டி வந்தேன். பொதுவாவே, திராவிடக் குடும்பங்களில் எல்லாக் குழந்தைகளுக்கும் அவரு தாத்தாதான். அப்படித்தான் சொல்லி வளர்ப்பாங்க. என் புள்ளைங்களுக்கும் அப்படித்தான். அவர தங்களுடைய சொந்த தாத்தாவாகத்தான் பார்க்குறாங்க" என்று சொன்னார். அவர் பக்கத்தில் அவரின் மனைவி ரூத், இரண்டு கைகளையும் இணைத்து கண்ணை மூடி வேண்டிக்கொண்டிருந்தார். 

வானம் இருண்டிருந்தது. காற்று பலமாக அடிக்கத் தொடங்கியிருந்தது. காவேரி மருத்துவமனை அருகே இருந்த மேம்பாலத்தின் மீது நான்கு இளைஞர்கள், கைகளில் ஒரு நீளமான பேனரைச் சுருட்டி வைத்திருந்தனர். அவர்கள் நால்வரும், அந்த பேனரை மேம்பாலத்தின் மீதிருந்து, பாய் விரிப்பது போல் தூக்கி விரித்தனர். அடித்தக் காற்றுக்கு அது அப்படியே நெடுந்தூரம் பறந்து மேம்பாலத்தை மறைத்து நின்றது. கருணாநிதியின் இளைமைக் கால கறுப்பு, வெள்ளை படம் ஒன்று அதிலிருந்தது. கைகளை மடக்கி ஆக்ரோஷமான நிலையில் கருணாநிதி அந்தப் படத்தில் இருந்தார். 

``என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே" என்று அதில் எழுதியிருந்தது. மொத்தக் கூட்டமும் தலை நிமிர்ந்து அதைப் பார்த்து பெரும் உணர்ச்சிக்குள்ளானது. ``தலைவாவஆ ஆ ஆ..." என்று அனைவரும் பெருங்குரலெடுத்து கத்தினார். 

மழைத் தூறத் தொடங்கியது. மாலை 5.30 மணி இருக்கும். காவேரி மருத்துவமனை பின்பக்கம், ``ஃப்ளையிங் ஸ்குவாட்" (Flying Squad) ஆம்புலன்ஸ் வந்தது. எனக்கு அப்போதே ஓரளவுக்கு நிலவரம் தெரிந்துவிட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் இதே போலத்தான் ஒரு வண்டி வந்திருந்தது. காவேரி மருத்துவமனை வளாகம் பரபரப்படையத் தொடங்கியது. பக்கவாட்டு சுவரின் மீது நின்றுகொண்டிருந்தேன். 

``கலைஞர் கருணாநிதி இறந்துவிட்டார்" என்ற செய்தி வந்தது. பெரும் கதறல் கேட்கும் என்று நினைத்தேன். ஆனால், காவேரி மருத்துவமனைக்கு வெளியில் ஆச்சர்யமாக, எந்தச் சத்தமும் இல்லை. அதுவரைக் கேட்டுக்கொண்டிருந்த கோஷங்கள் கூட கேட்கவில்லை.  நான் 4-வது மாடியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 2001-ல் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது எனக்கு 10 வயது. அந்த நாள் இன்னும் ஞாபகத்தில் இருந்தது. அதிகாலை நேரம், என் அம்மா என்னை எழுப்பினார். ``தாத்தாவ அரெஸ்ட் பண்ணிக்கொண்டு போறாங்க பாரு... எழுந்து பாரு.." என்று எழுப்பிவிட்டார். டிவியில் வந்த அந்தக் காட்சியைப் பார்த்து அப்படி அழுதேன். அது அந்த நிமிடம் நினைவில் வந்துபோனது. காவேரி மருத்துவமனை கேட்டின் ஒரு ஓரம், கவிஞர் சல்மா தனியாக நின்று நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தார். 

’அந்த 4-வது மாடியில், ஏ.சி அறையில் கடைசி மூச்சை இழுத்து விட்டிருக்கும்போது கருணாநிதி என்ன நினைத்திருப்பார்?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. 94 வருடங்கள் தொடர்ந்து ஓடிய ரத்தம் எப்படி நின்றிருக்கும். விடாமல் துடித்துக்கொண்டிருந்த இதயம் அந்தக் கடைசித் துடிப்பை எப்படி நிகழ்த்தியிருக்கும், என்பது போன்ற கற்பனைகள் எழுந்தன. 

பல கார்கள் அணிவகுக்க அந்த ஆம்புலன்ஸ் கருணாநிதியின் உடலைத் தாங்கியபடி வெளிவந்தது. மிகவும் அமைதியான ஊர்வலமாக சென்று கோபாலபுரம் வீட்டை அது அடைந்தது. அதற்குள் மெரினா இல்லை என்ற செய்தி பரவி... தொண்டர்கள் அத்தனைப் பேரும் அதற்காக குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர். 

``என்ன செய்தார் இந்த கருணாநிதி...ஏன் இப்படியெல்லாம் நடந்தது? - ஒரு 'ஆங்ரி' நிருபரின் பதிவு

கோபாலபுரத்திலிருந்து, சி.ஐ.டி காலனி வீடு. பின்னர், இறுதியாக ராஜாஜி அரங்கத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டது. 

காலை எட்டு மணியளவில் ராஜாஜி அரங்கத்தை அடையும்போதே நல்ல கூட்டம் வரத் தொடங்கிவிட்டிருந்தது. 

தண்ணீர் பாக்கெட்டில் தொடங்கி, தக்காளி, புளி, லெமன் சாதம், பிரியாணி, ஜூஸ், ரோஸ் மில்க் என பல திடீர் கடைகள் முளைத்திருந்தன. பல பெண்கள் அன்னக்கூடையில் சாதத்தை நிரப்பி விற்பனை செய்தனர். பல பொடியன்கள் கைகளில் சாப்பாட்டுப் பொட்டலங்களை 30 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கும் விற்றுக் கொண்டிருந்தனர். எங்கும் மெரினா குறித்த குரல்களே கேட்டுக்கொண்டிருந்தன. நிறைய மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். திருநங்கைகள் வந்திருந்தனர். ஏதேதோ இழி சொற்களால் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் "மாற்றுத் திறனாளிகள்", "திருநங்கைகள்" என அவர்களுக்கான  சுயமரியாதை அடையாளத்தைக் கொடுத்தவர். ஓட்டு அரசியல் கணக்குகளைத் தாண்டி, சமூகத்தின் முண்டு, முடுக்குகளில் முடங்கிக் கிடந்த இது போன்ற எத்தனையோ இனங்களுக்கான சுயமரியாதையை மீட்டுக் கொடுத்தவர். அதற்கான நன்றியை அந்தத் தலைவனுக்கு செலுத்த தங்கள் உடல் கொடுத்த தடையையும் மீறி, நெடுந்தூரம் பயணித்து தங்கள் அன்பு அஞ்சலியை செலுத்த ஒரு பெருங்கூட்டம் வந்திருந்தது.  எங்கெங்கோ இருந்து ஆட்கள் வந்திருந்தனர். இனி இங்கு எந்தத் தலைவருக்கும் நிச்சயம் இப்படி ஒரு கூட்டம் கூடாது. ஃபேஸ்புக் தலைமுறை இப்படி மெனக்கெட்டு ஒரு தலைவருக்காக வருமா? என்ற கேள்வி எழத்தான் செய்தது. 

ராஜாஜி அரங்கில் அந்த நீளமான படிகளுக்கு இடதுபுறம் நின்றுகொண்டிருந்தேன். அது விஐபிக்கள் வெளி செல்லும் வழி. அங்கும் நிறைய தொண்டர்கள் இருக்கவே செய்தனர். அழுக்கடைந்த அந்த ஆரஞ்சு நிற டீ ஷர்ட் போட்டு ஒரு மாற்றுத்திறனாளி அங்கு நின்று கொண்டிருந்தார். அங்கிருந்த போலீஸாரிடம் உள்ளே செல்ல அனுமதிக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் பேசினேன்...

``என் பெயரு அருண் குமார். நேனு ஹைதராபத்லருந்து வொச்சிண்டானு. கலைஞர் மீது நாக்கு சால பிரேமா. மஞ்ச்சி மனுஷா கதா. பெத்த ஸ்டேட்டுக்கு சி.எம். சினிமா செய்வாரு...நாக்கு அவருண்டே சாலா இஷ்டம். கலைஞர்காரு மஞ்ச்சிவாடு." என்று சொன்னவாறே கருணாநிதியின் உடல் இருந்த பக்கம் திரும்பி வணக்கம் வைத்தார். 

``என்ன செய்தார் இந்த கருணாநிதி...ஏன் இப்படியெல்லாம் நடந்தது? - ஒரு 'ஆங்ரி' நிருபரின் பதிவு

சினிமா நடிகர், நடிகைகள் தொடர்ந்து வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் யார் வரும்போதும், இந்தப் பக்கம் ஒரு பெருங்கூட்டம் பரவசமடைந்தது. கத்திக் கூச்சல் போட்டது. செல்ஃபி எடுக்க முயன்றது. அது ஒரு துக்கவிழா என்பதை அவர்கள் யாரும் உணர்ந்ததுபோல் இல்லை. உச்சமாக பிக்பாஸ் புகழ் நித்யா வந்தபோது, அவரைத் துரத்திக் கொண்டு ஒரு பத்து பேர் போட்டோபிடிக்க ஓடினார்கள். 

ராஜாஜி அரங்கில் இரண்டு, மூன்று சமயம் பெரும் உணர்ச்சிகரமான தருணங்கள் நிகழ்ந்தன. பிரதமர் மோடி வந்தபோது பெருங்கூச்சல். ``போ...மோடியே வராத போ....", ``கோ பேக் மோடி...", ``திராவிடத் தலைவன்டா" என்று கூட்டம் பெருங்கூச்சலை எழுப்பியது. அதேபோல், மோடி கருணாநிதியின் கால்களைத் தொட்டு வணங்கியபோது, ``தலைவா......தலைவா....தலைவன்டா..." என ஆக்ரோஷமான குரல்கள் எட்டுத்திக்கும் எதிரொலித்தன. 

``மெரினா கிடைத்துவிட்டது!" அந்த நொடி ராஜாஜி அரங்கத்தில் எழுந்த உணர்ச்சிப் பேரலை, கோஷம், கதறல், கண்ணீர்... அது வரலாற்றின் மிக முக்கிய நிமிடம். குறிப்பாக, கையெடுத்துக் கும்பிட்ட ஸ்டாலின் ஒரு கட்டத்தில் உடைந்து அழுவது... அது கண்டு அதிர்ந்து கனிமொழி ஓடி வந்து அவரின் கைகளைப் பிடிப்பது... அந்த நொடி...கூட்டத்திலிருந்த அத்தனைப் பேரின் கண்களிலும் கண்ணீர் திரண்டிருந்தது. அந்தக் கண்ணீர் அத்தனையும் அங்கு கீழே சிந்தப்பட்டிருந்தால், ராஜாஜி அரங்கமே ஒரு மெரினாவாக மாறியிருக்கும்!

``என்ன செய்தார் இந்த கருணாநிதி...ஏன் இப்படியெல்லாம் நடந்தது? - ஒரு 'ஆங்ரி' நிருபரின் பதிவு

இறுதி ஊர்வலத்துக்கான தயாரிப்புகள் தொடங்கின. ராஜாஜி அரங்கத்தை விட்டு வெளி நடக்கத் தொடங்கினேன். பின்னால் இருந்து யாரோ என்னை இழுத்தார்கள். அருண்குமார்.

``அண்ணா... கலைஞர பார்த்துட்டேன். சாலா சந்தோஷம்..." என்று சொல்லிவிட்டு தன் கால்களை இழுத்து, இழுத்து கூட்டத்தில் நடந்து மறைந்து போனார். 

மூன்றரை மணியளவில் அண்ணா நினைவகத்தினுள் சென்றுவிட்டேன். கொளுத்தும் வெயிலிலும் மெரினா முழுக்க மக்கள் கூட்டம் நிறையத் தொடங்கியிருந்தது. இறுதிகட்ட கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. அரசியல் பிரமுகர்கள் அங்கிருந்த இருக்கைகளை நிறைக்கத் தொடங்கினர். சிலர் மிகவும் சோகமான முகத்தோடு இருந்தார்கள். சிலர் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஊர்வலம் நெருங்கிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்கு முன்பாகவே ஸ்டாலின் உள்ளே வந்துவிட்டார். அவரின் நடை மிகவும் தளர்ந்திருந்தது. கருணாநிதி குடும்பத்தினர் அத்தனைப் பேருமே மிகவும் தளர்ந்துப் போய் தானிருந்தனர். இறுதிச் சடங்குகள் நடக்கத் தொடங்கின. ராணுவ மரியாதை செய்யப்பட்டது. ஸ்டாலினிடம் கருணாநிதிக்குப் போர்த்திய தேசியக் கொடி கொடுக்கப்பட்டது. 

``என்ன செய்தார் இந்த கருணாநிதி...ஏன் இப்படியெல்லாம் நடந்தது? - ஒரு 'ஆங்ரி' நிருபரின் பதிவு

``ஓய்வெடுக்காமல் உழைத்தவன்...இதோ ஓய்வெடுக்கிறான்" என்ற அந்தப் பேழை கருணாநிதியின் உடலைத் தாங்கியபடி மெதுவாக அந்தக் குழிக்குள் இறக்கப்பட்டது. 

எல்லாம் முடிந்தது. 

மெரினாவின் கூட்டம் கலைந்திருந்தது. 

அந்தக் குழிக்குள் மிகவும் இருட்டாக இருக்கும். அந்த அழகான சந்தனப் பேழைகளை அரித்து பூச்சிகளும், புழுக்களும் உள்ளே புகும். பட்டும், தங்கமும் இணைத்து செய்யப்பட்டிருந்த அந்த படுக்கையின் மீது கிடக்கும் கருணாநிதியின் உடலை அவை உணவாக்கிக் கொள்ளத் தொடங்கும். 94 வருடங்கள் இந்த பூமியின் மேல் நடமாடிய அந்த உடல், இனி பூமிக்கடியில் கிடக்கும். சுற்றுலா வருபவர்கள் இனி இந்த நினைவகத்துக்கும் வருவார்கள். இனி கலைஞர் கருணாநிதி என்பது வரலாறு! 

இதையெல்லாம் யோசித்தபடியே வண்டியில் போய்க் கொண்டிருந்தேன். 

மழை வேகமெடுத்துக் கொட்டத் தொடங்கியது. 

கலைஞர் கருணாநிதிக்கு மழை என்றால் ரொம்பவே பிடிக்கும்!