Published:Updated:

கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!

கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!
கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!

டெல்லியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த, தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் - மகாதேவி தம்பதியர். இவர்களுடைய மகளான ஸ்ரீமதி, டெல்லியில் உள்ள வஜ்ரா ஐ.எ.ஏஸ் அகாடமியில், கடந்த 6 மாதங்களாக ஐ.ஏ.எஸ் பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஹாஸ்டல் வசதி இல்லாததால், தோழிகளோடு சேர்ந்து டெல்லி கரோல்பாக் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 27) மாலை 7 மணியளவில் ஸ்ரீமதி அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஸ்ரீமதியின் உடலைக் கைப்பற்றிய கரோல்பாக் போலீஸார், ஆர்.எம்.எல் மருத்துவனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். 

ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை சுமார் 8 மணியளவில் கோயமுத்தூரில் இருந்து விமானம் மூலமாக டெல்லிக்குச் சென்றிருக்கின்றனர். பெற்றோர் ஒப்புதல் அளித்த பின்னர், பிரேத பரிசோதனை செய்து ஸ்ரீமதியின் உடல் அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க இருக்கிறது.

ஸ்ரீமதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 493 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1103 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். படிப்பில் ஆர்வமுடைய ஸ்ரீமதி, ‘தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என அடிக்கடி வீட்டில் சொல்லிக் கொண்டிருப்பாராம். டெல்லி ஐ.ஏ.ஏஸ் அகாடமியில் பயிற்சிக்குச் சென்ற பின்னர், படிப்பதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கிறது எனப் பெற்றோர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் டெல்லியிலிருந்து போன் மூலமாக ஸ்ரீமதி அவருடைய பெற்றோரிடம் பேசியிருக்கிறார். மதியம் 2.30 மணிக்குப் போனில் நன்றாகப் பேசியவர், மாலை தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு, ஸ்ரீமதியின் பெற்றோர் மட்டுமல்லாது, அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள உறவினர் எனப் பலரும் உடைந்து போயிருக்கின்றனர். 

ஸ்ரீமதி என்ன காரணத்திற்காக இறந்தார்?... உண்மையிலேயே அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா!... போன்ற பல்வேறு கோணங்களில், ஸ்ரீமதியின் தோழிகளிடமும், பெற்றோர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் முடிவில் தான் என்ன நடந்தது என்பது தெரியவரும்.