Published:Updated:

`அவர் ஒரு ஹீரோ!’ - `5 ரூபாய்’ மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல்

`அவர் ஒரு ஹீரோ!’ -  `5 ரூபாய்’ மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல்
`அவர் ஒரு ஹீரோ!’ - `5 ரூபாய்’ மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னையில் புகழ்வாய்ந்த 5 ரூபாய் மருத்துவர் என அழைக்கப்படும் ஜெயந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 48 வருடங்களாக ஐந்து ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தவர் மருத்துவர் ஜெயச்சந்திரன். வண்ணாரப்பேட்டையில் மருத்துவர் ஜெயச்சந்திரன் என்றால் பலருக்கும் அடையாளம் தெரிவது கடினம்தான். ஆனால், ஐந்து ரூபாய் டாக்டர் என்றால் அனைவரும் அவரது வீட்டுக்கு வழிகாட்டுவார்கள். அந்த அளவு அந்தப் பகுதியில் பிரபலமானவர் இந்த ஐந்து ரூபாய் டாக்டர். டாக்டர் ஜெயச்சந்திரன் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்துக்கு அருகில் உள்ள கொடைப்பட்டினத்தில் பிறந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் மிகவும் சிரமப்பட்டு தன் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அடுத்து சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்ஸி படித்துள்ளார். இதற்கிடையில் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைக்க, தன் தாய் மாமா உதவியுடன் அந்தக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவரின் நண்பர் கனகவேல் உதவியுடன் மீதி படிப்பையும் முடித்துள்ளார்.

இவரது கிளினிக் 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை தன்னிடம் மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணம் வாங்காமல் இலவசமாகச் சிகிச்சையளித்து வந்துள்ளார். நோயாளிகள் கொடுக்கும் இரண்டு ரூபாயை வாங்கிய இவர், அடுத்து ஐந்து ரூபாய் வாங்கியுள்ளார். அதுவும் தர முடியாதவர்களுக்கு இலவசமாகச் சிகிச்சையளித்துள்ளார். யாரேனும் அதிகமாகப் பணம் வழங்கினால் அதை ஜெயச்சந்திரன் வாங்க மாட்டார். சில பொதுமக்கள் மற்றும் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் இவருக்கு மருந்துகள் போன்ற மற்ற மருத்துவ உபகரணங்கள் வழங்குவார்கள். அதை வைத்தே இத்தனை வருடங்களாக இலவச சேவை செய்து வந்துள்ளார். அவர் கடந்த 19-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் கலந்துகொண்டனர். இந்நிலையில், 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சென்னையில் வாழ்ந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் ஒரு ஹூரோ. தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் நலனுக்காகவே வாழ்ந்தவர் அவர்'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.