Published:Updated:

சென்று வாருங்கள் ஃபெர்னாண்டஸ்

சென்று வாருங்கள் ஃபெர்னாண்டஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சென்று வாருங்கள் ஃபெர்னாண்டஸ்

ஆழ்துயிலில் அமைதி கிடைக்கட்டும்!

தொழிற்சங்கவாதி. சமூகச் சிந்தனையாளர். எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடிய போராளி. இலங்கை தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையே உருவானவர். இப்படிப் பன்முக அடையாளம் கொண்ட தேசியத் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இன்று நம்மிடையே இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய அரசியல் வரலாற்றின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், 88-வது வயதில் கடந்த ஜனவரி 29-ம் தேதி காலமானார். வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள ஆட்சியில் ரயில்வே அமைச்சராகவும், 1998-ல் வாஜ்பாய் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தவர் அவர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள் தமிழக அரசியல் பிரபலங்கள்.

சென்று வாருங்கள் ஃபெர்னாண்டஸ்

தி.மு.க செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், “பரோடா டைனமைட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் சென்னையில் தங்கியிருந்தார். அந்தச் சமயத்தில் அவருடன் நான் அடிக்கடி உரையாடியிருக்கிறேன். சென்னைப் பல்கலைக்கழக கிளப்பில் மதிய உணவு சாப்பிடுவோம். கேரளத்தின் பப்படத்தை ரசத்துடன் சேர்த்து ரசித்துச் சாப்பிடுவார். கோகோகோலா நம் நாட்டுக்கு வருவதற்கு முன்பு, ‘அந்நிய பானங்கள் நம் பாரம்பர்ய பானங்களை அழித்துவிடும்’ என்று அதற்குக் கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார். குர்தா மட்டுமே அணிந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர் சென்னையில் இருந்த காலத்தில் தமிழர்களைப்போல வேட்டி சட்டை அணிந்தார். சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு ரயிலில் புறப்பட்டவரைக் கண்டுபிடித்துக் கைதுசெய்தார்கள். எமெர்ஜென்சி காலகட்டத்துக்குப் பிறகும் கலைஞர் கருணாநிதியுடன் நல்ல நட்புறவில் இருந்தார். ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது ‘அவ்வளவு பெரிய தலைவரை, தேடப்படும் நபரைப்போல இப்படியா கைது செய்வது?’ என்று கண்டித்தார். நல்ல ஆளுமையை இழந்து விட்டோம்” என்றார் வருத்தத்துடன்.

தமிழ் தேசிய இயக்கத் தலைவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளருமான பழ.நெடுமாறன், “1989-ல் இலங்கை வல்வெட்டித்துறையில் இந்திய அமைதிப்படைப் பலரைச் சுட்டுக்கொன்றது. அந்தச் சமயத்தில் தமிழீழத்தில் நான் ரகசியச் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆவணங்களை ஜார்ஜ் ஃபெர்னாண்டஸிடம் கொடுத்தேன். வியட்நாமில் மைலாய் என்னும் இடத்தில் அமெரிக்கப் படை செய்த அட்டூழியத்துடன் அதை ஒப்பிட்டு, ‘இந்தியாவின் மைலாய்’ என்னும் புகைப்படத் தொகுப்பை அவர் கொண்டுவந்தார். இதனால்தான் ஈழத்தமிழர் பிரச்னைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ‘இந்திய அமைதிப்படை திரும்பப்பெறப்பட வேண்டும்’ என்று நெருக்கடியும் ஏற்பட்டது. இதை வலியுறுத்தி மதுரையில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். ராமேஸ்வரத் தில் நடந்த மீனவர் பாதுகாப்பு மாநாட்டிலும் கலந்து கொண்டவர்,  ‘இலங்கையைத் தவிர வேறு எந்த நாடும் மீனவர் களைச் சுடுவது கிடையாது’ என்று கண்டனக் குரல் எழுப்பினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சென்று வாருங்கள் ஃபெர்னாண்டஸ்

‘டெல்லியில் விடுதலைப்புலிகள் பண உதவியுடன் நடத்தும் மாநாட்டில் நீங்கள் பங்கெடுக்க வேண்டாம்’ என்று மத்திய அரசே வலியுறுத்தியபோது, அதை எதிர்த்தார். மாநாட்டுக்கு அரசு அனுமதி தராத சூழலில், இரவோடு இரவாகத் தனது தோட்டத்தில் பந்தல் அமைத்து அந்த மாநாட்டை முன்னின்று நடத்தினார். அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். அப்போது இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லஷ்மண் கதிர்காமர், இந்திய ராணுவத்தின் உதவியைக் கோரினார். ஆனால் ‘இந்தியா மனிதநேய உதவிகளை மட்டுமே செய்யும். எக்காலத்துக்கும் ராணுவத்தை அனுப்பாது’ எனத் திட்டவட்டமாக மறுத்தவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். அவர் பிறப்பால் தமிழர் அல்ல... கர்நாடகத்தின் மங்களுருவைச் சேர்ந்தவர். ஆனால், ஈழத்தமிழர் பிரச்னையில் தமிழர் உணர்வும் அவர் உணர்வும் ஒன்றுதான். 2014-ல் நானும் வைகோவும் அவரைச் சந்தித்தோம். சிரித்தபடி எங்களை வரவேற்றார். நோயின் தாக்கம் அவரைப் பாதித் திருந்தது. எனவே, அவருக்கு எங்களை அடையாளம் தெரிய வில்லை. அவரது இழப்பு தமிழர் களுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

திராவிடர் விடுதலைக்கழகப் பொதுச் செயலாளர் ‘விடுதலை’ இராஜேந்திரன், “அவசர நிலை காலத்தில் சிறையில் இருந்தபோதே, பீகாரில் ஒரு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். சிறையில் இருந்தபடியே பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்திரா அரசு, குறிப்பிட்ட சமூகத்தினரால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்று வெளிப்படையாகச் சொன்னவர்களில் ஒருவர் அவர். எளிமையானவர். தனது துணிகளை, தானே துவைத்துக்கொள்வார். அவசரநிலையின்போது ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு அடைக்கலம் கொடுத்த பெருமை கலைஞர் கருணாநிதியைச் சேரும். மாபெரும் அரசியல் வீரரை நாடு இழந்திருக்கிறது’’ என்றார்.

சென்று வாருங்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்...ஆழ்துயிலில் உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும்!

- ஐஷ்வர்யா