Published:Updated:

``நான் சொன்னதை 20 வருஷம் கழிச்சு நிறைவேத்திட்டான் என் மவன்!" - சிவச்சந்திரன் தந்தை

விகடன் விமர்சனக்குழு

"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவன் தம்பி செத்ததுக்குக் கூட வரல. அந்தளவுக்கு தன் வேலையில் வைராக்கியமா இருந்தான். இப்போதான் லீவு முடிஞ்சு போனான். அவன் சொன்ன மாதிரியே செத்துப்போய்தான் வந்திருக்கிறான்."

``நான் சொன்னதை 20 வருஷம் கழிச்சு நிறைவேத்திட்டான் என் மவன்!" - சிவச்சந்திரன் தந்தை
``நான் சொன்னதை 20 வருஷம் கழிச்சு நிறைவேத்திட்டான் என் மவன்!" - சிவச்சந்திரன் தந்தை

ரு செயலின் மீதான விருப்பம் அதை நோக்கிய வெற்றிக்கு உந்தித்தள்ளுகிறது. விருப்பத்தின் எண்ணங்களையெல்லாம் தாண்டி எப்போதோ மனத்தில் ஆழப் பதிந்திருக்கும் லட்சியம், அச்செயலின்பால் தன்னைச் சரணடைய வைக்கிறது. ஒரு கட்டத்தில் அதற்காகத் தன்னையே தியாகம்செய்யவைக்கிறது. அரியலூர் சிவச்சந்திரன் அப்படித் தன்னை இழந்தவர்தான். காரணம், தன் தேசம். அதன் மீது கொண்டிருந்த தேசப்பற்று! 

புல்வாமா தாக்குதலில் உயிரைத் தியாகம் செய்த வீரர்களில் ஒருவர் சிவச்சந்திரன். அரியலூர் மாவட்டம் உடையார்பள்ளம் தாலுகாவில் கார்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் ராணுவத்தில் சேர வேண்டும் என்று விரும்பினார் சிவச்சந்திரன். வீட்டில் சின்னப் பையன் ஏதோ சொல்கிறான் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், போகப்போக சிவச்சந்திரனின் ராணுவ லட்சியம் அதிகரித்துக்கொண்டே சென்றது. விவரம் புரிந்தால் மாற்றிக்கொள்வான் என்றுதான் பெற்றோர் நினைத்தார்கள். பின்னாளில் அவரின் அம்மா ஒருநாள் கேட்கையில், `பெத்த கடமைக்குத்தான் நீ, நாட்டைக் காப்பற்றும் கடமைக்கு நான்!' என்று கூறியுள்ளார். 

``எங்க வீட்ல மண்ணெண்ணெய் விளக்கு எரியும். நான் எண்ணெய் ஊத்துறேன், அவன் படிச்சிக்கிட்டு இருக்கான். அப்போ, `விளக்குல எண்ணெய் இருக்குதாப்பா?'ன்னு அவனிடம் கேட்கிறேன். `இருக்குப்பா!'ன்னு சொல்றான். நான் சொன்னேன், `எண்ணெய் ஊத்தாட்டி திரி கருகிப் போயிரும். அதுமாதிரிதான் நான் எண்ணெய். நீ திரி. நான் உன்னைப் படிக்க வைப்பேன். நீ படிக்கணும்' என்றேன். உடையார்பாளையம் ஸ்கூல்ல படிச்சான். ஒரு தடவை கூட ஃபெயில் ஆனதில்லை. அப்ப இன்னொன்னு சொன்னேன், `நீ நல்லா படிச்சு பெரியாளாகி, சின்னையா மவன் யாருன்னு யாரும் கேட்கக் கூடாது. சிவச்சந்திரன் அப்பன் யாருன்னுதான் கேட்கணும்' என்றேன். இப்போ வரவங்க எல்லாம், சிவச்சந்திரன் அப்பா யாருன்னுதான் கேக்குறாங்க. நான் சொன்னதை 20 வருஷத்துக்கு அப்புறம் நிறைவேத்திட்டான் என் மவன்" என்று உடைந்து அழுகிறார் சிவச்சந்திரனின் தந்தை சின்னையா. 

``திருச்சி காலேஜ்ல படிச்சவன், அப்புறம் சென்னை பச்சையப்பா காலேஜ்ல படிச்சான். படிக்கும்போது செலவுக்காக எங்களைத் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு மூட்டை தூக்கிச் சம்பாரிச்சான். அவன் ஒரே வார்த்தைதான் சொன்னான். நான் நாட்டுக்காக சாகவும் தயாரா இருக்கேன். அதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்ல. 'நான் இங்க லீவுல இருக்கும்போது ஏதாவது நடந்தால், என்னால பார்க்க முடியும். மத்தபடி நான் செத்தாதான் இங்கே வருவேன்' என்றான். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவன் தம்பி செத்ததுக்குக்கூட வரல. அந்த அளவுக்கு தன் வேலையில் வைராக்கியமா இருந்தான். இப்போதான் லீவு முடிஞ்சு போனான். அவன் சொன்ன மாதிரியே செத்துப்போய்தான் வந்திருக்கிறான். எங்களோட ரெண்டு பிள்ளையையும் பறிகொடுத்துட்டோம். இப்போ எங்களுக்கு கொள்ளி வைக்கக் கூட வாரிசு இல்லை'’ என்று துயரமே உருவமாகத் தன் கவலையைக் கூறினார் சிவச்சந்திரனின் தாய். 

"ராணுவத்துக்குப் பிறகு சிவச்சந்திரனுக்கு சிம்பு மேல் ரொம்ப பிரியம். சிம்புவின் தீவிர ரசிகர். சிம்புவின் எந்தப் படம் வந்தாலும் அந்தப் பட சிம்பு கெட்டப்பில்தான் இருப்பார். அவரை எல்லோரும் சிம்பு சிவா என்றுதான் அழைப்போம். அவரும் அதையே விரும்பினார். ஒருமுறை அவர் சிம்பு, டி.ஆர் ஆகியோருடன் சேர்ந்து சென்னையில் விருந்து சாப்பிட்டுள்ளார்" என்று சிவச்சந்திரனின் விருப்பங்களை அவர் நண்பர்கள் பகிர்ந்தார்கள். 

``பையன் பேரு சிவமுனியன். பையனை எப்படியாவது ஐபிஎஸ் ஆக்கணும்னு அவர் சொல்லிட்டே இருப்பார். அவர் கனவை நிறைவேத்துவேன்" என்றார் சிவச்சந்திரன் மனைவி காந்திமதி.

முதுகலை மற்றும் கல்வியியல் படித்த சிவச்சந்திரன், 2010-ல் ராணுவத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் மனைவி நர்சிங் படித்துள்ளார். அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், அரியலூர் போன்ற சிறிய மாவட்டத்திலிருந்து இவ்வளவு பெரிய தியாகம் செய்தவரின் நினைவாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிவச்சந்திரனின் சிலை நிறுவ வேண்டும் எனவும் சிவச்சந்திரனின் ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.